கடையம், வில்வவனநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் தென்காசி வழித்தடத்தில் கடையம் அருகே நித்யகல்யாணி உடனாய வில்வவனநாதர் கோவில் அமைந்துள்ளது.திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், தென்காசியில் இருந்து 20 கி.மீ தூரத்திலும் உள்ளது.
இறைவன் : வில்வவனநாதர்
இறைவி : நித்ய கல்யாணி
தல தீர்த்தம் : ராம நதி
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : “காணி நிலம் வேண்டும் பராசக்தி..’ என்று பாரதியார் வேண்டிய சக்தியாக, இந்த ஆலயத்தில் அருளும் நித்யகல்யாணி அம்மன் திகழ்கிறார். சிவபெருமான், பிரம்மதேவனுக்கு வில்வ பழத்தை வழங்கினார். அதை மூன்றாக உடைத்த பிரம்மன், ஒரு பாகத்தை கயிலாய மலையிலும், மற்றொரு பாகத்தை மேரு மலையிலும், இன்னொரு பாகத்தை துவாத சாந்த வனத்திலும் நட்டார். மூன்றாவது பகுதியை பிரம்மன் நட்ட, துவாத சாந்த வனத்தில்தான், வில்வவனநாதர் கோவில் இருக்கிறது. இங்குள்ள வில்வ மரத்தில் எப்போதாவதுதான் காய் காய்க்கும். அதை உடைத்துப் பார்த்தால், அதன் உள்ளே சிவலிங்க பாணம் போன்று விதை இருப்பதை காணலாம் என்கிறார்கள்.
இங்குள்ள பீடத்தை தரணி பீடம் என்கிறார்கள். இத்தலத்து அம்பாள் மிகுந்த உக்கிர தேவதையாக கிழக்கு நோக்கிய சன்னதியில் இருந்தாள். பூஜை செய்வதில் சிறு கோளாறு ஏற்பட்டாலும் பூஜைக்குச் சென்ற அர்ச்சகர்கள் இறந்து விடுவார்கள். இதனால், கோயில் பக்கமே யாரும் செல்ல அஞ்சினர். பிற்காலத்தில், பல யோசனைகளுக்குப் பிறகு தெற்கு நோக்கியிருந்த ஒரு சன்னதியில் அம்பாள் சிலை வைக்கப்பட்டது. அம்பாளின் சக்தி 16 கலைகளாக சிலைக்குள் அடக்கப்படுமாம். இதில் 15 கலைகளைப் பிரித்து ஒரு பீடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டது.
தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட ஒரு சந்நதியில் அம்மை பிரதிஷ்டிக்கப்பட்டு, அம்மையிடம் இருந்த பதினாறு கலைகளில், பதினைந்து கலைகளைப் பிரித்து மற்ற ஒரு பீடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டதாம். இப்படி செய்யப்பட்ட பீடமே தரணி பீடம் என்று அழைக்கப்படுகிறது. பதினாறு கலைகளுள் ஒரு கலையுடன் சாந்த தேவியாக கிழக்கு நோக்கி மறு பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னரே அம்மைக்கு எளிதாக பூஜைகள் நடைபெறத் துவங்கின. இங்கே நித்ய கல்யாணி அம்மையானவள் துர்கையாகவும், லட்சுமியாகவும், சரஸ்வதியாகவும் இருந்து அருட்பாலிப்பதாக ஐதீகம். இங்கு வில்வ வனத்தில் ஈசன் சுயம்புவாகத் தோன்றியதால் அவர் வில்வவன நாதர் எனப்பட்டார். இந்த ஆலயத்தின் கோவில் கதவில், ராமரின் தந்தையான தசரதனால், சிரவணனன் கொல்லப்பட்ட காட்சிகள் சிற்பகமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் ராமாயணத்தோடு தொடர்புடைய நிறைய சிற்பங்களும் காணப்படுகின்றன.
சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்களை அழிப்பதற்காக உமாதேவி இப்பூமியில் அவதரித்து அவர்களை சம்காரம் செய்தருளினாள். இதனால் அம்மையின் பொன்மேனி கருமேனியாகி விட, இந்த துவாத சாந்த வனத்தில் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தாள். தேவியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமானும் அவர் முன் தோன்றி அம்மையின் கரிய மேனியை பொன் நிற மேனியாக்கி, நித்ய கல்யாணியாக இருக்கும்படி வரம் அளித்து ஆட்கொண்டருளினார். பிற்காலத்தில் கிழக்கு நோக்கிய சந்நதியில் இருந்த இந்த நித்யகல்யாணி அம்மை மிகுந்த உக்கிர தேவதையாக இருந்தாளாம். இவளுக்கு பூஜை செய்வதென்றால், கடும் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டி இருந்ததாம். இதில் சிறு தவறு நிகழ்ந்தாலும் பூஜைக்குச் சென்ற அர்ச்சகர்கள் தண்டனைக்கு ஆளாகிவிடுவார்களாம். இதனால் கோயில் பக்கம் செல்லவே அனைவரும் அஞ்சினார்களாம்.
காபிலோ புராணத்தில் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. தேவர்களுக்கும் கம்பாசுரன் என்பவனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தின் போது, தேவேந்திரனுக்கு உதவியாக அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜா சென்றார். அசுரர்கள் பலரைக் கொன்றார். இதனால் தனக்கு தோஷம் ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதிய அவர் அகத்தியரால் உருவாக்கப்பட்ட தத்துவசாரா நதியில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார்.அந்த நதிக்கரையில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த வில்வவனநாதரை வணங்கினார்.அவரது அருளால், ஸ்ரீமன் நாராயணனே அவருக்கு புத்திரராகப் பிறந்தார். அயோத்தியில் ராமராஜ்யம் நன்றாக இருப்பதை கண்டு பொறமை கொண்ட சம்புகன், அங்கே அகால மரணம் ஏற்பட வேண்டும் என இறைவனை வேண்டி தவம் செய்தான். அவனை ராமபிரான் கொன்றுவிட்டார். அந்த தோஷம் நீங்குவதற்காக அவர் தத்துவசாரா நதியில் நீராடி, வில்வவனநாதரையும், அவரது தேவியான நித்ய கல்யாணி அம்பாளையும் வணங்கினார். ராமபிரான் நீராடிய பிறகு, இந்த நதிக்கு "ராம நதி' என்ற பெயர் ஏற்பட்டது. இப்போதும், இந்தப் பெயரிலேயே இந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது
இங்கு ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் பல இங்குள்ளன. ஒருமுறை, தசரதர் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, சிரவணன் என்ற சிறுவன் கண்ணிழந்த தன் பெற்றோருக்காக காட்டிலுள்ள ஒரு சுனையில் தண்ணீர் எடுக்க வந்தான்.சுனையில் தண்ணீர் சப்தம் கேட்ட தசரதர், ஏதோ மிருகம் தான் தண்ணீர் குடிக்கிறது என தவறாக நினைத்து, ஒரு அம்பை அந்த திசையை நோக்கி எய்தார்.அவனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட தசரதரிடம், "எங்களைப் போலவே நீயும் புத்திர சோகத்தால் இறப்பாய்,'' என்று சாபமிட்டு மடிந்தனர். இந்த சம்பவமே இங்குள்ள வனத்தில் நிகழ்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.இக்கோயில் கதவில் சிரவணன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளது.மகாகவி பாரதியார் இக்கோயில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் "காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்ற புகழ் பெற்ற பாடலை எழுதினார்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை, திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, கடையம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை