திருமயம், சத்தியகிரீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : சத்தியகிரீஸ்வரர்
இறைவி : வேணுவனேஸ்வரி
தல விருட்சம் : மூங்கில்மரம்
தல தீர்த்தம் : சந்திரபுஷ்கரணி
தல சிறப்புகள் : தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில், சத்திய தேவதை மான் உருக்கொண்டு இங்கு ஓடி ஒளிந்து கொண்டு பெருமாளை வணங்கிவந்தாளாம். அப்பொழுது இந்த இடம் வேணுவனமாக, அதாவது மூங்கில் காடாக இருந்திருக்கிறது. அதனால் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் வேணுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள். சத்தியகிரீஸ்வரர் அழகிய இலிங்க ரூபமாகக் காட்சி அளிக்கிறார். சத்திய மகரிஷி பூஜை செய்த தலம். மதுரைக் கோயிலைப் போலவே சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் கிழக்கு திசை நோக்கியே இருக்கிறது. இந்த சிவாலயத்தை, தனியே சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒருசேர மலையைச் சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் செய்தல் முடியும்.
கோவில் அமைப்பு : குன்றின் செங்குத்தான தென்முகச் சரிவில் சத்தியகிரீஸ்வரருக்கும், திருமெய்யருக்கும் குடைவரை குகைக்கோயில்கள் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று அறுபதுதடி தூரத்தில் அமைந்துள்ளது. இதன் காலம் 7ஆம் நூற்றாண்டாய் இருக்கலாம் என்றும், குடுமியான்மலை மற்றும் திருக்கோகர்ணம் குடைவரைகளின் காலத்தையொட்டிக் குடையப்பட்டிருக்கலாம் என்றும் வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.
சத்தியகிரீஸ்வரர் குடைவரைக் கோவிலில் முகப்பு, முகமண்டபம் மற்றும் கருவறை உள்ளன. பிற்காலத்து இணைப்பாகத் தூண்களுடன் கூடிய மண்டபங்கள், பரிவார தேவதைகளுக்கான கருவறைகள் மற்றும் இராஜகோபுரம் ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சத்தியகிரீஸ்வரர் கோவில் இராஜகோபுரம் பிற்காலத்துப் 13ஆம் நூற்றாண்டு பாண்டியர்களின் கலைப்பாணியாகும். கோபுரத்தையொட்டி இடதுபுறம் விநாயகர் சன்னதியைக் காணலாம். முன்மண்டபத்தின் கிழக்கு நோக்கிய சன்னதியில் பானு உமாபதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இதையடுத்து அர்த்தமண்டபம் மற்றும் சத்யபுஷ்கரணி எனும் கோவில் குளம் அமைந்துள்ளது. விநாயகர், துர்க்கை, கஜலக்ஷ்மி, முருகன் ஆகிய தெய்வங்களுக்கு மண்டபத்தின் மேற்குப்பக்கம் சன்னதிகள் உள்ளன. மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் இராஜராஜேஸ்வரி அம்மன், பைரவர் ஆகியோருக்கு சன்னதிகளும், கருவறையை ஒட்டி அர்த்தமண்டபங்களும் உள்ளன. நவக்கிரகங்களுக்கான சன்னதியும் இங்கு உள்ளது. இதுமட்டுமின்றிக் கொடிமரம் மற்றும் நந்தி, சூரிய-சந்திரர் திருமேனிகளையும் இங்குக் காணலாம். விஜயநகர மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த இந்தச் சன்னதிகளின் தொகுப்புக் கீழக்கோவில் என்றறியப்படுகிறது. இம்மண்டபத்தின் தரையில் பல கல்வெட்டுகளைக் காணலாம்.
இதையொட்டி அமைந்துள்ள மற்றொரு மண்டபத்தை அடையப் படிக்கட்டுகள் உள்ளன. இம்மண்டபத்தில் அம்பாள் வேணுவனேஸ்வரி கிழக்குப் பார்த்த தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறையை ஒட்டி அமைந்துள்ள அர்த்தமண்டபத்தை இரண்டு துவாரபாலகர்கள் காவல்புரிகிறார்கள். முன்மண்டபத்தில் அமைந்த தூண்களில் விளக்கு நாச்சியார்கள் என்னும் விளக்கேந்திய பெண்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் தெற்குப் பிரகாரத்தில் வெண்கலத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மண்டபத்தின் மேற்குச் சுவரையொட்டி, சற்று மேலே, சத்தியகிரீஸ்வரருக்குக் குடைவரை அமைந்துள்ளது. குடைவரையை ஒட்டி பிற்கால கட்டுமானமாகச் செவ்வக வடிவ அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. அர்த்தமண்டப பொதிகை மற்றும் உத்திரத்தைப் பருத்த, நான்முகக் குட்டைத் தூண்களும், தெற்கில் இரண்டும், வடக்கில் நான்குமாய் அமைந்த அரைத்தூண்களும் தாங்குகின்றன. அர்த்தமண்டபத்தில் தாய்ப்பாறையில் செதுக்கிய நந்தி இலிங்கத்தைப் பார்த்தபடி அமர்ந்துள்ளது. கருவறைக்கு எதிரில் அர்த்தமண்டபத்தில், நிலத்திலிருந்து மேல்வரை நிற்பது போல் உள்ள முற்காலத்தைய லிங்கோத்பவரின் மாபெரும் சிற்பம் கண்களைவிட்டு அகலாது. விநாயகர் திருமேனியும் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறது. இக்கருவறைக்கு அர்த்தமண்டபத்தின் பக்கவாட்டில் அமைந்த நுழைவாயில் வழியாகச் செல்லலாம். அர்த்தமண்டப நுழைவாயிலில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இரண்டு துவாரபாலகர்கள் காவல் புரிகிறார்கள். இவர்கள் சிவனுடைய ஆயுதங்களைத் தாங்கிய சிவ-துவாரபாலகர்கள். முத்தரையர்கள் சிற்பப்பாணியில் செதுக்கப்பட்டுள்ள இரண்டு துவாரபாலகர்களும் குன்னாண்டார் கோவில் துவாரபாலகர்களை நினைவுபடுத்துகிறார்கள். வலதுபுற துவாரபாலகர் திரிசூலதேவர் ஆவார். இவர் மேடையில் வலது காலை ஊன்றியும் இடது காலை ஸ்வஸ்திக வடிவில் தூக்கியுள்ளார். தலையில் ஜடாபாரம், இடையில் கச்சை மற்றும் இடுப்புப் பட்டை அணிந்துள்ளார். இடுப்புப் பட்டை நடுவில் ஒரு கிளிப்புடன் இணைக்கப்பட்டு இடுப்பு ஆடையின் திரண்ட முடிச்சு இடதுபுறம் தொடைவழியே தொங்குகிறது. கனத்த இடுப்பு ஆபரணங்கள், உபவீதமாக யஞ்யோபவிதம், உதரபந்தம், சரப்பளி, கைவளை, தோள்வளை, பத்ரகுண்டலம், வலது கை விரலில் மோதிரம் எல்லாம் அணிந்துள்ளார். இவருக்குப் பின்னால் தோள்களுக்கு மேல் சூலம் காட்டப்பட்டுள்ளது. இடதுபுறம் ஊன்றிய பாம்பு சுற்றிய தடியை இவரது வலது கை பற்றியுள்ளது. இடதுகை கஜமுத்திரை காட்டியபடி இடப்புறம் நீண்டுள்ளது. கம்பீரமாக முறுக்கிய மீசை, கனத்த புருவங்களுடன் தோன்றும் இவர் புன்னகையும் காட்டுகிறார்.
இடதுபுற துவாரபாலகர் மழுவடியார் ஆவார். இவர் இடப்புற கோட்டத்தின் மேடையில் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றியுள்ளார். தலையின் நடுவில் மழுவுடன் அமைந்த ஜடாபாரம், வலது செவியில் பத்ரகுண்டலம், இடதுசெவியில் பூட்டுக்குண்டலம், கழுத்தில் கல்பதித்த சரப்பளி, உபவீதமாக மணியுடன் கூடிய யஞ்யோபவிதம், உதரபந்தம்,கைவளை, தோள்வளை, வலது கை விரலில் மோதிரம் எல்லாம் அணிந்துள்ளார். இடையில் ஆடை கற்றையாய் சுருக்கிஇடுப்புப் பட்டையுடன் இணைக்கப்பட்ட முடிச்சு இடதுபுறம் தொடைவழியே தொங்குகிறது. இடது கை இடைக்கட்டின்மேலும், வலது கை இறைவனைத் துதித்தவாறும் உள்ளன.
பௌர்ணமி, அமாவாசை, பிரதோசம், தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும். இத்தலத்தில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் செய்து வேணுவனேஸ்வரி அம்பாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. தவிர திருமண பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வணங்கினால் நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும். வளையல், பொம்மை ஆகியவற்றை உபயம் செய்து வழிபடுகிறார்கள்.
காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை , திருமயம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை