புதுக்கோட்டை, சாந்தநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இறைவன் : சாந்தநாதர்
இறைவி : வேதநாயகி
தல தீர்த்தம் : பல்லவன் குளம்
தல சிறப்புகள் : மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். ‘குலோத்துங்க சோழீஸ்வரம்’ என பெயர் பெற்ற இக்கோயில், பிற்காலத்தில் ‘சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில்’ என மாறியது. இப்போது ‘சாந்தநாத சுவாமி’ என வழங்கப்படுகிறது.
கோவில் அமைப்பு : இக்கோயில் கி.பி.1071-1123இல் ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் சன்னதியின் மேல் விதானத்தில் காணப்படுகின்ற கல்வெட்டில் இக்கோயில் குலோத்துங்க சோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இக்கோயில் சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில் என்றழைக்கப்பட்டது.திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சூரியன், சந்திரன், லட்சுமி, சரஸ்வதி, கன்னி மூல கணபதி, வள்ளிதெய்வானையுடன் முருகர், சரபேஸ்வரர், ஸ்வர்ன ஆகர்ஷண பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோயிலை ஒட்டியுள்ள பல்லவன் குளத்தின் தென்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயர் என இரண்டு விக்ரஹங்கள் உள்ளன. தொடர்ந்து 12 சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தினால் நினைத்தது நிறைவேறும். வடைமாலை சாத்தி வழிபடுவோருக்கு சனி தோஷம் விலகும். பதினோராம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய சிவன் கோயில் இது.கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கும் அம்பிகை ‘வேதநாயகி’ என்னும் பெயரில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கல்விக்கடவுளாக திகழும் இந்த அம்மனை மாணவர்கள் வியாழக்கிழமை வழிபடுவது சிறப்பு.
காசி விஸ்வநாதர் விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர் பர்வதவர்த்தினிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள பல்லவன் குளக்கரையில் அமாவாசையன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபமேற்றி வழிபட்டால் பிதுர் தோஷம், முன்வினை பாவம் தீரும். கோயிலை அடுத்துள்ள பல்லவன் குளம் காசியில் பாயும் கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனடிப்படையில் இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணியபலன் கிடைக்கும். பிரகாரத்திலுள்ள துர்க்கை சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் விளக்கேற்றி குங்கும அர்ச்சனை செய்ய திருமணத்தடை நீங்கும். இங்குள்ள சர்க்கரை விநாயகருக்கு பக்தர்கள் தங்களின் கைகளால் சர்க்கரை அபிேஷகம் செய்ய கடன் பிரச்னை தீரும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூசணி தீபம் ஏற்ற கிரக தோஷம் நீங்கும். அறுபத்து மூவர் சன்னதியில் சிவன் ‘காட்சி கொடுத்த நாயனார்’ என்னும் பெயரில் ரிஷபத்தின் மீது காட்சியளிக்கிறார்.
ஆனி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம், மாசி வளர்பிறை திரயோதசி திதியன்று மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை