திருவரங்குளம், அரங்குள நாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி சாலையில் திருவரங்குளம் அங்கே இறங்கியவுடன் நடந்து செல்லும் தூரத்தில் கோவில் உள்ளது.
இறைவன் : அரங்குள நாதர், ஹரிதீர்த்தேசுவரர்
இறைவி : பிரகாதாம்பாள்
தல விருட்சம் : பொற்பனை
தல சிறப்புகள் : இங்குள்ள திருச்சிற்றம்பல உடையார் காசி விசுவநாதருக்கு இணையானவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபட்டால் அவரை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். பூர நட்சத்திரம் உடையவர்கள் கல்யாணம் ஆகாதவர்களாக இருந்தால் அவர்கள் இக்கோவிலை வழிபட்டால் உடனே பலன் அடையாலம்.
கோவில் அமைப்பு : இக்கோயிலின் ராஜ கோபுரம் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். திருச்சுற்றில் உள்ள தட்சிணாமூர்த்தி வீணையுடன் காணப்படுகிறார். அம்மன் தனி சன்னதியில் உள்ளார்.மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சூரியன், நால்வர், வீரபத்திரர், சப்தமாதர், விநாயகர், 63 நாயன்மார், கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சரஸ்வதி, ஜேஷ்டாதேவி, கஜலட்சுமி, சுப்பிரமணியர், நடராஜர், சிற்றம்பலம் உடையார், சந்திரன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக பலிபீடம், நந்தி, கொடி மரம் ஆகியவை உள்ளன. அம்மன் சன்னதி கருவறைக்கு முன்பாக வலப்புறம் விநாயகர் உள்ளார். அடுத்து பள்ளியறை உள்ளது. இரு புறமும் துவார சக்திகள் உள்ளனர்.
தல வரலாறு : 2000ம் வருடங்களுக்கு முன் கரிகால சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில். இக்கோவிலில் ஒரு குளம் உள்ளது அக்குளத்து மட்டத்துக்கு லிங்கம் காணப்படவதால் அரங்குலநாதர்/ஹரதேஸ்வரர் என்று பெயர் பெற்றது. அந்த சுவாமியின் பெயர் மருவி திருவரங்குளம் என்று ஊரின் காரண பெயராக அமைந்தது. அம்பாளுக்கு இது பூர நட்சத்திர கோவில். இந்த கோவில் ராஜாக்கள் வேட்டையாடி வந்த போது பனை மரம் இருந்தது. இந்த பழங்கள் தங்க பழமாக காட்சி அளித்தது. அந்த பழத்தின் பெயர் பொற்பனை. அங்கு இருக்கும் விநாயகர் பெயர் பொற்பனை விநாயகர் என்று பெயர். இங்கு இருந்து 3 மைல் தொலைவில் முனிஸ்வரர் கோவில் உள்ளது. இந்த முனீஸ்வரர் பெயர் பொற்பனை முனீஸ்வரர். இந்த முனீஸ்வரர் புதுகோட்டை மாவட்டம் காவல் தெய்வம். மூலாதார சக்தி உடைய அம்மனாக கருதப்படுகிறது. வடநாட்டு செட்டியார் என்ற பிரிவினர்கள் இக்கோவிலுள்ள தானியத்தை கண்டுபிடித்து ராஜாக்களிடம் ஒப்படைத்தனர். அம்பாளே செட்டியாரின் குழந்தையாய் பிறந்து அவர்களின் குழந்தை பாக்கியத்தை தீர்த்தாள் மறுபடியும் இறைவனிடம் சேர்ந்தார்.
இவ்வூரைச் சேர்ந்த பெரியநாயகி என்பவர் மூலவர் மீது அதிக பற்று கொண்டவராக இருந்ததாகவும், பெற்றோருடன் இக்கோயிலுக்கு வந்தபோது இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டதாகவும், அவருக்குப் பிரகாதாம்பாள் என்று பெயர் சூட்டியதாகக் கூறுவர். இப்பகுதியில் வசித்த வேடன் உணவு தேடச்சென்றபோது தன் மனைவியைக் காணாமல் போனாள். அங்கு வந்த முனிவர் அவரைக் கொண்டு வந்து வேடனிடம் சேர்த்துவிட்டு அவருடைய வறுமை நிலை அறிந்து ஒரு பனை மரத்தை உண்டாக்கி அதிலிருந்து பொற்பனம் பழம் வரும் வகையில் செய்தார். அதனை வாங்கிய வணிகரோ அதற்கு குறைந்த விலையே தந்தார். அதன் மதிப்பு வேடனுக்குத் தெரிய வரவே, வணிகரிடம் தனக்குரிய பங்கினைத் தர வேண்டினார். இந்தப் பிரச்னை மன்னரின் முன்பு கொண்டு செல்லப்பட்டது. மன்னரின் ஆணைப்படி அந்த மரத்தைப் பார்க்க அரண்மனையாட்கள் வந்தபோது அங்கு லிங்கத் திருமேனியைக் காணமுடிந்தது. மன்னன் அவ்விடத்தில் ஒரு கோயிலைக் கட்டினான். வணிகரும் இறைவனின் பெருமையை அறிந்து தன்னையும் அப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டார்.
சோழ நாட்டில் வாழ்ந்த கைவல்யன் எனும் அந்தணன் தரும சிந்தனை மிக்கவன். சுமதி என்ற பெண்ணை மணந்து இல்லறம் நடத்தி வந்த கைவல்யன், நற்குணங்களின் இருப்பிடம். சகல சாஸ்திரங்களையும் நீக்கமறக் கற்றவன். அவனுக்கு புத்திரப்பேறு இல்லாததால் மனம் வருந்தினான். ஒரு முறை அவன் தன் மனைவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். வழியில் அரன் குளம் என்ற இடத்தை அடைந்த அந்த தம்பதியர், அங்குள்ள ஹரதீர்த்தத்தில் நீராடினர். பிறகு கைவல்யன், சிவபெருமானை தியானித்து தவம் புரிந்தான். கடுமையான அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், நேரில் காட்சி தந்தருளி அவன் வேண்டிய வண்ணம் புத்திரப் பாக்கியம் உண்டாக அருள்பாலித்தார். இறைவன் திருவருளால் பிறந்த ஆண் குழந்தைக்கு நிம்பாரணியன் எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தான். நிம்பாரணியனைத் தக்கமுறையில் சீராட்டி வளர்த்த கைவல்யன், உரிய பருவத்தில் அவனுக்கு மணம் முடிக்க நினைத்தான். அதற்காக கலாதர் என்பவரின் மகளான சுயம்பிரயைத் திருமணம் செய்து வைத்தான். நிம்பாரணியனும் சுயம்பிரயையும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி இன்புற்று வாழ்ந்தனர். கைவல்யனைப் போலவே, நிம்பாரணியனுக்கும் நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு கிடைக்கவில்லை.
இதையடுத்து தந்தையின் அறிவுரைப்படி, நிம்பாரணியன் ஹரத் தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை நினைத்து தவம் இயற்றினான். அவனது கடுந்தவம் கண்டு மகிழ்ந்த ஈசன், அரங்குளத்துக் கரையில் இருந்த வேப்பமரத்தின் அடியில் லிங்க வடிவாய் தோன்றினார். நிம்பாரணியன் அகமகிழ்ந்தான். ‘உன் குலத்தைக் கரையேற்றும் சுப குணம் உள்ளவளாகவும், அழகுடையவளாகவும், மானசீக புத்திரியாகவும் எட்டு வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தையை உனக்களித்து அருள்புரிவோம். அந்தப் பெண்ணை உரிய காலத்தில் உரியவருக்கு திருமணம் செய்து வைத்தால், புத்திரப் பாக்கியத்தைக் காட்டிலும் அதிகமான பலன் கிடைக்கும்’ என்றார் சிவபெருமான்.
அது கேட்டு மகிழ்ந்த நிம்பாரணியன், மீண்டும் ஈசனை பணிந்து, ‘இறைவா! தாங்கள் இதே லிங்க வடிவத்தில் எக் காலத்திலும் இங்கே எழுந்தருள வேண்டும். கயிலையில் வீற்றிருப்பது போல, பூர்ணாம்சத்துடன் திருவருள் பொழிய வேண்டும்’ என்று வேண்டினான். இறைவனும் அப்படியே அருள்புரிந்தார். அது முதல் இந்த திருத்தலம் ‘திருவரங்குளம்’ என்பது போல, ‘நிம்பாரண்யம்’ என்றும் வழங்கப்படலாயிற்று. இத்தல இறைவனுக்கு ஹர தீர்த்தேஸ்வரர், அரன்குளநாதர், நிம்பாரண்யநாதர் என்ற திருநாமங்கள் உண்டு.
ஒரு முறை திருக்கயிலாயத்தில் ஈசனுடன் வீற்றிருந்த உமாதேவி, ‘சுவாமி! உங்களுக்கு யாரிடத்தில் அதிக அன்பு உண்டு?’ என்று கேட்டார். அதற்கு இறைவன், ‘என் மனையாளாகிய உன்னிடமும், மனோகரமாயுள்ள சந்திரனிடமும், கங்கையிடமும், மிகுந்த அன்பு கொண்ட என் அடியார்களிடமும் எக்காலத்திலும் எனக்கு ஒரு தனியாத அன்பு உண்டு’ என்று கூறினார். அதைக் கேட்ட உமாதேவி, மற்றவர்களுடன் தன்னையும் சமமாக கூறியதை நினைத்து கோபம் கொண்டார். துக்கத்துடன் தரையில் படுத்துக் கொண்டார். அவரை சிவபெருமான் இனிய சொற்களால் ஆறுதல் கூறியும் உமாதேவிக்கு சினம் தணியவில்லை. இதனால் சினம் கொண்ட சிவபெருமான், ‘எனது அன்பான சொற்களை மதிக்காமல், தரையில் படுத்த நீ, பாவ-புண்ணியங்களுக்கு இடமாகிய பூமியில் சென்று பிறப்பாய்’ என்று சாபமிட்டார். ஈசனின் சாபத்தைக் கேட்டதும், மனம் தெளிவடைந்த உமாதேவியார், தன்னை மன்னித்தருளும்படி இறைவனை வேண்டினார். இதையடுத்து சிவபெருமான், ‘நீ அஞ்ச வேண்டாம். சாபத்தின் முடிவில் உனக்கு நன்மையே உண்டாகும். நாமே உன்னை மணம்புரிவோம். திருவரன்குளம் என்னும் திருத்தலத்தில் எனது பக்தன் நிம்பாரணியன் மகப்பேறு வேண்டி என்னைத் துதித்துக் கொண்டிருக்கிறான். நீ அவரிடம் சென்று குழந்தையாய் தோன்றுவாய். பின் குழந்தை தன்மையை விட்டு விட்டு, 8 வயது நிரம்பிய சிறுமியாய் மாறி என்னை வணங்கி வா. உரிய காலத்தில் உன்னை நாம் மணம் புரிவோம்’ என்று அருளினார். வாக்களித்தபடியே இறைவியான பெரிய நாயகியை, வைகாசி மாதம் சுகிலபட்சத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று சிவபெருமான் திருமணம் புரிந்து கொண்டு, பெரியநாயகி சமேத அரன்குளநாதராக அனைவருக்கும் காட்சி தந்தருளினார்.
ஒரு நாள் கல்மாஷபாதன் என்ற மன்னன், அகத்திய முனிவரது அருளுரைகளால் அரன் குளத்தின் பெருமைகளை நன்கு உணர்ந்து தன் குறை நீங்கிப் புத்திரபாக்கியம் பெறும் விருப்பத்துடன் அத்திருத்தலத்தை அடைந்தான். பல இடங்களில் அலைந்து அரிய சிவலிங்கத்தை தேடினான். ஆற்றல் மிக்க அவ்வரசன் பல நாள் தேடியும் சிவலிங்கம் இருக்குமிடத்தை கண்டறிய முடியவில்லை. இருப்பினும் விடாமல் அந்த சிவலிங்கத்தைத் தேடிக்கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த காட்டின் வழியாக ஒரு வேடன், தலையில் ஒரு பெட்டியைச் சுமந்தடி வந்தான். அவனை நெருங்கிய மன்னன், ‘எங்கிருந்து வருகிறாய்? நீ வைத்திருக்கும் பெட்டியில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டான்.
அதற்கு அந்த வேடன், ‘ஐயா... இந்தப் பெட்டிக்குள் பனம்பழம் இருக்கிறது. பட்டணத்தில் உள்ள கடையில் விற்பனை செய்வதற்காக அதைக் கொண்டு செல்கிறேன்’ என்றான். அதைக் கேட்ட அரசன், அப்பழத்தைத் தனக்கு தந்தால் தக்கவிலை அளிப்பதாகக் கூறினான். வேடனும் ஒரு குறுணி தானியத்தை விலையாகத் தருமாறு கேட்டுவிட்டு, பெட்டிக்குள் இருந்த பனம்பழத்தை எடுத்து மன்னனிடம் கொடுத்தான். அதைத் தன் கையில் வாங்கிய மன்னனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஏனெனில் அந்த பனம் பழம் முழுவதும் தங்கத்தால் பிரகாசித்தது. அரசன் அந்த வேடனிடம், ‘இந்த பழம் பழுக்கும் பனை மரம் எங்குள்ளது? தினமும் எவ்வளவு பழங்கள் பழுக்கும்? இவ்வளவு காலமாய் யாரிடம் இந்தப் பழங்களை விற்று வருகிறாய்? அஞ்சாமல் உண்மையைக் கூறு. உனக்கு வேண்டிய பொருளை நான் தருகிறேன்’ என்றான்.
‘அரசே! அந்தப் பனைமரம் இக்காட்டில் அருகில் தான் உள்ளது. அதில் தினமும் ஒரு பழம்தான் பழுக்கும். அதனைக் குறுணி தானியத்துக்கு ஒரு வணிகனிடம் விற்று, என் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன். அம்மரத்தை தங்களுக்கு காட்டுகிறேன்’ என்று கூறி அழைத்துப் போனான். வேடனுடன் சென்ற மன்னன் பிரகாசத்துடன் மின்னிய அதிசயமான அந்தப் பொற்பனை மரத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான். பின்பு நகரில் இருந்த வணிகனை வரவழைத்து, அவன் அதுவரை வேடனிடம் பெற்றிருந்த பனம்பழங்கள் அனைத்தையும் அவனுக்கு உரிய பொருட்களை வேண்டிய மட்டும் தந்து பெற்றுக்கொண்டான். தொடர்ந்த அந்தப் பொற்பனை மரத்துக்கு மன்னனே காவலாய் இருந்தான். ஒரு நாள் அப்பொற்பனை மரத்தில் திவ்ய ஒளி ரூபமாக ஒரு வடிவம் தோன்றி, அரசன் முன்பாக நின்றது. ‘மன்னா! நான் புஸ்பதந்தன் என்னும் கணநாதன். சிவபெருமான் கட்டளையால் கிருதாயுகத்தில் வேம்பாகவும், திரேதாயுகத்தில் காட்டாத்தியாகவும், துபார யுகத்தில் பொற்பனையாகவும் இருக்கின்றேன். கலியுகத்தில் இந்த பொற்பனை மரத்தின் பழங்களால் திரட்டப்படும் திரவியங்களால் அமைக்கப்பட்ட மணி மண்டபங்கள் அமைந்த சிறந்த ஆலயமாக நின்று, இறைவனுக்கு நிழல் தரப்போகிறேன். ஆகையால் எனது இக்கனிகளை விற்றுக் கிடைக்கும் பொருளால் சிவபெருமானுக்கு உகந்த ஆலயம் ஒன்றை விரைவில் கட்டுவாயாக’ என்று கூறி மறைந்தது. மன்னன் அப்பொற்பனை மரம் இருந்த இடத்தைச் சுற்றி ஒரு புதிய நகரை அமைத்தான். பின் அங்கேயே தங்கி சிவலிங்கத்தை நேரில் கண்டு தரிசிக்கும் விருப்பத்துடன் இருந்தான். அரண்மனை அலுவலர்கள் பொற்பனைக் காட்டில் தவமிருக்கும் மன்னனுக்குத் தேவையான பூஜை திரவியங்களையும், உணவுப் பொருட்களையும் சேகரித்து இடையர்கள் சிலர் மூலமாக அனுப்பி வைத்தனர். அப்படி இடையர்கள் வரும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் இடறி, அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் பூஜை பொருட்கள் ஒரு கல்லின் மீது விழுவது வழக்கமாகிப்போனது. இந்தச் செய்தி மன்னனுக்கு தெரியவந்தது.
மன்னன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, அந்தக் கல்லை அப்புறப்படுத்த முயற்சித்தான். அப்போது வாள் பட்டு கல்லில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் தான் அது சிவலிங்கம் என்பது தெரியவந்தது. பதறிய மன்னன், தன் தவறுக்காக உயிரை விட முன்வந்தான். அப்போது இறைவன், மன்னனை தடுத்தாட்கொண்டு, அங்கே ஆலயம் எழுப்ப உத்தரவிட்டார். கல்மாஷபாதன், இறைவன் ஆணைப்படி மிகச்சிறந்த திருக்கோவிலை எழுப்பி, குறித்த நன்னாளில் குடமுழுக்கு விழாவையும் நடத்தினான்.
இந்த ஆலயம் பூரம் நட்சத்திற்குரிய கோவிலாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர பிறந்த நாள், மாதாந்திர நட்சத்திரநாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கே வந்து வழிபடலாம். இங்கு அம்பாள் சன்னிதி முன்பாக இருக்கும் சக்கரத்தில் உட்கார்ந்து தங்களது வேண்டுதல்களை வைக்கலாம். அம்பாளை வழிபட்டால் நல்ல நன்மைகளை கூட்டுகிறார் தீய வினைகளை நீக்குகிறார். தோஷம் உடையவர்களை இங்கே தத்து குடுப்பதும் உண்டு. இது திருமண ஸ்தலமாக திகழ்கிறது. குழந்தை இல்லாதவர்கள், கல்யாணமாகதவர்கள், அம்பாளை வழிபட்டு பலன் அடையாலம்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை