நெடுங்குடி, கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் காரைக்குடி செல்லும் வழியில் கீழாநிலைக்கோட்டை இறங்கி மேற்கே சுமார் 1 கி.மீ., தொலைவில் உள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : பிரசன்னநாயகி
தல விருட்சம் : வில்வ மரம்
தல சிறப்புகள் : மதுப்பழக்க்ததிற்கு அடிமையாகி அதிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றால் இங்கு வரவேண்டும். ஒருநாள் தங்கி இருந்து சர்ப்ப நதியில் நீராடி கைலாசதாதரை மனமுருக வணங்கினால், அந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மது அரக்கனை அழித்து புதுப்பிறவி எடுப்பார்கள்.
தல வரலாறு : புராணக் காலத்தில் நெடுங்குடியில் வில்வ மரங்களும், மண்மலை குன்றுகளும் அதிகமாக இருந்தன. பல்வேறு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை பூஜித்து வந்த, சகோதரர்கள் இருவர் இந்த தலத்திற்கு வந்தனர். பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்று பெயர் கொண்ட அவர்கள், அசுரர்களாக இருப்பினும் சிவபெருமானின் பக்தர்களாக விளங்கினர். பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம், வழிபாட்டிற்காக காசியில் இருந்து புனித லிங்கம் எடுத்து வரும்படி கூறினான். அண்ணன் சொன்ன சொல்லை தட்டாமல் தம்பி காசிக்கு சென்றான். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிரஞ்சீவி வந்து சேரவில்லை. இதனால் பெருஞ்சீவி மண்ணால் சிவலிங்கம் ஒன்றைச் செய்து, உரிய நேரத்தில் சிவ வழிபாடு செய்து முடித்தான். இந்த நிலையில் பூஜை முடிந்து வந்த சிரஞ்சீவி, ஏற்கனவே மண்ணால் ஆன லிங்கம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அண்ணன் ஏற்கனவே பூஜையை முடித்து விட்டதை அறிந்த சிரஞ்சீவி, ‘நான் கொண்டு வந்த லிங்கத்தையும் வைத்து வழிபடுங்கள்’ என்றான். பெருஞ்சீவி, ‘தம்பி ஈசனுக்குரிய பூஜை காலம் முடிந்து விட்டது. எனவே நீ கொண்டு வந்த லிங்கத்தை வைத்து பூஜை செய்ய இயலாது’ என்றான். ஆனால் சிரஞ்சீவி விடுவதாக இல்லை. இதனால் கோபம் கொண்ட பெருஞ்சீவி, ‘நீ லிங்கத்தை தாமதமாகக் கொண்டு வந்துள்ளாய். அதை விட இப்போது அடம்பிடிக்கிறாய். இது தவறு’ என்றான். இதையடுத்து அண்ணன் தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தம்பி சிரஞ்சீவி, ‘நீ மண்ணால் செய்த இந்த லிங்கத்தையும், இந்த மலையையும் அழிக்கிறேன்’ என்று அண்ணனிடம் சபதம் செய்து விட்டு, கயிலாயநாதனை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினான். இதனைப்பார்த்த பெருஞ்சீவி கலங்கிப் போனான். இருப்பினும் தனது தம்பியைத் தடுப்பதற்காக, அவனும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான்.
அண்ணன் தம்பி இருவரின் தவத்தால், அவர்கள் இருக்கும் தலத்திற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று நினைத்த திருமால், சிரஞ்சீவிக்காக ஆதிசேஷனையும், பெருஞ்சீவிக்காக கருடனையும் அனுப்பி வைத்தார். ஆதிசேஷன் பூலோகம் வந்து, பெருஞ்சீவி அமைத்த மண் லிங்கத்தை அசைக்கத் தொடங்கியது. கருடன் அதைத் தடுக்கும் விதமாக மலையைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தது. கருடனைக் கண்டதும், ஆதிசேஷன் அங்கிருந்து அகன்று விட்டது. கருடனும் தன் இருப்பிடம் திரும்பியது. அப்போது அசுர சகோதரர்களுக்கு திருமால் காட்சியளித்தார். அப்போது அவர், ‘உரிய காலத்தில் சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப்புரிந்து கொண்டு நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து ஈசனை வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த இத்தலம் புகழ்ப்பெற்று திகழும். காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்தையும் இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்’ என்று கூறி மறைந்தார். அதன்படியே மண் லிங்கத்தின் பின்னால் காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இத்தல சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்தது. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியை தரிசித்தனர். அந்த லிங்கத்திற்கு தினமும் ஒரு படி பால் ஊற்றி அபிஷேகம் செய்து வந்தனர். அப்படி முதல் நாள் அபிஷேகம் செய்யப்படும் பாலுக்கு, மறுநாள் இறைவனின் சன்னிதியில் அதற்குரிய விலையாக சிவலிங்கத்தின் அருகில் பொற்காசுகள் இருக்குமாம். இதனால் இத்தல இறைவனுக்கு ‘படிக்காசுநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பெருமை மிகுந்த இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை, ஜடாய்வர்ம வல்லவ சுந்தர பாண்டியன் என்பவர் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து 13-ம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதி எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் காசியிலும், கயிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
கோவில் அமைப்பு : இக்கோயிலின் மூலவர் கைலாசநாதர் என்றும் காசிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், இறைவி சன்னதி மற்றும் பிற சன்னதிகள் உள்ளன. இக்கோயில் மண் மலை மீது அமைந்துள்ளது. அக்காலத்தில் இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் காசி கோயிலின் படியில் இருப்பதாகக்கூறுவர்.அதனால் இவரை படிக்காசிநாதர் என்றும் அழைப்பர். கோயிலில் உள்ள லிங்கம் காசியிலிருந்து பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் அசுரர்களால் வழிபடப்பட்டதாகும். அம்மன் சன்னதி கி.பி.13ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் திருப்பணி செய்யப்பட்டது. பாண்டிய மன்னர் கட்டியதால் மதுரை மீனாட்சி அம்பிகா சமேத சோமசுந்தரேசுவரசுவாமி கர்ப்பகிரக சன்னதியின் வெளிப் பக்கத்தில் உள்ள 8 யானைகள் போல், இங்கு உள்ள அம்மன் சன்னதியைச் சுற்றி 8 யானைகள் உள்ளன. இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், குன்றுக்கும் சிறப்புடையதாக விளங்குகின்றனது. இதனால் கணவன் மனைவி இருவரும் இங்கு வந்து ஒருநாள் தங்கியிருந்து சர்ப்பநதியில் நீராடி ஆலயத்தின் தேரோடும் வீதியில் 5முறைவலம் வந்து பிரசன்ன நாயகிக்கும் கைலாச நாதருக்கும் அபிஷேக அர்ச்சனைகள் செய்து இறைவனை வணங்கி தீர்த்தம், விபூதி குங்கும பிரசாதங்கள் வாங்கிச் சென்றால் நாகதோஷம் நீங்கி பிள்ளைச் செல்வம் கிடைக்கும்.
மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் பெற்றோருடன் வந்து இதை செய்தால் திருமணம் உடனே நடக்கும். பௌர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாள்களில் கிரிவலமும், பிரதோஷ நாள்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பெறுகின்றன. இக்கோயிலின் அடிவாரத்தில் கிரிவல வீதியில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி மூலவரை வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆடிப்பூரத்தன்று இறைவிக்கு திருவிழா நடைபெறுகிறது. வைகாசி விசாகம் 10 நாள்கள், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்பெறுகிறது. பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியர் இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து சர்ப்பநதியில் நீராடி தேரோடும் வீதியில் 5 முறை வலம் வந்து பிரசன்ன நாயகிக்கும், கைலாச நாதருக்கும் அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வணங்கினால் மகப்பேறு உண்டாகும். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் பெற்றோருடன் வந்து இதை செய்தால் திருமணம் உடனே நடக்கும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சன்னதி முன்பு மண்டபத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட 12 ராசி சக்கரத்தின் நேராக கீழே தரையில் பதிக்கப்பட்ட பத்மபீடத்தில் அமர்ந்து "ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை