ஆனையூர், ஐராவதீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரையிலிருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து மேற்கே 29 கி.மீ. தொலைவிலும், உசிலம்பட்டியிலிருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இறைவன் : ஐராவதீஸ்வரர் (திருஅக்னீஸ்வரமுடைய பரமசுவாமிகள்)
உற்சவர் : சந்திரசேகர், நடராஜர்
இறைவி : மீனாட்சி
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : பொற்றாமரைக்குளம்
தல சிறப்புகள் : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சித்திரை மற்றும் ஆடி மாத பிரதோஷ தினங்களில் கருவறைக்கு நேரே சூரியனின் ஒளிபடுவது, சூரியபகவானே நேரடியாக வந்து அபிஷேகிப்பது போன்ற சிறப்பினைப் பெற்றுள்ளது.
தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு, வேடுவமன்னன் ஒருவன் வாலாந்தூர் பகுதியினை ஆண்டு வந்தான். அவனது ஆட்சியின் போது, உத்தப்பநாயக்கனூர் எனும் நகரம் வாணிப நகரமாக இருந்தது. அங்கே வணிகர்கள் பலர், தற்போது கோயில் வீற்றுள்ள கற்றாழைக்காடு வழியாக அடிக்கடி சென்று வந்தனர். அப்போது, அக்கற்றாழைக் காட்டில் வசித்த வெள்ளையானை ஒன்று அடிக்கடி கோயிலின் எதிரே இருந்த பொற்றாமரைக் குளத்தில் இருந்து நீரினை தனது தும்பிக்கையில் உறிந்து, கற்றாழைக் காட்டிற்குள் செல்வதைக் கண்டு திகைத்த வணிகர்கள் இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தனர்.
மன்னர் உத்தரவின் பேரில் பணியாட்கள் அக்காட்டில் இருந்த கற்றாழைகளை வெட்டிட, அங்கே ஓர் கதம்பமரத்தின் அருகே இருந்த கற்றாழையினை வெட்டியபோது, ரத்தம் பீறிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின், அவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக வீற்றிருந்ததைக்கண்ட மன்னர், ஐராவதம் தொடர்ந்து சிவலிங்கத்திற்கு பொற்றாமரைக் குளத்தில் இருந்து நீரினை எடுத்து அபிஷேகம் செய்ததை அறிந்து வியப்புற்றார். பின், சுயம்புலிங்கமாக வீற்றிருந்த சிவபெருமானுக்கென தனியே கோயிலை எழுப்பி வழிபட்டார்.
துர்வாச முனிவர், தான் சிவபூஜை செய்ததின் பலனாகக் கிடைத்த மலர் ஒன்றினை, இந்திரனிடம் கொடுக்க அவனோ அம்மலரை அலட்சியமாகப் பெற்று அதனை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைத்தான். ஐராவதம் அம்மலரினை தனது தும்பிக்கையால் எடுத்து கீழே வீசியது. சிவபூஜையினால் கிடைத்த மலரினை இந்திரனும், அவனது ஐராவதமும் அலட்சியப்படுத்தியதைக் கண்டு ஆத்திரம் அடைந்த துர்வாச முனிவர், இந்திரன் தேவர் தலைவர் பதவியை இழப்பான் எனவும், ஐராவதம் காட்டு யானையாக வாழும் என்றும் சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் பலனை அனுபவித்த ஐராவதம் இத்தலத்தில் பாவ விமோசனம் பெற்றதால் இங்கு வீற்றிருக்கும் சுயம்புலிங்கம் ஐராவதீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
கோவில் அமைப்பு : கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். முகமண்டபத்தில் வாயிற்காவலர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். கணபதி, சண்டேசர், பைரவர் ஆகிய பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் உள்ளன. கார்த்திகேயன், வள்ளி தெய்வானை உடனுறை முருகன், இரட்டை விநாயகர் ஆகியன பிற்காலத்தைச் சேர்ந்தவையாகும். பாண்டியர் கலைப்பாணியில் அமைந்த ஜேஷ்டாதேவி சிற்பம் மிகவும் எழில் வாய்ந்தது. அம்மன் திருமுன்னில் நின்ற கோலத்தில் மீனாட்சி அருள்பாலிக்கிறாள். பாண்டியர் கால நந்தி உள்ளது.
மேற்கு நோக்கி அமைந்த கருவறையைக் கொண்டுள்ளது. இடைகழிக்கூடம், மகாமண்டபம், திருச்சுற்று ஆகியன இடம்பெற்றுள்ளன. மகாமண்டபத்தின் மேற்கு மூலையில் வாகனம் மண்டபம் அமைந்துள்ளது. கருவறையின் தாங்குதளம் குமுதம் வரை நிலத்தினுள் புதைந்துள்ளது. கருவறையின் கிழக்கு, தெற்கு மற்றும் வடக்குச் சுவர்களில தேவகோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி வெளிப்பகுதியில் தற்காலக் கட்டிட அமைப்புக் கூறுகளைக் கொண்டு தெற்கே தட்சிணாமூர்த்திக்கும் மேற்கே சண்டிகேசுவரருக்கும் சிறுகோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடைக்கழிக்கூடத்திற்கும் நந்திக்கும் இடையே மகாமண்டபத்தின் வடக்குப் பகுதயில் தெற்கு நோக்கி மீனாட்சி திருமுன் அமைந்துள்ளது. இது நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகும். இக்கோயிலின் திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் ஒரு விநாயகர் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றின் தென்புறச் சுவற்றின் மூலையில் முருகனுக்குத தனியாக திருமுன் உள்ளது. இக்கோயிலின் மேற்குத் திசையில் உள்ள முதன்மையான நுழைவாயிலைத் தொடர்ந்து ஆறு தூண்களையுடைய முக மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இது விஜயநகர காலத்தை ஒத்ததாகும்.
இக்கோயிலில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு கைகளுடன், மூன்று கண்களைக் கொண்டு வலது கால் வளைவாகவும், இடது கால் கீழே அமர்ந்த நிலையிலுமான அர்த்தபரியங்காசன விநாயகர் வீற்றுள்ளார். ஸ்ரீதேவியின் மூத்த சகோதரி ஜேஷ்டாதேவி தனது இரு புறங்களிலும் மகன் ரிஷபன், மகள் அக்னிமாதா உடன் அருட்காட்சியளிக்கிறாள். இதனைப் பலரும், ஆஞ்சநேயர், தனது தாயார் அஞ்சனாதேவி உடன் காட்சியளிப்பதாகக் கூறுகின்றனர். இத்தலத்தில் உள்ள சில சிலைகள் நவாப் படையெடுப்பின் போது, சிதிலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐராவதம் பாவ விமோசனம் பெற்றதன் அடையாளமாக கதம்பமரத்தில் செய்யப்பட்ட ஐராவதசிலை ஒன்று கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
தினசரி பூஜை செய்ய அர்ச்சகர்கள் இல்லாவிட்டாலும், இக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் தாமாகவே பூஜைகளைச் செய்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். பிரதோஷ விசேஷபூஜை, ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகை, சிவராத்திரி மற்றும் சிவனுக்கு உகந்த தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
காலை 6.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை, திண்டுக்கல்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை