திருநாங்கூர், மதங்கீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழியில் இருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அருகில் திருவாலி திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு திருக்கோவில்கள் உள்ளன.
இறைவன் : மதங்கீஸ்வரர்
இறைவி : ராஜமாதங்கி
தல தீர்த்தம் : மதங்க தீர்த்தம்
தல விருட்சம் : வன்னி
தல சிறப்புகள் : ஒரே தலத்தில் 9சிவன், 11 மகாவிஷ்ணு கோயில்கள் அமைந்த சிறப்பான தலம் இது. மதங்கர் அம்பிகை ராஜசியாமளாவை வளர்த்து வந்ததால், அம்பிகை ‘ராஜமாதங்கி’ என்றும், மாதங்கியை சிவபெருமான் மணந்து ஆட்கொண்டதால், இறைவன் ‘மதங்கீஸ்வரர்’ என்றும், ஆட்கொண்ட மதங்கரின் ஆசிரமம் அமைந்திருந்த இடம் ‘மதங்காஸ்ரமம்’ என்றும், தற்போது அவ்விடமே திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவில் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் பதினோரு திரு அவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திரு அவதாரங்களுடனும் ஒரே திருத்தலத்தில் தோன்றி அருளிய திருத்தலம்.
தல வரலாறு : அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, அன்னை திருக்கடையூர் அபிராமியை ஆதிபராசக்தியின் பல்வேறு வடிவங்களாய் போற்றித் துதிக்கிறது. அபிராமி அந்தாதியில், ‘மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி, மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே’ என்பார் அபிராமிபட்டர். சித்திமதி-மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மதங்க கன்னிகைகளில் மூத்தவளும் பேரழகியுமானவள் அன்னை மாதங்கி. அவளது பச்சைநிறம் இந்த மண்ணையே களிக்கச் செய்ததாக அபிராமிபட்டர் போற்றுகிறார். இந்த மாதங்கியை சியாமளை, மந்திரிணி, ராஜசியாமளா, ராஜமாதங்கி என்றும் அழைப்பார்கள். லலிதை ஆதிபராசக்தியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றி, தம் அடியவர்களுக்கு கல்வி, நுண்ணறிவு, சொல்லாற்றல், இசையறிவு, வசீகரிக்கும் சக்தி, திரண்ட செல்வம் என அள்ளித்தருபவள் ராஜமாதங்கி. இந்த ராஜமாதங்கி அருளும் இடம் சீர்காழி மற்றும் திருவெண்காடு அருகிலுள்ள திருநாங்கூர் திருத்தலம் ஆகும்.
ஒரு பிரளய காலத்தில் பிரம்மதேவர், சிவபெருமானை மதங்கம் எனும் யானை வடிவில் இருந்து தியானித்தார். அப்போது பிரம்மனின் மனதில் இருந்து அவரது புத்திரனாய் மதங்க முனிவர் தோன்றினார். தவம் செய்ய விருப்பம் கொண்டு இடம் தேடினார் மதங்க முனிவர். அது பிரளய காலம் அல்லவா? எங்கும் ஒரே வெள்ளம். தவமியற்ற இடம் கிடைக்கவில்லை. அப்போது நாரத முனிவர் தோன்றி, ‘மதங்கா! பூவுலகில் அனைத்து உயிர்களும் ஒடுக்கம் அடையும் திருவெண்காடு, பிரளயத்திலும் அழியாமல் உள்ளது. அங்கு சென்று தவமியற்று' என்றருளினார்.
ஊழிக்காலத்திலும் அழியாத அத்தலத்தைக் கண்ட மதங்கர் அங்கேயே தவமியற்றத் தொடங்கினார். அப்போது மகாவிஷ்ணு மோகினி வடிவில் தோன்றி ஆசி வழங்க, விநாயகப்பெருமான் மதங்கருக்கு அஷ்டமா சித்திகளையும் அருளினார். இந்த மோகினி வடிவ பெருமாள் ‘நாராயணி’ எனும் திருநாமத்திலும், விநாயகர் ‘மதங்க விநாயகர்’ எனும் பெயரிலும் திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்கின்றனர். பின்னர் தவமிருந்த மதங்க முனிவருக்கு அம்பிகையுடன் சிவபெருமான் திருக்காட்சி நல்கினார். அப்போது மதங்கர் அம்மையப்பனிடம், ‘அம்பிகையே எனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும்' என்று வேண்டினார்.
உடனே பார்வதி தேவி ‘மதங்கரே., எம் வடிவம் கொண்ட மந்திரிணியான சியாமளா தேவி உமக்கு மகளாக வந்து பிறப்பாள்' என அருளி மறைந்தாள். அதன்படி, ஆடிமாதம் வெள்ளிக்கிழமை அதிகாலை மதங்க தீர்த்தம் எனும் பொய்கையில் நீலோத்பல மலர் மேல் சியாமளாதேவி குழந்தையாக வந்துதித்தாள். அப்போது பொய்கைக்கு நீராடவந்த மதங்கர் சித்திமதி தம்பதியினர், அக்குழந்தையை எடுத்து தங்கள் மகளாக வளர்த்து, பின்னாளில் சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தனர். பின்னர் ரிஷபத்தில் சக்தி மாதங்கியுடன் சிவபெருமான் எழுந்தருளி, திருக்கல்யாண சேவை நல்கி அருளினார். அந்த ரிஷப சேவை திருக்காட்சியின் தொடர்ச்சியாய் இன்றுவரை திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவிலில் ‘ரிஷப சேவை திருக்காட்சி' நடைபெற்று வருகிறது.
தமது கட்டளையை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்றுவந்த தாட்சாயணியின் மீது கொண்ட சினத்தினால், சிவபெருமான் இங்கு உள்ள உபய காவிரி என்னும் இடத்தில் ருத்திரதாண்டவம் ஆடினார். அப்போது அவரது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர்ந்தது. அந்தப் பதினொரு இடங்களிலும் இன்னொரு சிவபெருமான் உருவம் தோன்றி ருத்திரதாண்டவம் நிகழ்த்தத் தொடங்கியது. இதனால் இவ்வுலகிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அஞ்சிய தேவர்கள், மகா விஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர் ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த 11 சிவபெருமான்களையும், 11 மகாவிஷ்ணுவாய் தோன்றி கட்டித் தழுவினார். இதனால் சினம் தணிந்து சாந்தநிலைக்குத் திரும்பிய சிவபெருமான், தமது சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டருளினார். அதுபோலவே மகாவிஷ்ணுவும் பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டார்.
கோவில் அமைப்பு : மூலவர் சன்னதியில் மேலுள்ள விமானம் ஏகதள அமைப்பைச் சார்ந்தது. இங்குள்ள விநாயகர் வலஞ்சுழி மாதங்க விநாயகர் எனப்படுகிறார். திருச்சுற்றில் ஆனந்த வடபத்ர காளியம்மன் எட்டு கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி ஊஞ்சலில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். மதங்க முனிவர் சன்னதியும் திருச்சுற்றில் உள்ளது. தேவகோஷ்டத்தில் பிரம்மா அமர்ந்த கோலத்தில் உள்ளார். இறைவி தனி சன்னதியில் உள்ளார். ஆலயத்தில் ஈசனின் எதிரில் இரண்டு நந்திகள் உள்ளன. அதில் மதங்க நந்தி, ஈசனை நோக்கியவாறும், சுவேத நந்தி மறுபக்கம் திரும்பிஇருப்பதையும் காணலாம். மாதங்கி-மதங்கீஸ்வரர் திருக்கல்யாணத்தின் போது ஈசனின் கட்டளைக்கிணங்கி இங்குள்ள நந்தி திருக்கயிலாயம் சென்று அன்னை மாதங்கி சார்பாக சீர் அளித்ததாம். எனவே பிரதோஷத்தின் போது இந்த இரு நந்திகளுக்கும் தொடர்ந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், வறுமையால் திருமணம் கைகூடாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணத் தடை விலகும்.
மாதங்கீஸ்வரி அம்பாள் தனிசன்னதியில் தெற்கு பார்த்து அருளுகிறாள். இவள் சரஸ்வதிக்கு குருவாக இருந்து கல்வி உபதேசம் செய்தவள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள கல்வியில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை பவுர்ணமி மற்றும் அஷ்டமி தினங்களில் அம்பாள் சன்னதி முன்பு நாக்கில் தேன் வைத்து எழுதி“அக்ஷராபியாசம்” செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களது கல்வி சிறக்கும் என்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் அஷ்டமி தினத்தன்று இவளுக்கு பாசிப்பருப்பு பாயாச நைவேத்யம் படைத்து, உரிக்காத மட்டைத்தேங்காயை சன்னதியில் கட்டி வழிபடுகிறார்கள்.
மதங்கர் இத்தலத்தில் தவம் செய்தபோது, அவரை சோதனை செய்வதற்காக பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து இங்கு வந்தார். அவரது தவத்தைக் கலைக்க முயற்சி செய்தார். தவத்தில் ஒன்றியிருந்த மதங்கர் மோகினியின் செயலை ஞானதிருஷ்டியால் அறிந்து அவருக்கு சாபம் கொடுக்க கண் திறந்தார். அதற்குள் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு சங்கு, சக்கரத்துடன் அவருக்கு காட்சி தந்தார். இவர் பிரகாரத்தில் மோகினி வடிவத்திலேயே கையில் சங்கு,சக்கரத்துடன் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறார். இவரது கையில் “ஆனந்த முத்திரை” இருக்கிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை