இருக்கன்குடி- மாரியம்மன் திருக்கோவில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கன்குடி இருக்கிறது. இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று.
அம்மன் : மாரியம்மன்
முக்கிய தீர்த்தம்: வைப்பாறு
பிறதீர்த்தம் : அர்ச்சுனாநதி
தலச் சிறப்பு : கோயில்களில் மாரியம்மன் இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருக்கும். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே, நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மன் சிம்ம வாகனத்திற்கு பதில் நந்தி வாகனம் உள்ளது. உத்ஸவ மூர்த்தி சின்ன மாரியம்மன் திருஉருவம் உள்ளது.
தல வரலாறு: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சானம் பெருக்க வந்த பெண் ஒரு இடத்தில் கூடையை வைத்துச் சானம் பொறுக்கிச் சேர்த்திருக்கிறாள். ஓரளவு சானம் சேர்ந்த பின்பு அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள். சாமியாடிய அந்த பெண் அந்த கூடை இருக்கும் இடத்தில் சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து கோயில் அமைத்து வணங்கினால் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர்.
கோயில் அமைப்பு : வைப்பாறு, அர்ச்சுணன் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே மணல் திட்டாயிருக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வாழவந்தம்மன், ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன், முப்பிடாரியம்மன் போன்றவைகளுக்கும் காவல்தெய்வமான கருப்பசாமிக்கும் துணைக் கோயில்கள் உள்ளன.
தல அமைப்பு : கருவறையின் நுழைவாசலின் உயரம் குறைவாக இருப்பதால் குனிந்து உள்ளே போக வேண்டியதிருக்கிறது. அம்மன் பொன் ஆபரணங்கள் அணிந்து தங்க மேனி உடையவளாக மின்னுகிறாள். அம்மனின் கருணை விழிகளைக் கண்டாலே மெய் சிலிர்க்கிறது. பிரகாரத்தைச் சுற்றி காத்தவராயன், பைரவன், வீரபத்திரர், பேச்சியம்மன்,முப்பிடாரி அம்மன் ஆகிய சிறிய சன்னதிகள் இருக்கின்றன.
அர்ச்சுனன் நதி : அன்னையின் திருக்கோயிலுக்கு வடக்கே தவழும் அர்ச்சுனா நதி மேற்கே வத்திராயிருப்பு மலை எனப்படும் மகாலிங்க மலையிலே உற்பத்தியாகிறது. முன் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து கொண்டு இம்மலையடிவாரத்திற்கு வந்த போது நீராடுவதற்கு இடம் இல்லாமையால் அர்ச்சுனன் கங்கையை வணங்கி வருணக் கணையால் பூமியை பிளந்து. அப்பிளவிலிருந்து தோன்றி பெருக்கெடுத்த ஆற்றில் பஞ்ச பாண்டவர்கள் திரௌபதியுடன் நீராடி மகிழ்ந்தார்கள் .அவ்வாறு தோன்றிய ஆறே அர்ச்சுனன் ஆறு என்று பெயர் பெறுவதாயிற்று.
தரிசன நேரம்: காலை 6.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் காலை மணி 6.00 முதல் இரவு 8.00 மணி திறந்திருக்கும்
அருகில் உள்ள ரயில் நிலையங்கள் : சாத்தூர், அருப்புக்கோட்டை, மதுரை
அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை.
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு