உண்றீஸ்வரர் கோவில், திருவெண்பாக்கம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரிலிருந்து வடமேற்கில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை பேருந்தில் சென்று நெய்வேலி கூட்டு சாலையில் இறங்கி 1 கி.மீ சென்றும் இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : ஊன்றீசுவரர், ஆதாரதாண்டேசுவரர்
அம்பிகை : மின்னொளியம்மை, தடித்கெளரியம்மை, கனிவாய் மொழியம்மை
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இது சுந்தரர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். இத்தலம் இருந்த இடம் இன்று பூண்டி நீர்த்தேக்கமாக உள்ளது. தற்போது கோயில் புதியதாகக் கட்டப்பட்டு 5.7.1968 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. நீர் குறைந்துள்ள காலத்தில் பூண்டில் உள்ள பழைய கோயிலைக் காணலாம்.
சுந்தரர் திருவொற்றியூரில் தங்கி இருக்கும் போது சங்கிலி நாச்சியாரை, திருவொற்றியூரில் இருந்து பிரியமாட்டேன் என்று சபதம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சமயம் திருவாரூரில் உள்ள பாவை நாச்சியாரை நினைத்து திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால் கண் பார்வை இழந்தார். பிறகு திருமுல்லைவாயில் இறைவனை தரிசித்து பின் திருவெண்பாக்கம் வந்த போது இங்குள்ள இறைவன் ஊண்றீசுவரர் மேல் பதிகம் பாடி கண்ணொளி கேட்டபோது இறைவன் ஊண்றுகோல் கொடுத்து அருளினார். கண்ணொளிக்குப் பதிலாக ஊண்றுகோல் கொடுத்த இறைவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் இறைவனைப் பார்த்து நீர் உள்ளே இருக்கிறீரா! என்று கேட்க இறைவனும் உளோம் போகீர்! என்று பதில் அளிக்கிறார். ஊண்றுகோல் பெற்ற சுந்தரர் கோபத்தில் அதை வீசியெறிய அது நந்தியின் மேல் பட்டு அதன் கொம்பு உடைந்தது. இந்த சிவாலயத்தில் உள்ள சிவன் சந்நதி முன் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து காணப்படுகிறது.
கோயில் அமைப்பு : இப்போதுள்ள ஆலயத்திற்கு கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் இருந்தாலும் பிரதான சாலையில் உள்ள தெற்கு நுழைவு வாயில் தான் முக்கிய வாயிலாக உள்ளது. தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் வெளிப் பிரகாரத்தில் வழித்துணை விநாயகர் ஒரு சிறிய சந்நிதியில் காணப்படுகிறார். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் சற்று உயரமான மண்டபத்தில் நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி மற்றும் இதர சந்நிதிகள் எல்லாம் சற்று உயரமான மண்டபத்தினுள் அமைந்திருக்கின்றன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்றால், நேர் எதிரே ஊண்றீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார். தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால், நேர் எதிரே அம்பாள் மின்னொளி அம்மை சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கண் பார்வை இழந்த கந்தரருக்கு அவ்வப்போது மின்னலாகத் தோன்றி வழிகாட்டியதால் அம்பாளுக்கு மின்னொளி அம்மை என்று பெயர். சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளை தனித்தனியாக வலம் வர வசதிகள் உள்ளன. சுவாமி சந்நிதி கருவறைச் சுற்றில் உள்ள விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகர், மகாலெட்சுமி சந்நிதிகள் காண வேண்டியவை. கருவறை கோஷ்டத்தில் கணபதி, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதி முன் நந்தி, பலிபீடம் அருகில் சுந்தரர் ஊண்றுகோலுடன் நின்று கொண்டிருக்கிறார். உள் மண்டபத்தில் பைரவர், நால்வர் சந்நிதி, அருணகிரிநாதர், சூரியன், நவகிரகங்கள் சந்நிதி ஆகியவை கிழக்குப் பக்கம் இருக்கின்றன.
காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : திருவள்ளூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை