திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள கேரளா என்னும் மாநிலத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் ஸ்ரீவாஞ்சிகுளம் என வழங்கப்படுகிறது. சென்னை - கொச்சி ரயில் பாதையில் இரிஞாலக்குடா நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சூரிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது.
இது சேரநாட்டு திருத்தலம். சுந்தரர் பாடல் பெற்ற தலம்.மலை நாட்டு திருத்தலம் இது ஒன்றே.
கேரள மாநிலம் பிரசித்தமான கொடுங்களூர் பகவதி அம்மன் திருக்கோவிலிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது.இந்த ஊரை திருவஞ்சிக்குளம் என்று அழைக்கிறார்கள்.
சுவாமி : மகாதேவர் அஞ்சைக் களத்தீஸ்வரர்
அம்பிகை : உமையம்மை
தலமரம் : சரக்கொன்றை
தீர்த்தம் : சிவகங்கை
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் மலைநாட்டில் உள்ள தேவாரபாடல் பெற்ற ஒரே தலமாக விளங்குகிறது. கோயில் பெருவாயில் மேற்கு நோக்கியது. இத்தலத்தில் சுவாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். சேரமான் அரசாண்ட கொடுங்களூர் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள நடராஜர் சேரமான் புசித்தது.
சுந்தரர் இத்திருவூரில் இறைவனை வணங்கி வலம்வரும்போது திருக்கயிலை சேர வேண்டும் என விண்ணப்பித்துக்கொண்டார். சுந்தரர் சிவபெருமானால் விடுவிக்கப்பட்ட வெள்ளை யானை மீதும், அவர்தம் தோழர் சேரமான் தம் குதிரையின்மீதும் அமர்ந்து திருக்கயிலை சென்றதாக நம்பப்படுகிறது. இத்திருவூரில் சுந்தரர் சேரர் இவர்களுக்கு உற்சவர் சிலைகள் உள்ளன. இத்திருக்குறிப்பினை வெறுத்தேன் மனைவாழ்க்கை என தொடங்கும் திருப்பாட்டில் காணலாம்.
இங்குள்ள சிவாலயத்தில் உள்ள நடராசமூர்த்தியின் பீடத்தில்” அஞைக்களத்து சபாபதி” என்று தமிழில் செதுக்கப்பட்டுள்ளது.இது சேரமான் நாயனார் தினமும் வழிபட்டமூர்த்தியாகும்.
இறைவருடைய தலையில் உருத்திராக்கமாலை அணிந்துள்ளார்.மூர்த்தியின் தலையிலேயே செதுக்கப்பட்டுள்ள உருத்திராக்கமாலை இறைவருக்கு பால் அபிசேகம் செய்யும் பொழுது தெளிவாகத்தெரியும்.”தலைக்கு தலை மாலை அணிந்ததென்னே ”என்ற சுந்தரர் பாடல் வரிகள்மூலம் அறியலாம்.
சுந்தரர்,சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருடைய உற்சவத்திருமேனிகள் இக்கோவிலில் உள்ளன.இவர்கள் இருவரும் முறையே வெள்ளையானையிலும் குதிரையிலும் திருக்கயிலாயம் சென்றார்கள்.அருகில் உள்ள ”மேல்மகோதை”கடற்கரையிலிருந்துதான் அவர்கள் திருக்கயிலாயம் புறப்பட்டு சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.திருக்கயிலை சென்று அங்கிருந்து தான் வந்து சேர்ந்ததை அஞ்சைக்களத்தப்பருக்கு சுந்தரர் அறிவிப்பதாக தேவரப்பாடலில் தெரிவிக்கிறார்.
இன்றும் ஆடி மாத சுவாதி திருநட்சத்திரத்தன்று கோயம்பத்தூர் சேக்கிழார் திருக்கூட்டத்தினரால் சுந்தரர் குருபூசை இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.(கடந்த 80 ஆண்டுகளாக சீரும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.) பரசுராமர் தன் தாயை கொன்ற பாவம் தீர வழிபட்டதலம்.
திருக்கோவிலின் முன்பு அழகிய உப்பங்கழி உள்ளது.
கொடுங்களூரிலிருந்து நகரப்பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். கொடுங்களூரில் தங்குவதற்குப் பல விடுதிகள் உள்ளன.
அருகிலுள்ள விமானதளம் : எர்ணாகுளம்
ரயில் நிலையம் : இரிஞாலக்குடா
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு