திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலத்தின் அருகே இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் தற்போது திருஅரத்துறை என வழங்கப்படுகிறது. திட்டக்குடியிலிருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது. தனிவாகனத்தில் செல்வோர் கோயில் வரை செல்லலாம். கோயில் வெள்ளாற்றின் வடகரையில் உள்ளது. பெண்ணாகடம் ரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது தொழுதூர்-விருதாச்சலம் சாலையில் தொழுதூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது கொடிகளம் என்ற இடத்தில் பிரியும் மண்சாலையில் 1 கி.மீ சென்று இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : அரத்துறைநாதர், தீர்த்தபுரீசுவரர், ஆனந்தீசுவரர்
அம்பிகை : அரத்துறைநாயகி, ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி
தலமரம் : ஆலமரம்
தீர்த்தம் : நீலமலர்ப்பொய்கை, வெள்ளாறு
பதிகம் :
திருஞானசம்பந்தர் - 1
திருநாவுக்கரசர் - 1
சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலத்தில் வால்மீகி முனிவர் அரவான் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். மேலும் மூவர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். இத்தலம் திருவரத்துறை என்றும் வழங்கப்படுகிறது. இத்தலம் நிவா நதியின் கரையில் இருப்பதாக திருஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். திருஞானசம்பந்தருக்கு அரத்துறைநாதர் முத்துச் சிவிகையும் முத்துக்குடையும் முத்துச் சின்னங்களையும் வழங்கி அருளிய தலம் இதுவாகும். திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார் சம்பந்தரைத் தூக்கிக்கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. திருதூங்காணைமாடம் சிவஸ்தலத்தைவிட்டு நடந்தே சென்றார். கால்கள் நோகாமல் இருக்க இறைவன் முத்துச் சிவிகை முத்துக்குடை முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் அரத்துறை அடியார்களிடம் ஆணையிட்டார். இதே போன்று சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வரும்படி ஆணையிட்டார். மறுநாள் காலை திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள் கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை முத்துக்குடை முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக்கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினார். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு சென்று சம்பந்தரிடம் கொடுத்து அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து முத்துக்குடை நிழலில் ஆரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார். கோயிலுக்கு முன்னால் மூன்று சிறு உருவங்கள் உள்ளன. அவை சேர சோழ பாண்டிய லிங்கங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
இத்திருத்தலத்தில் விநாயகர் நால்வர் வான்மீகி முனிவர் சப்த கன்னியர்கள் வர்த்தமான லிங்கங்கள் திருமால் ஜோதிலிங்கம் ஆதிசேஷன் விநாயகர் முருகர் வள்ளி தெய்வானை சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் சிவலிங்கங்கள் காசி விசுவாநாதர் கஜலட்சுமி சந்தான ஆசாரியார்கள் பைரவர் சூரிய சந்திரர் சனீசுவரன் நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.
திருப்புகழ் தலம்: அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தல முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு ரிருக்கரங்களும் கொண்டு, இருதேவியருடன் தின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். மயில் பின்பறம் உள்ளது.
தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : பெண்ணாகடம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு