திருநீலகண்டேஸ்வரர் கோவில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இத்தலம் தற்போது இராசேந்திர பட்டணம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாச்சலத்திலிருந்து ஜெயம்கொண்டான் சாலையில் 12 கி.மீ. தொலைவில் வெள்ளாற்றின் தென்கரைப் பகுதியில் இத்தலம் உள்ளது. ஸ்ரீமுஷ்ணம்-விருதாச்சலம் சாலையில் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்து இத்தலம் அமைந்துள்ளது.
சுவாமி : நீலகண்டேசுவரர், சுவேதார்க்கவனேசுவரர், திருக்குமரேசர்
அம்பிகை : நீலமலர்க்கண்ணி, நீலோற்பலாம்பாள், அபீத குஜநாயகி
தலமரம் : வெள்ளெருக்கு (எருக்கு)
தீர்த்தம் : நீலோற்பல தீர்த்தம், கந்த தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் நீலகண்டயாழ்ப்பாண நாயனார் அவதாரத் தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். எருக்கினைத் தல விருட்சமாக உள்ள புலியூராதலின் எருக்கத்தம்புலியூர் என பெயர் பெற்றது.
வேடன் ஒருவன் புலிக்கால் முனிவராகத் தோன்றி பூசித்துப் பேறு பெற்ற தலம். உருத்திரசன்மார் ஊமை நீங்கப்பெற்ற திருவூர்.தேவ கணங்கள் பூசித்ததால் கணேசுரம் என பெயர் பெற்றது. நைமிசாரண்ய முனிவர்கள் இத்தலத்தில் தோன்றி வெள்ளெருக்கு மரங்களாக உருக்கொண்டார். இத்தலத்தில் மகாகணபதி திருநீலகண்ட யாழ்ப்பாணர் மதங்க சூளாமணியார் விசுவநாதர் விசாலாட்சி திருமகள் முருகர் தட்சிணாமூர்த்தி சண்டேசுவரர் நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தை அடுத்து ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் உள்ளது.
ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் ராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இராஜேந்த சோழ மன்னன் இவ்வாலயத்திற்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறான். ஆதலால் இத்தலத்திற்கு இராஜேந்தப் பட்டிணம் என்று இவ்வூர் மக்கள் பெயர் சூட்டியதாக வரலாறு.
இவ்வாலயத்தின் ராஜகோபுரம் 5 நிலைகளையுடையது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளன. வலதுபுறம் சிறிய விநாயகர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் இடதுபுறத்தில் நவக்கிரகமும் நால்வரும் உள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம் திருஎருக்கத்தம்புலியூர். இவரது திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் கூடியுள்ளது. மகாகணபதி, விசுவநாதர் விசாலாட்சி, முருகர், இலக்குமி ஆகிய சந்நிதிகளை வணங்கி உட்சென்றால் இறைவன் திருநீலகண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மார்ச் மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் சூரியஒளி மூலவர் மீது படுவது இவ்வாலயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. கருவறைச் சுற்றில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதி உள்ளது.
தலப்பெருமை: கைலாயத்தில் சிவன் வேதங்களின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது பார்வதியின் கவனம் சிதறியது. அதனால் அவளை பரதவர் குலத்தில் மீனவப் பெண்ணாகப் பிறக்குமாறு இறைவன் சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். முருகனின் இச்செயலுக்காக இறைவன் அவரை மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் திருக்குமாரசாமி என்ற் பெயரிலும் இத்தலத்தில் விளங்குகிறார். உருத்திரசன்மரின் உருவம் இக்கோவிலில் உள்ளது. அறிவில் சிறந்த முருகப்பெருமானுக்கு ஊமைத்தன்மை நீங்கியது போல், திறமையிருந்தும் பயம், கோபம் முதலியவற்றால் பேசத் தெரியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.
இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும், மரங்களை வெட்டவும் முயன்றனர். தேவர்களும், முனிவர்களும் இறைவனிடம் முறையிட, அவர்களை யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடும்படி கூறி மறைந்தார். அவ்வாறே அவர்கள் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி, இத்தலத்தில் இறைவனை வழிபட்டனர். அத்தம் என்பது காடு, எனவே எருக்கத்தம் என்பது எருக்கங்காடாகும். எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர் என்று அழைக்கப் பெற்றது. சிவபெருமானுக்கு இனிய வெள்ளெருக்கு இன்னும் அவ்வூர்க் கோவிலின் மூலஸ்தானத்தருகே தல விருட்சமாக விளங்குகின்றது.
தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : விருதாச்சலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை