பழமலைநாதர் கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தென் ஆற்காடு மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் ஊரின் நடுவே மணிமுத்தாற்றின் கரையில் உள்ளது. விருதாச்சலம் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் இருக்கிறது. சென்னையிலிருந்து விருதாச்சலம் 215 கி.மீ தொலைவில் உள்ளது.
சுவாமி : பழமலை நாதர், விருத்தகிரீசுவரர்
அம்பிகை : விருத்தாம்பிகை, பெரிய நாயகி, பாலாம்பிகை
தலமரம் : வன்னி
தீர்த்தம் : மணிமுத்தாறு, அக்கினி வருண சக்கரதீர்த்தங்கள் , நித்தியானந்த கூபம்
பதிகம் :
திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 7
சுந்தரர் - 3
திருத்தலச் சிறப்புகள்: சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரின் பொருட்டு சுவாமியை வேண்டிப் பொன் பெற்ற தலம் இது. இத்திருத்தலம் காசிக்கு நிகரான பதி என்பர். குச நமச்சிவாயர், சிவப்பிரகாச சுவாமிகள், வள்ளற் பெருமான் முதலிய அருளாளர்கள் பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் பிரம்மன், அகத்தியர் வழிபட்டனர். மேலும் சுந்தரர் இறைவனிடம் பொன் பெற்றுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்த பெருமையுடைய தலம். முவர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம்.
இத்தலத்தில் உயிர்விடும் எல்லா உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உள்ளது. ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பிய போது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
கோயில் அமைப்பு : இங்கு உள்ள சிவாலயம் நான்கு புறமும் உயரமான மதிற்சுவர்களைஉடைய ஒரு பெரிய கோவில் ஆகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் காண்போரைக் கவரும் விதமாக நெடிந்துயர்ந்து காணப்படுகின்றன. ஆலயத்திற்கு பெருமை சேர்க்கும் ஐந்து பிரகாரம் ஐந்து நந்தி ஐந்து கொடிமரம் ஐந்து தீர்த்தம் இவ்வாலத்தில் உள்ளன. கிழக்கே உள்ள பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் உள்ளது. முதல் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி பள்ளமான இடத்தில் உள்ளது. இத்தலத்து விநாயகர் பாதாளத்து விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனிக் கோவிலாக முதல் பிரகாரத்தில் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் நுழைந்தவுடன் தலவிருட்சமான வன்னி மரம் உள்ளது. மூன்றாம் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் உருவச்சிலையும் பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 3ம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது. நான்காம் பிரகாரத்தில் இத்தலத்து மூலவர் பழமலைநாதர் கருவறை உள்ளது. இதன் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகிறது. சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகம் பாடி பல பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக்கொண்டு திருவாரூர் செல்ல சிரமமாக இருக்கும் என்று எண்ணி சிவபெருமானிடம் பொற்காசுகள் தனக்கு திருவாரூர் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட ஈசனும் பொற்காசுகளை ஆலயத்தின் அருகே ஓடும் மணிமுத்தாறு நதியில் வீசிவிட்டு திருவாரூர் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும்படி அருள் புரிந்தார். சுந்தரரும் மச்சம் வெட்டி எடுத்துக் கொண்டு அப்பொற்கட்டியினை அவ்வாறே ஆற்றில் இட்டார். திருவாரூர் வந்து பரவையார்க்கு இந்த நிகழ்ச்சியினை உரைத்தார். பின் அவரையும் அழைத்துக்கொண்டு வந்து தாம் குளத்தில் இறங்கி பொற்கட்டியினை தேடினார்.
சுந்தரர் பொன் செய்த மேனியினீ என்று பதிகம் போற்றி இசைத்தார். எட்டு பாட்டு வரையிலும் அது வரவில்லை. 9வது திருப்பாட்டினை வருந்தி பாடினார். பொற்கட்டி வந்தது. மச்சத்துடன் உரை தாழ்ந்திருந்தது. மீண்டும் பாடினார். உரை தாழாமல் வந்தது. பொற்கட்டியினை எடுத்துக் கொண்டு மனை சென்றார்.
இத்தலத்திற்கு அருகில் மேற்கில் குளஞ்சியப்பர் கோயில், வடக்கே வெண்மலையப்பர் கோயில், கிழக்கே கரும்பாயிரங் கொண்ட அப்பர் கோயில் மற்றும் வேடப்பர் கோயில் முதலியன உள்ளன. இங்கு 28 ஆகம லிங்கங்கள் உள்ளன. இவற்றை முருகப் பெருமான் பூசித்ததாக வரலாறு. ஆழத்துப் பிள்ளையார் தனிச் சந்நிதி உள்ளது. இங்கு அம்பாள் தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கியுள்ளார். சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியது. இத்தலத்தில் விநாயகர், முருகர், பஞ்சலிங்கம், மீனாட்சி, சொக்கலிங்கம், விசுவநாதர், சகஸ்ரலிங்கம், ஏகாம்பரநாதர், ஜம்புநாதர், அண்ணாமலையார், தண்டபாணி, நவக்கிரகம், நடராஜர், அறுபத்துமூவர், பிந்துமாதவப் பெருமாள், மயூர முருகன், இளமை நாயகி, கஜலட்சுமி, சூரியலிங்கம், சூரியன் முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்திருத்தலம் மிகப் பெரிய கோயில்.
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : விருதாச்சலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு