அதுல்யநாதேஸ்வரர் கோவில், திருஅறையணிநல்லூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு எதிரில் பெண்ணையாற்றின் கரையில் உள்ளது. திருக்கோவிலூர் ரயில் நிலையம் விழுப்புரம்-திருவண்ணாமலை ரயில் பாதையில் உள்ளது. விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வர பேருந்து வசதிகள் இருக்கின்றன. பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : அறையணிநாதர், ஒப்பிலா மணீசுவரர், அதுல்யநாதேசுவரர்
அம்பிகை : அழகிய பொன்னம்மை, அருள்நாயகி, சௌந்தர்ய கனகாம்பிகை
தீர்த்தம் : ஆரண்ய தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பெண்ணை ஆறு
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள் : இத்திருத்தலத்தில் நீலகண்ட முனிவர், பிரசண்ட முனிவர், பாண்டவர்கள், கபிலர் முதலானோர் பூசித்துப் பேறு பெற்றனர். திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். இத்தலம் தற்போது அரகண்ட நல்லூர் என வழங்கப்படுகிறது.
இக்கோயில் சிறு குன்றின் மீது உள்ளது. இக்கோபுரத்தின் மேலே நின்று பார்த்தால் திருவண்ணாமலை கோபுரம் தெரியும். சம்பந்த பெருமான் மலைமேல் வலம் வந்த போது அன்பர்கள் திருவண்ணாமலையைக் காட்டக் கண்டார். சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். பெண்ணையாற்றின் இடையில் கபிலர் மேடு தனியாக உள்ளது. இங்கு விநாயகர், முருகர், திருமால், துர்க்கை, அண்ணாமலையார், விஸ்வநாதர், ஞானசம்பந்தர், சப்தமாதர்கள், நடராஜர், நவக்கிரகம், பைரவர், சண்டேசுவரர், சனி பகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன. பாறையில் ஒரு பெரும் குளம் உள்ளது. இதன் பக்கத்தில் ஐவர் குகையும் திரோபதையின் சிற்றறையும் உள்ளன. பிரசண்ட முனிவர் வழிபட்ட திருவூர். பெண்ணையாற்றின் கரையில் திருக்கோவிலூர் வீரட்டம் உள்ளது.
கோவில் அமைப்பு: இவ்வாலயம் ராஜகோபுரம் ஏழுநிலைகளை உடையது. ராஜகோபுரம் ஒரு பெரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் உள்ளார். இவரே இத்தலத்தின் தலவிநாயகர். விநாயகருக்கு முன்பு இடதுபுறம் கையில் தாளமேந்திய நிலையில் ஞானசம்பந்தர் திருமேனி உள்ளது. விநாயகரின் பக்கத்தில் விஸ்வநாத லிங்கம் உள்ளது. அடுத்த வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் கருவறையை அடையலாம். கருவறையைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு உள்ளது. கருவறைச் சுற்றில் நவக்கிரக சந்நிதி, பைரவர், கல்லில் வடித்துள்ள நாராயணர், நர்த்தன கணபதி, சக்கரதாரியாக நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சப்தமாதாக்கள் வரிசையாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். மூலவர் அதுல்யநாதேஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நடராஜர் சபையும் உள்ளது. வெளிச் சுற்றில் அண்ணாமலையார் சந்நிதி உள்ளது. அம்பாள் தனிக்கோயிலில் தெற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.
இத்தலத்திலுள்ள முருகன் திருமேனி ஒருமுகத்துடனும், ஆறுகரங்களுடனும் வள்ளிதெய்வயானை சமேதராக வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். கைகளில் ஆயுதங்கள் உள்ளன.
கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது பீமன் குளம். பாஞ்சாலி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாக புரணாச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.. ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன. பஞ்ச பாண்டவர் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்ததாகக் கூறுவர். இப்போது உள்ளே ஏதுமில்லை. வனவாசம் முடிந்து, 18 நாட்கள் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனராம்.
பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோல, பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் இறைவன் அருளால் மீண்டும் அவற்றைப் பெறலாம்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : திருக்கோவிலூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு