வாமனபுரீஸ்வரர் கோவில், திருமாணிகுழி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூர்க்கு மேற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. நெல்லிக்குப்பம் ரயில்நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. கடலூர் - குமணங்குளம் நகரப்பேருந்து திருமாணிக்குழி வழியாகச் செல்கிறது. கங்கையெனும் திருக்கெடி ஆற்றுக்கு தென்பக்கத்தில் இது அமைந்துள்ளது. கடலூர் நகரில் பண்ருட்டி செல்லும் வழியில் 8 கி.மீ தொலைவில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : வாமனப்புரீசுவரர், உதவிநாயகர், மாணிக்க வரதர்
அம்பிகை : அம்புஜாட்சி, உதவி நாயகி, மாணிக்கவல்லி
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : கெடிலம் , சுவேத தீர்த்தம்
திருத்தலச் சிறப்புகள்: திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம்.
திருமால் வாமன பிரம்மசாரியாக வந்து மாபலியிடம் மூன்றடி மண் பெற்று அதன் பின் அவரை அழித்த பழி நீங்குதற் பொருட்டு வழிபட்ட தலமாதலின் மாணிகுழி எனப் பெயர் பெற்றது. வாமன பெருமாள் பூசித்த பிரம்மாண்டமாக இருந்த தன் திருவுருவை சுருக்கி காட்சி அளித்த புண்ணியத் தலமாகும். இங்கு சுவாமி அம்பிகையோடு எப்போதும் கூடி இருத்தல் மரபாதலின் மூலத் தானத்தில் சுவாமிக்கு முன்னே பீமருத்திரர் உருவம் எழுதப்பட்ட திரை சாத்தப்பட்டுள்ளது. முதலில் ஆலய ஆராதனை யாவும் பீமருத்திரருக்கே நடைபெறும். பின்னர் திரை விலகும்போது சுவாமிக்கு ஆராதனை நடைபெறும். அம்பாள் சந்நிதி தனியாக உள்ளது. இங்கு பள்ளியறை வழிபாடு தனியாக இல்லை.
ஒருமுறை இந்திரனின் தாயார் அதிதிதேவி பூசை செய்த போது விளக்கில் உள்ள நெய் உறைந்துபோக, அதனால் திரி அணையும் நிலையில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அப்போது பசியின் கொடுமையால் அலைந்து திரிந்த ஒரு எலி அந்த நெய்யை சாப்பிட முயன்றது. அப்போது எலியின் மூக்கு திரியை தூண்டிவிட்டதில் தீபச் சுடர் பிரகாசமானது. தன்னிலை உணராத நிலையில் நிகழ்ந்த இச்செயலால் இறைவன் மகிழ்ந்து, அந்த எலியை அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய் பிறக்கச் செய்தார். முற்பிறவியில் ஏற்பட்ட சிவபக்தியால் தொடர்ந்து தர்ம வாழ்வையே மேற்கொண்டார் மகாபலி. ஓர் அசுரனாக இருந்தும் அவருடைய தர்ம மனநிலையை பொறுக்காத தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். காக்கும் கடவுளாகிய விஷ்ணுவும் மகாபலியை பூரணமாக வதம் செய்யாது, அவனுக்குள் இருக்கும் அசுரத்தன்மையை மட்டும் அழித்து, தன் பதம் சேர்த்துக் கொள்ள விரும்பினார். வாமனராக அவதரித்தார். மகாபலியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார். திருமாலின் தந்திரத்தை அறிந்த சுக்ராச்சார்யார் மகாபலியை எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். ஆனாலும் மகாபலி கேட்கவில்லை. கடவுளே கேட்கும் போது இல்லை என்று சொல்வது தர்மம் ஆகாது என்று கூறி தங்கள் காலால் மூன்றடி மண்னை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். திடீரென விஸ்வரூபம் எடுத்த வாமனர் விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டையும் தன் ஈரடியால் வசப்படுத்தி கொண்டார். மூன்றாவது அடிக்கு எங்கே இடம்? என்ற திருமாலிடம் மூன்றாவது அடிக்கு என்னையே தருகிறேன் என்று கூறிய மகாபலி. திருமாலின் திருவடிகளின் கீழே அமர்ந்தார். அவருடைய பக்தியை மெச்சி திருமால் பாதாள லோகத்தையும், சிரஞ்சீவி தன்மையையும் மகாபலிக்கு கொடுத்தருளினார்.
காக்கும் கடவுளான திருமால் வைகுந்த பதத்திற்கே அவனை எடுத்துக் கொண்டாலும் அவனை பூமிக்குள் அழுத்தி அழித்தே தன் பதம் சேர்த்துக் கொண்டார். மனித உருவில் வந்த வாமனப் பெருமாள் அவனை வதம் செய்த தோஷம் நீங்கும் பொருட்டு இத்தலத்திலுள்ள ஈசனை பூசித்தார். ராமர் எப்படி ராவணனை அழித்துவிட்டு அந்தப் பாவம் நீங்க ராமேஸ்வரத்தில் லிங்கத்தை நிறுவி பூசித்தாரோ அதேபோல் இங்கு வாமனர் சிவலிங்கத்தை பூசித்தார். வாமன அவதாரமாக தோன்றி இடைவிடாது வழிபாடு நடத்திய தலமாதலால் சிவனுக்கு வாமனபுரீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று.
தோன்றிய காலம் அறிய முடியாத சுயம்புநாதராக இருக்கிறார் இந்த வாமனபுரீஸ்வரர். எப்போதும் கருவறை திரைமூடியிருக்கும். சேக்கிழார் வழிபட்ட தலம் என பல பெருமைகளை கொண்டு மூர்த்தி, தீர்த்தம், வனம், கிரி, நதி, சங்கமம், ஆரண்யம், பதிகம் ஆகியவற்றால் பிரசித்தி பெற்ற திவ்ய தலமிது.
சிவபெருமானாகிய லிங்கமூர்த்தி வீற்றிருக்கும் மூலகிரகம் கர்ப்பகிரகம் என்றழைக்கப்படவும், பிற கோயில்களிலும் இந்த பெயர் வழக்கம் பின்பற்றப்படவும் இந்த தலமே ஆதாரம். இத்தலத்தில் சம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இத்தலத்தின் கிருஷ்ணை என்ற கெடிலம் நதிக்கரையில் மகாலெட்சுமி தவம் செய்திருக்கிறாள். படைக்கும் கடவுளாகிய பிரம்மாவின் துணைவி சரஸ்வதி ஸ்வேத நதியாக பாய்ந்து, கெடிலத்தில் வடக்கு முகமாக சங்கமமாகிறாள். இது சங்கம க்ஷேத்திரத்தில் நான்காவது பிரம்ம திருத்தலமாக விளங்குகிறது. எனவே வாமன பிரம்ம திருத்தலம் என்ற பெயரும் இதற்கு உண்டு.
இத்தலம் சூரியனால் உண்டாக்கப்பட்டு பூசித்ததாக வரலாறு. எனவே இங்கு விநாயகர் முதல் சண்டேசுவரர் வரை அனைவருக்கும் ஆதித்ய விமானம் அமைந்த ஒரே கோயில் இதுவே. திருமால் வாமன அவதாரத்தில் இங்கு வழிபாடு நடத்திய போது இறைவன் தன் ருத்ர கணங்களில் பீமசங்கரன் என்பவரை பூசையை காவல் காக்கும் காவல் கணமாக நியமித்தார். எனவே அவருக்கு வழிபாடுகள் செய்த பின்னரே இறைவனை காணக்கூடிய வழக்கம் இங்கு கடைபிடிக்கப்படுகிறது. பூசை ஆரம்பிக்கும் முன் பீமசங்கர பூசையை முடித்து விடுவார்கள். மீண்டும் பூசிக்கும் போது பீமசங்கரரை வழிபட்டு அவருடைய அனுமதியோடு பூசையை துவங்குவார்கள். எனவே சிவாச்சாரியார்களுக்கு இது முதன்மை தலமாக விளங்குகிறது
திருமணம் ஆகாத பெண்களோ, ஆண்களோ இக்கோயிலுக்கு தவறாமல் வந்து வாமனபுரீஸ்வரரையும் அம்புஜாக்ஷியையும் வழிபட்டு சென்றால் உடனடியாக திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதற்காக சிறப்பு பூசைகளும் நடத்தப்படுகிறது. அதே போல் நோய் நொடி தீரவும், சகல செல்வங்களை பெறவும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த கிரிதலத்தில் மலையில் தீபம் ஏற்றும் போது இறைவனுடைய நெற்றிக்கண் ஒளிர்வது போலவே இருக்கும். இந்த மலைக்கு ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி என்ற பெயர்களும் உண்டு.
கோயில் அமைப்பு : 5 நிலை ராஜகோபுரம் கொண்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். தெற்கு பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கு வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்திலுள்ள பக்கவாட்டு வாயில் வழியே உள் பிரகாரத்தை அடைந்து விநாயகர், அறுபத்துமூவர், சப்தமாதர்கள், யுகலிங்கங்கள், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. உள்ளே கருவறையில் மூலவர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்கு மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரைபோடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால் திரையிடப்பட்டுள்ளது. தீபாராதனையின் போது திரையை விலக்கி சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கும் பேறு பெறலாம். இறைவனை மறைத்திருக்கும் திரைச் சீலையில் பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை, பூஜை முதலில் பீமருத்திரருக்கு தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.
காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 முதலி இரவு 8-30 வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : நெல்லிக்குப்பம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை