அழகிய நாதர் கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 6 கி.மீ தொலைவில் உள்ளது. விழுப்புரம்-சூரப்பட்டு நகரப்பேருந்து திருவாமாத்தூர் வழியாக செல்கிறது.
சுவாமி : அழகிய நாதர், அபிராமேசுவரர்
அம்பிகை : அழகிய நாயகி, முத்தாம்பிகை
தலமரம் : வன்னி, கொன்றை
தீர்த்தம் : ஆம்புலம், பூம்பொய்கை, தண்ட தீர்த்தம், பம்பைஆறு
பதிகம் :
திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் -1
திருத்தலச் சிறப்புகள்: பசுக்கள் தவம்புரிந்து கொம்புகளைப் பெற்ற பதி. இராமபிரான், பிருங்கி முனிவர், கோடி முனிவர் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற பதி. மூவர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். இறைவியின் சாபத்தால் பிருங்கு முனிவர் வன்னி மரமானார். அவர் இத்திருவூரில் இறைவியை வழிபட்டுச் சாபவிமோசனம் பெற்றார்.
கோயில் பம்பை ஆற்றின் கரையில் உள்ளது. இங்குப் பாதாள நந்தி உள்ளது. புலவர் புராணம் பாடிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சமாதி இங்கு உள்ளது. இரட்டைப் புலவர்கள் இவ்வூருக்குக் கலம்பகம் பாடியுள்ளனர். சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பிகை மேற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இங்கு விநாயகர், முருகர், இராமபிரான், சீதாப் பிராட்டியர், இலட்சுமணர், ஆஞ்சனேயர், நடராஜர், நால்வர், கஜலட்சுமி, நவக்கிரகம், 63 நாயன்மார்கள், சண்டேசுவரர், பைரவர், பிரம்மர், துர்க்கை, பிட்சாடணர், சகஸ்ரலிங்கம், சட்டநாதர், சாகி, விசுவநாதர், அருணாசலேசுவரர், சப்தமாதர், தட்சிணாமூர்த்தி முதலிய சந்நிதிகள் உள்ளன.
தலவரலாறு : ஆதிகாலத்தில் பசுக்கள் கொம்பில்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப்பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்கவரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களை காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பைநதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூசித்த காரணத்தால் இத்தலம் 'ஆமாத்தூர்' என்று பெயர் பெற்றது. இந்த திருஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் மூன்றினாலும் சிறப்புடையது.
அபிராமேஸ்வரர் என்றும், அழகிய நாதர் என்றும் வழங்கும் இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜைகள் செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் காணப்படுகிறார். இறைவன் சந்நிதியும், இறைவி சந்நிதியும் ஒன்றையொன்று எதிர் நோக்கியவாறு அமைந்துள்ளது. அம்பிகையின் ஆலயத்திற்குப் பெரிய கோபுரம் உண்டு. ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டு முதல் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அச்சுதராயர் என்ற இவ்வாலய திருப்பணி செய்தவரின் சிலை அமைந்துள்ளது. மதங்க முனிவரால் உருவாக்கப்பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. இதில் நீராடாமல் நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டால் சிவபுண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.
வட்டப்பாறை : அம்பிகை சந்நிதியின் பிரகாரச் சுற்றில் தென்புறம் ஒரு வட்டப் பாறை இருக்கிறது. அருகில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது இந்த வட்டப்பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஊரில் உள்ள அனைவரும் வட்டப்பாறையின் மீது கை வைத்து சத்தியம் செய்து தங்கள் வழக்குகளை தீர்த்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இந்த வட்டப்பாறை ஒரு சிறிய சந்நிதி. இதன் முன்பொய் சொல்வோர் மீளாத் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று ஐதீகமுண்டு.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : விழுப்புரம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை