அருணாசலேஸ்வரர் கோவில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரே திருவண்ணாமலை ஆகும். திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை வேலூர் கடலூர் சிதம்பரம் சேலம் திருச்சி விழுப்புரம் ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.
சுவாமி : அண்ணாமலையார், அருணாசலேசுவரர்
அம்பிகை : அபீதகுஜாம்பாள் , உண்ணாமுலையம்மை
தலமரம் : மகிழம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
திருத்தலச் சிறப்புகள்: பஞ்சபூதத்தலங்களுள் அக்கினி தலமாக போற்றப்படுகிறது. இந்தியாவிலுள்ள சிவஸ்தலங்களுள் நினைத்தாலே முக்தி வழங்கும் தலமாக சிறப்பு பெறுகிறது. சிவபெருமான் ஜோதி வடிவாய் தோன்றிய வடிவமே இங்கு மலையாக உள்ளது. இத்திருத்தலம் இரமண முனிவர் வாழ்ந்து அருள் புரிந்த தலம். இரமணாசிரமும் தனிப்பெருமையுடையது. மேலும் சேஷாத்திரி சுவாமிகள் சமாதியும், தீர்த்தங்கள் பலவும் உள்ள தலமாக சிறப்பிக்கப்படுகிறது. முருகப் பெருமான், அருணகிரிநாதரை ஆட்கொண்ட தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம்.
கோயில் அமைப்பு : இத்தலம் 6 பிரகாரங்களுடன் 7 கோபுரங்களும் பல மண்டபங்களும், பல சந்நிதிகளையும் கொண்டுள்ளது. இத்திருக்கோயிலின் கீழ்க் கோபுரம் 11 நிலைகளுடன் 217 அடி உயரம் உடையது. பெரிய கோயில் பிரம்மனும், திருமாலும் தேடி காணாத நிலையில் அனற் பிழம்பாய் உயர்ந்து ஓங்கி அண்ணாமலையான இறைவன் எழுந்தருளிய பதி. இறைவன் வள்ளாள மன்னனுக்கு மகன்மை கொண்ட சிறப்புடையது. இங்கு இறைவன் சுயம்புலிங்க வடிவில், நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடை அணிந்து அருணாச்சலேஸ்வரர் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளார். இத்தலத்தின் கிரிவலம் மிகவும் சிறப்புடையது. மலையைச் சுற்றி கோயில்கள் உள்ளன. இங்கு விநாயகர், கம்பத்திளையனார், முருகர், வித்யாரேஸ்வரர், பிரம்மலிங்கம், ஏகாம்பரேசுவரர், பழநியாண்டவர், நால்வர், சப்தகன்னியர், ரேணுகாம்பாள் சித்திரகுப்தர், காளத்தீஸ்வரர், அறுபத்து மூவர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், வேணுகோபால சுவாமி, கஜலட்சுமி, பிட்சாடணர், நடராஜர் சபை, ஜுரகரேசுவரர், பதஞ்சலி, முனிவர் அகத்தியர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள், பாதாளலிங்கேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை முதலிய சந்நிதிகள் உள்ளன.
வித்யாதரர்கள் இருவர், ஒரு முனிவரின் சாபத்தால் பூனையாகவும், குதிரையாகவும் மாறினர். பின் இத்திருவூரை வலம் வந்தமையால் சாபம் நீங்கினர்.
காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று போற்றப்படுகிறது. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.
தலவரலாறு : ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப்பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் ஜோதியின் அடி முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு ஜோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி காட்சி கொடுத்தார். அதுவே இத்தலமான அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏற்றார் போல் லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.
பெளர்ணமி அன்று இரவு மலை சுற்றி இறைவனை வணங்குதல் (கிரிவலம்) தொன்றுதொட்டு இன்றும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கார்த்திகை தீபத்திருநாள் அன்று மலையின் மேல் ஏற்றும் தீபத்தினை காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு கூடுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : திருவண்ணாமலை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு