கடம்பவன நாதேஸ்வரர் கோவில், திருகடம்பந்துறை
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தில் குழித்தலை ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் வேறு பெயர் கடம்பந்துளை ஆகும். இத்தலம் தற்போது குழித்தலை, கடம்பர் கோயில் என்று வழங்கப்படுகிறது. கரூரிலிருந்து 23 கி.மீ தொலைவிலும், திருச்சியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் உள்ளது.
சுவாமி : கடம்பவனேஸ்வரர், கடம்பவன நாதர்
அம்பிகை : பாலகுஜாம்பாள், முற்றிலாமுலையம்மை
தலமரம் : கடம்பு
தீர்த்தம் : காவிரி
பதிகம் : திருநாவுக்கரசர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் தேவர்கள், கண்ணுவ முனிவர், பிரம்மன், திருமால், முருகப் பெருமான், சப்த கன்னியர், அகத்தியர், தேவசன்மா ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
இத்தலத்தில் சுவாமி வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இங்கு விநாயகர், முருகர், நவக்கிரகம், அறுபத்து மூவர், விசுவநாதர், கஜலட்சுமி, சப்த கன்னியர், முதலிய சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள இரண்டு நடராஜர் மூர்த்தங்களுள் ஒன்றில் முயலகன் இன்றி அருள் பாலிக்கிறார்.
காவிரிக் கரையில் கடம்பவன நாதர் கோவில் வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்கள் எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கி தான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான் இறைவன் கடம்பவன நாதர் லிங்கத்திருவுருவுக்குப் பின்னால் சப்த கன்னியர் உருவச் சிலைகள் இருக்கின்றன. வெளிப் பிரகாரத்தின் வடமேற்குபகுதியில் இறைவி முற்றிலா முலையம்மை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள் இரண்டு நடராஜர் மூர்த்திகள் இருக்கின்றன.
தல வரலாறு: தூம்ரலோசனன் என்ற அசுரன் தரும் துன்பங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோத, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன் அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் அசுரம் ஒளிந்து கொள்ள, அங்கு வந்த சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன் தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர். அம்பாளின் கூற்றுப்படி இத்தலத்தில் சிவனை வேண்டிக் கொண்டு சாப விமோசனம் பெற சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். அசுரனை அழித்தால் தங்களுக்கு மீண்டும் தோஷம் ஏற்படும் அன்று கருதிய சப்தகன்னியர், அசுரனை அழித்து தங்களைக் காக்கும்படி இறைவனிடர் முறையிட்டனர். சிவபெருமானும் அசுரனை அழித்தார். இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு இறைவன் பாதுகாப்பாக இருப்பதாக ஐதீகம்.
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : குழித்தலை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை