பாலைவன நாதர் கோவில், திருப்பாலைத்துறை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் பாதையில் உள்ள பாபநாசம் ரயில்நிலையத்திலிருந்து வடகிழக்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
சுவாமி : பாலைவனேசுவரர், பாலைவனநாதர்
அம்பிகை : தவளாம்பிகை, தவள வெண்ணகையாள்
தலமரம் : பாலை
தீர்த்தம் : இந்திர தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், இமய தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய புலியின் தோலை உரித்து ஈசன் அணிந்து கொண்டார். வசிட்டர், ராமர், சீதை, லட்சுமணன், தௌமியர், அர்சுனன் ஆகியோர் வழிபட்ட திருவூர். பாண்டவர்களின் வனவாச காலத்தில் தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அர்சுனன் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது.
இத்தலம் முதலாம் குலோத்துங்கன் விக்கிரம சோழன் ஆகியோரது காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இத்தலத்தில் இறைவன் இறைவி இருவரும் கல்யாணக் கோலத்தில் காட்சி தருகின்றனர். இங்கு விநாயகர், முருகர், மகாலட்சுமி, வசிட்டர் பூசித்த லிங்கம், மலையத்துவசன் வழிபட்ட லிங்கம், அறுபத்து மூவர், நடராஜர்சபை, பைரவர், சூரியன், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை முதலிய சந்நிதிகள் உள்ளன.இத்தலத்திற்கு அருகில் உள்ள பாபநாசத்தில் இராமபிரான் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 108 சிவலிங்கக்கோயில் உள்ளது.
கோவில் அமைப்பு: ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது. ராஜகோபுரத்தில் சிற்பங்களில்லை. கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது. உள்ளே நுழைந்தால் கொடிமரமில்லை. விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. வெளிப் பிரகாகாரத்தின் வலதுபுறம் ஒரு பெரிய செங்கல்லால் கட்டப்பட்ட நெற்களஞ்சியம் காட்சி தருகிறது. வட்ட வடிவில் கூம்பு முனையுடன் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் சுமார் 3000 கலம் நெல் கொட்டி வைக்கும் அளவு பெரியதானது. தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.இத்தலம் அரசவனம், பிரம்மவனம், பாலைவனம், புன்னாகவனம் என பல பெயர்களில் வழங்கப்படுகிறது. கோயிலின் கீழ்பகுதி கருங்கல்லிலும் மேல்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது. கோயிலுள் பெரிய நெற்களஞ்சியம் உள்ளது. வெளிப் பிரகாரத்தில் இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக, சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளபடி உள்ளது. இதுவும் கிழக்கு நோக்கிய சந்நிதியே. அம்பாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. உள்நுழைந்து கருவறை சுற்றுப் பிரகாரத்தில் வலம் வரும்போது விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர் பூசித்த சிவலிங்கம், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட இலிங்கங்கள் ஆகியவை உள்ளன. அறுபத்துமூவர் மூலவர்த் திருமேனிகள் உள்ளன. நடராசசபை உள்ளது. காலபைரவர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் தனியே உள்ளது.
சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அபம்பாள் சந்நிதி அமைந்துள்ளதால் இத்தலம் திருமணத் தலமாக விளங்குகிறது. இப்பகுதி மக்கள் திருமண நிச்சயதார்த்தம், திருமணம் ஆகியவற்றை இக்கோவிலில் நடத்துகின்றனர்.
தினந்தோறும் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதலி இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : பாபநாசம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை