நீலகண்டேஸ்வரர் கோவில், திருநீலக்குடி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் ஆடுதுறைக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் தற்போது தென்னலக்குடி என வழங்கப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 24 கி.மீ தொலைவிலும் இத்ததலம் அமைந்துள்ளது.
சுவாமி : நீலகண்டேசுவரர், வில்வாரண்யேசுவரர், மனோக்ஞநாத சுவாமி, காமதேனுபுரீசுவரர், தைலாப்பியங்கேசர்
அம்பிகை : அநூபமஸ்தனி, பக்த பீஷ்டதாயினி-இரு அம்பாள் தனித்தனி சந்நிதிகள்
தலமரம் : ஐந்து இதழ்களுடைய வில்வம் (பஞ்ச வில்வம்)
தீர்த்தம் : தேவி, பாரத்வாஜ, மார்க்கண்டேய, பிரம க்ஷீர குண்ட தீர்த்தங்கள்
பதிகம் : திருநாவுக்கரசர் - 1
திருத்தலச் சிறப்புகள்: மூலவர் அபிஷேகத்தின்போது சாத்தப்படும் எண்ணெய் வழிதலின்றி லிங்க மூர்த்தமே உறிஞ்சிக் கொள்ளும் அற்புதம் உடையது. தவமிருக்கும் அம்பாளே சுவாமிக்கு தலாபிஷேகம் செய்வதாக ஐதீகம். ஆகவே அம்பாள் முன் எண்ணெய் வைத்து பின்பு எடுத்தச் சுவாமிக்கு தேய்ப்பர். இங்குப் பலாச்சுளை நைவேத்யம் தனிச் சிறப்புடையது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும். எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு பதில் சொர சொரப்பாகவே இருக்கிறது. ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெய் உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும்.
கோவில் அமைப்பு: இத்தலத்தில் இராஜ கோபுரம் இல்லை. இரண்டு நுழைவாயிலகள் உள்ளன. முதல் நுழைவாயில், 2-ம் நுழைவாயில் இரண்டிறகும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது. கருவறையில் இறைவன் ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி என்கிற ஸ்ரீ தவக்கோல அம்மை. 2-வது அம்மனின் பெயர் திருமணக்கோலத்தில் உள்ள ஸ்ரீஅனூபமஸ்தநி என்கிற ஸ்ரீஅழகாம்பிகை.
ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருந்தாலும், கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். ஆனால் சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக் கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போகும் என்று சொல்லப்படுகிறது.
இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்ள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட தலமாக இக்கோவில் விளங்குகிறது. மேலும் பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் என்ற பெருமையும், வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. ஸ்ரீ மனோக்கியநாத சுவாமியை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து இறைவனை வழிபடலாம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
தல வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி
பாற்கடலை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வநிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
இத்தலம் கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்தில் பிரம்மன், வருணன், மார்க்கண்டேயர், ரோமச முனிவர், தேவ கன்னியர் முதலியோர் பூசித்துப் பேறு பெற்றனர். இங்கு விநாயகர், முருகர், சூரியன், பிரம்மலிங்கம், விசுவநாதர், மகாலட்சுமி, நவக்கிரகம், பைரவர் முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்திருத்தலம் தேவர்கள் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றிய நஞ்சை உண்டு நீலகண்டனான இறைவன் எழுந்தருளியுள்ளதால் திருநீலக்குடி எனப் பெயர் பெற்றது. நவக்கிரகதோஷம், ராகு, கேது தோஷங்கள், மரண பயம் முதலான இடையூறுகளை நிவர்த்திக்கும் பிரார்ததனைத் தலம்.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : ஆடுதுறை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை