மாகாளநாதர் கோவில், அம்பர் மாகாளம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் 'திருமாகாளம்' என்று வழங்கப்படுகிறது. மேலும் பேரளத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் அரிசில் ஆற்றின் வடகரையில் உள்ளது இத்தலம்.
சுவாமி : மாகாளேசுவரர், காளகண்டேசுவரர்
அம்பிகை : பட்சயாம்பிகை
தலமரம் : கருங்காலி, மருதமரம்
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 3
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் அம்பன், அம்பாசுரன் என்னும் அசுரர்களைக் கொன்ற பாவம் தீர காளி பூசித்து வழிபட்ட தலம். சோமாசி மாறநாயனார் சோமயாகம் செய்த இடம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். இத்தலத்தில் உள்ள அதிகார நந்தி மானிட உருவம் கொண்டு காணப்படுகிறது.
சோமாசி மாறநாயனார் திருவாரூரில் இருக்கும் சுந்தரருக்கு நாள்தோறும் தூதுவளை கீரை அனுப்பி வந்தார். இதையறிந்த சுந்தரர் அதற்குரிய காரணத்தைக் கேட்க அவர் தாம் நடத்தவுள்ள சோமயாகத்தில் திருவாரூர் இறைவன் எழுந்தருளி அவிர்பாகத்தையேற்று அருள்புரியுமாறு வேண்டினார். இறைவன் அவ்வாறு அருள் புரியலானார். யாகம் நடைபெற்றிருக்கும்போது இறைவன் வேடனாகவும், அம்பிகை வேடுவச்சியாகவும், விநாயகரையும், முருகரையும் சிறுவர்களாக்கி, வேதங்களை நாய்களாக்கி, இறந்த கன்றைத் தன் தோளில் கிடத்தித் தலையில் முண்டாசு கட்டியவராக அங்கு வந்தார். நாயனார் அச்சம் உற்று நிற்க, விநாயகர் இறைவனைக் குறிப்பால் உணர்த்த உணர்ந்து வணங்கினார். இறைவன் மகிழ்ந்து அருள் புரியலானார். இதுவே காட்சி கொடுத்த மூர்த்தமாகப் போற்றப்படுகிறது.
கோவில் அமைப்பு: அரிசிலாற்றின் வடகரையில் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழி உள்ளே சென்றால் விசாலமான முற்றம் உள்ளது. இறைவன் சந்நிதிக்கு நேரே பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. வடகிழக்கு மூலையில் கல்யாண மண்டபம் உள்ளது. முற்றவெளியை அடுத்து அதிகார நந்தி கோபுரம் என்றழைக்கப்படும் 3 நிலை இரண்டாம் கோபுரம் உள்ளது. உள்ளே மகாமண்டபத்தில் நாகநாதசுவாமி லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். எதிரில் நந்தியெம் பெருமான், அவருக்கு வலதுபுறம் அம்பிகை அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். நாகநாதசுவாமிக்குப் பினபுறம் நாககன்னிகை யோகாசனத்தில் வீற்றிருக்கிறாள். நாக கன்னிகை இத்தலத்தில் இறைவனை வழிபட்டு நற்கதி பெற்றாள். காளம் என்றால் நாகம் என்ற பொருளுண்டு. காளம் வழிபட்டதால் மாகாளம் என்று இத்தலம் பெயர் பெற்றது என்றும் கூறுவர். வடக்குப் புறம் சோமாசிமாற நாயனாருக்குக் காட்சி கொடுத்த நாயகர், நடராஜர் மற்றும் பிற உற்சவமூர்த்திகளைக் காணலாம்.
கருவறையில் காளி தன் கையால் பிடித்து வைத்த சிறிய லிங்கத் திருமேனியுடன் இறைவன் சிறிய தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார். கருவறையை வலம் வரும்போது தெற்குப் புறத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. அடுத்து 63 மூவர், பரிவார கணபதி, தட்சிணாமூர்த்தி, உதங்க, மதங்க முனிவர்கள், தனுசு சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். இங்குள்ள தனுசு சுப்பிரமணியர் வடிவம் வில்லேந்தியவாறு மிக்க அழகாகவுள்ளது. உட்பிரகாரத்தை வலம் வந்துவிட்டு வெளிப் பிரகாரம் வந்தால் அங்கு தென்மேற்கு மூலையில் காளி கோவில் உள்ளது.அன்னை, அம்பாசுரனை வதம் செய்தபின், அந்த தோஷம் நீங்க மாகாளநாதரை வழிபட்ட மாகாளியாவாள்.
அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம் என்ற இரண்டு கோவில்களுக்கும் இடையில் சோமாசிமார் நாயனார் செய்த யாககுண்டம் உள்ளது. ஆண்டு தோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று, இங்கு யாக உற்சவம் நடைபெறும். இத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர். இறைவன் சோழ மன்னன் ஒருவனுக்கு தனது மணக்கோலத்தைக் காட்டியருளிய தலம். அம்பாள் சம்காசுரனை வதம் செய்ததும் இத்தலத்தில் தான். புன்னை மரம் தலவிருட்சமாகும். இறைவன் இறைவி பறையர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோவிலில் உள்ளனர். சோமாசிமார் நாயனார் அவர் மனைவி சுந்தரர் பரவை நாச்சியார் ஆகியோரின் உருவச்சிலைகளும் இக்கோவிலில் உள்ளன. சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.
தல வரலாறு: 63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமார் நாயனார் நடத்திய யாகத்திறகு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும். சோமாசியார் தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார். இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்தும் சோமயாகத்திற்கு இறைவன் நேரில் எழுந்தருளினார். ஆனால் பறையன் உருவில் எழுந்தருளுகிறார். நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக் கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்து கொண்டு யாகத்திற்கு எழுந்தருளுகிறார். யாகத்தை நடத்திவந்த அந்தணர்கள், பறையன் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடி விடுகின்றனர். தந்தை தான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார். ஆகையால் சோமாசிமாள நாயனார் வந்திருப்பது இறைவன் எனத் தெரிந்து, தனது மனைவியுடன் பறைத் தமபதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்கள். இறைவனும் தனது பறையன் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார். மறுநாள் மகநாளில் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்தருளினார். சோமாசிமாள நாயனாருக்கு இறைவன் வந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்திய அவ்விநாயகரை அச்சந்தீர்த்த விநாயகர் என்றழைக்கின்றனர்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இவ்வாலயத்தின் சிறப்பு.
பூந்தோட்டம் சென்று அங்கிருந்து அம்பர் மாகாளம், அம்பர் பெருந்திருக்கோவில் சிவஸ்தலங்களை தரிசித்த பின்னர் பூந்தோட்டத்திற்கு மிக அருகில் திருவாரூர் சாலையில் உள்ள முடிகொண்டான் ஊரில் அமைந்துள்ள இராமர் கோவிலை அவசியம் தரிசியுங்கள். இராவண வதம் முடித்துத் திரும்பும் வழியில் பாரத்வாஜரின் ஆசிரமத்திற்கு வருகை தந்த இராமபிரானுக்கு விருந்தளிக்க விரும்பினார் மாமுனிவர். என் மூதாதையர் இக்ஷ்வாகுவிற்கு, பிரம்மாவினால் அளிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதர் விக்ரகம் அயோத்தியில் உள்ளது. அவரை வணங்காமல் அன்னம் ஏதும் அருந்தமாட்டேன் என்றார் இராமர். தனது தவவலிமையால், அயோத்தியிலிருந்து அந்த ரங்கநாதர் சிலையை வரவழைத்து, உரிய முறையில் பூஜை செய்தபின், பாரத்வாஜர் விருந்தோம்பலை முடித்தார். தலத்திலேயே பக்தர்களுக்கு பட்டாபிராமனாக, முடிசூடிய இராமனாக தரிசனம் தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : பூந்தோட்டம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை