சகலபுவனேஸ்வரர் கோவில், திருமீய்ச்சூர் இளங்கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது திருமீயச்சூர் மேகநாதர் கோயிலின் உள்ளே இத்தலம் உள்ளது.
சுவாமி : சகலபுவனேசர்
அம்பிகை : மின்னுமேகலையாள், மேகலாம்பிகை
பதிகம் : திருநாவுக்கரசர் - 1
திருத்தலச் சிறப்புகள்: திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் திருமீயச்சூர் இளங்கோயில் என்றொரு தனிக்கோவில் உள்ளது. இதில் கிழக்கு நோக்கி இறைவன் சகல புவனேச்வரரும், தெற்கு நோக்கி இறைவி மின்னு மேகலையாளும் தனித்தனி கருவறையில் காணலாம். கோஷ்டத்தில் உள்ள க்ஷேத்ர புவனேஸ்வரர் மூர்த்தம் சிறப்பாகவுள்ளது. சந்நிதியில் நேரே சகல புவனேஸ்வரர்,வலப்பக்கத்தில் மேகலாம்பிகையையும் தரிசிக்கலாம். பிராகார வலமுடித்துப் படிகளேறிச் சென்றால் வலப்பால் உற்சவமூர்த்தங்களின் பாதுகாப்பறையும் நேரே மூலவர் தரிசனமும் காணக் கிடைக்கிறது. அம்பாள் லலிதாம்பிகை அமர்ந்த திருக்கோலம். இளக்கோயிலில கோஷ்டத்தில் உள்ள சதுர்முக சண்டேசுவரர் திருமேனி தரிசிக்கத்தக்கது.
கருவறையினைப் புதுப்பிக்கும் பொருட்டு கடவுளை வேறிடத்தில் எடுத்து அமைப்பர். அக்கோவில் இளங்கோவில் எனப்படும். இந்நிலையில் பாடப்பெற்ற திருக்குறிப்பு இளங்கோவில் என்பதால் பெறப்படும். காளி வழிபட்ட திருவூர். திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலம். இங்குள்ள கல்யாணசுந்தரர் பிரார்த்தனை மூர்த்தியாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு நோக்கிய பெரிய கோயில். சந்நிதி வீதியில் முதலில் விநாயகர் கோயில் உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம். பழைமையானது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. உள்ளே சென்றதும் நந்தி பலிபீடம். இடப்பால் விஸ்வநாதர் சந்நிதி. வலப்பால் அம்பாள் சந்நிதி. சுதையாலான துவாரபாலகர்களைத் தொழுது, வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் தரிசனம். உட் பிராகாரத்தில் நாகலிங்கப் பிரதிஷ்டைகள், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் வழிபட்ட லிங்கங்கள், விநாயகர், இந்திரன் எமன் அக்கினி பெயரிலான லிங்கங்கள் சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன.
ஆடிப்பெருக்கு, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சஷ்டி, கார்த்திகைச் சோமவாரங்கள், திருவாதிரை முதலிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. மீயச்சூர் கோயில் செம்பியன்மாதேவி காலத் திருப்பணி பெற்றது.இறைவன், இறைவி சந்நிதிகள் அநேக நேரங்களில் மூடியே காணப்படுகின்றன. அப்பர் பெருமான் தனது பதிகத்தின் 6-வது பாடலில் இத்தல இறைவியை மின்னு மேகலையாள் என்று குறிப்பிடுகிறார். இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தில் வழக்கமாக துர்க்கை காணப்படும் இடத்தில் சதுர்முக சண்டிகேஸ்வரர் காணப்படுகிறார்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : பேரளம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை