சொர்ணபுரீஸ்வரர் கோவில், அரிசிற்கரைபுத்தூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலைவில் அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள இத்தலம் தற்போது அழகார்புத்தூர் என வழங்கப்படுகிறது.
சுவாமி : சொர்ணபுரீசுவரர், படிக்காசு, அளித்த நாதர்
அம்பிகை : அழகாம்பிகை, சௌந்தர நாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : அரிசிலாறு
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: உண்மையானந்த முனிவர் வழிபட்ட தலம். இந்த செருவிலிபுத்தூரில் சிவ வேதியர் குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணை நாயனார். இவர் சொர்ணபுரீஸ்வரருக்கு சிவாகம முறைப்படி தினந்தோறும் பூஜைகள் செய்து வந்தார். வயதாகி தள்ளாமை அவரை ஆட்கொண்டுவிட்ட போதிலும் தினமும் அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை நிறுத்தவில்லை. முதுமையின் துயரம் போதாதென்று ஊரில் கடும் பஞ்சம் ஏற்பட்ட காரனத்தினால் புகழ்த்துணை நாயனாரை வறுமையும் பற்றிக் கொண்டது. அப்படியும் அவர் தன் கடமையிலிருந்து தவரவில்லை. பசியால் வாடி உயிரிழக்க நேர்ந்தாலும் ஆலயப்பணியை துறக்கும் எண்ணம் அவர் மனதில் எழவில்லை. ஒரு நாள் அரிசிலாற்றிற்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு இறைவன் சந்நிதிக்கு வந்தார். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்க குடத்தைத் தூக்கி அபிஷேகம் செய்யச் சென்றார். குடம் தவறி இறைவனின் திருமுடி மீது விழுந்தது. சிவலிங்கத்தின் மீது விழுந்த குடத்தால் சிவபெருமானின் தலையிலேயே அடிபட்டு விட்டதாக எண்ணி புகழ்த்துணை நாயனார் மூர்ச்சித்து விழுந்தார். மூர்ச்சித்து விழுந்த அவர் கனவில் இறைவன் தோன்றி, "பஞ்சம் தீரும் வரை தினமும் உனக்கு பொற்காசு தருகிறேன், அதனார் உன் துனபங்கள் தீரும்" என்று அருளி மறைந்தார். விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார் சுவாமிக்கு அருகிலுள்ள பீடத்தில் பொற்காசு இருக்கக் கண்டார். அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது. அதைக் கொண்டு வறுமையை விரட்டி, இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் இறைவன் திருவடியில் ஐக்கியமானார். இதனால் இறைவனுக்கு "படிக்காசு அளித்த நாதர்" என்ற பெயரும் ஏற்பட்டது. பெரிய புராணத்தில் 'செருவிலி புத்தூர்' என அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு: மூன்று நிலைகளுடைய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. நேரே கருவறை முன் மண்டபத்திற்கு எதிரில் கொடிமர விநாயகர், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். முற்றவெளியின் வலதுபுறம் விநாயகர் சந்நிதியும் இடதுபுறம் ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. இந்த ஆறுமுகர் பன்னிருகரங்களுடன் மயில்வாகனராக விளங்குகிறார். இவருடைய வடிவில் வலப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதல் கரம் சக்கரமும், இடப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதலாவது கரம் சங்கும் ஏந்தியிருப்பது விசேஷம். இம்மாதிரி அமைப்புள்ள ஆறுமுகர் சந்நிதி காண்பதற்கு அரிது.
வெளிப் பிரகார வலம் வரும்போது கிழக்குச் சுற்றில் கஜலட்சுமி சந்நிதியும், பைரவர், நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. கருவறைக்குச் செல்லும் முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர், இருபுறமும் விநாயகர், முருகர் ஆகியோரின் சுதைசிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முன்மண்டபத்தில் இடதுபுறம் நெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. மகாமண்டபத்தில் விநாயகர், நால்வர், புகழ்த்துணை நாயனார் அவர் மனைவியார் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. ஆவணி இமாதம் ஆயில்ய தட்சத்திரத்தன்று புகழ்த்துணை நாயனாரருக்கு குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது.மூலவர் சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் மேற்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். மூன்று கால வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இத்திருத்தலம் கோச்செங்கட் சோழன் திருப்பணி செய்த தலம். இத்தலத்தில் சுவாமி மேற்கு நோக்கியது. பிரகாரத்தில் விநாயகர், முருகர், கஜலட்சுமி, பைரவர், நவக்கிரகம், நால்வர், புகழ்த்துணைநாயனார், சூரியன், சந்திரன், உண்மையானந்த முனிவர் முதலிய சந்நிதிகள் உள்ளன. அண்மையில் உள்ள தலம் திருநறையூர் சித்தீச்சரம்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை