அரநெறியப்பர் கோவில், திருவாரூர் அரநெறி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரான திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருவாரூர் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் அமைந்துள்ளது.
சுவாமி : அரநெறியப்பர், அகிலேசுவரர்
அம்பிகை : புவனேசுவரி
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம், செங்கழுநீர் ஓடை
பதிகம் : திருநாவுக்சரசர் - 2
திருத்தலச் சிறப்புகள்: இது திருவாரூர் கோயிலுக்குள் பிரகாரத்தில் தனிக் கோயிலாக உள்ளது. இறைவர் சன்னிதி திருவாரூர்த் திருமூலட்டானம் என்னும் திருக்கோயிலின் இரண்டாம் சுற்றில் உள்ளது. நமி நந்தியடிகள் நாயனார் திருவருளால் திருக்குளத்து தண்ணீரை நெய்யாக நினைத்து தண்ணீரால் திருவிளக்கு ஏற்றி திருப்பணி புரிந்த சன்னிதி உள்ளது. திருநாவுக்கரசர் பாடல் பெற்றது. இங்கு எமசண்டர் (எமனே சண்டராக) ஆதிசண்டர் (சண்டேஸ்வரர்) என இரண்டு சண்டேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. கமலாலயக் குளக்கரையில் சுந்தரர் பொன் எடுக்கும்போது மாற்று உரைத்து சரி பார்த்த 'மாற்றுரைத்த விநாயகர்' சந்நிதி உள்ளது.
தலப் பெருமை : சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அரநெறியப்பர், அசலேசுவரர் என்ற பெயர்களுடன் எழுந்தருளியுள்ளார். இப்பெருமானின் அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தான கோபுரத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுவதில்லை என்ற தனி மகிமை வாய்ந்தது. ஆறு மாதத்திற்குள் இறப்பவர் நோக்கினால் அந்த நிழலும் தெரியாது என்பது மற்றொரு சிறப்பு. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. அரநெறியப்பர் கோயிலை செம்பியன் மாதேவியார் கருங்கல்லால் கட்டி, இரு திருமேனிகளை எழுந்தருளுவித்ததோடு நாடோறும் பூஜைக்கும் கோயிலைப் பழுது பார்ப்பதற்கும் ஆக 234 காசுகளைக் கொடுத்ததையும் இத்தலத்திலுள்ள கலவெட்டுகள் குறிப்பிடுகின்றன.
ஒரு மன்னருடைய வேண்டுகோளின்படி இறைவன் சலியாது எழுந்தருளி இருப்பதால் அசலேசர் எனப் பெயர் பெற்றார். அசலேஸ்வரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது.
தல வரலாறு : 63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தி அடிகள் இக்கோவிலில் சிவலிங்க வழிபாடு செய்து வந்தார். திருவாரூரில் பிறந்தவர்களை எல்லாம் சிவரூபமாக கருதியவர் இவர். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்த நமிநந்தி அடிகள், கோயில் விளக்குகளில் உள்ள நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டு விளக்கின் ஒளி மங்க்த் தொடங்கியது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை. தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும், விளக்கும் அதற்குள் அணைந்துவிடும் என்று நினைத்த நமியந்தி அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று விளக்கிற்காக சிறிது நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட விட்டில் சமணர்கள் வாழ்ந்து வந்தனர். கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக தேவையில்லை, அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்று என்று சமணர்கள் பரிகாசம் செய்தனர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து இறைவனிடம் மனமுருகி வேண்ட இறைவன் அசரீரியாக அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று என்று கூறினார். இதைக்கேட்ட நமிநந்தி அடிகள் மிகுந்த சந்தோஷத்துடன் சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். சிவபெருமானின் அருளால் தண்ணீரால் கோவில் விளக்கெல்லாம் எரியச் செய்து, சமணர்களின் கொட்டத்தை அடக்கி இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார். நமிநந்தி அடிகள் நாயனார் இத்தலத்தில் தண்ணீரால் விளக்கேற்றிய செய்தியை தனது தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தலத்தில் ரணவிமோசனேசுவரர் சந்நிதியில் சென்று தொழுதால் ஆறாத புண்கள் ஆறும். கடன்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. தியாகேசர் சந்நிதியில் தேர் வடிவில் ஒரு விளக்கு உள்ளது.
இங்கு பஞ்சமுக வாத்தியம் சிறப்பான ஒன்றாகும். ஒன்று பாம்பு சுற்றியது போலவும், ஒன்று ஸ்வஸ்தி வடிவிலும், ஒன்று தாமரைப்பூ போலவும், ஒன்று எவ்வித அடையாளமின்றியும், நடுவில் உள்ளது பெரியதாகவும் இருக்கும். மான் தோலால் கட்டப்பட்டது. இது ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும் ஐந்திலும் சேர்ந்து அடிக்கும் போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும். இங்கு வாசிக்கப்படும் நாதஸ்வரம் மிகப்பெரியது.
தினந்தோறும் காலை 5.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திருவாரூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு