பாதாளேசுவரர் கோவில், திருஅரதைப் பெரும்பாழி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலியமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் கும்பகோணம் - அம்மாபேட்டை சாலைவழியில் உள்ள அவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் தற்போது அரித்துவாரமங்கலம் என்று வழங்கப்படுகிறது. தஞ்சையிலிருந்து நகரப் பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்கிறது.
சுவாமி : பாதாளேசுவரர், பாதாள வரதர்
அம்பிகை : அலங்காரவல்லி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். ஈசன் முன்பு திருமால் பன்றி வடிவம் கொண்டு பூமியைத் துவாரம் செய்தமையால் அரித்தஷதுவாரமங்கலம் எனப்பெயர் பெற்றது. இங்கு ஈசன் வராக அவதாரம் எடுத்த திருமாலின் கொம்பை ஒடித்து அணிந்து கொண்ட தலமாகும். இத்தலத்தை 'சமீவனம்' என்று வழங்குகின்றனர். திருமால் பன்றியாக தோன்றி இறைவன் முன்பு தோண்டிய பள்ளம் உள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதி. இங்கு விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, நடராஜர், காசி விசுவநாதர், சனி பகவான், சூரியன், சந்திரன், பைரவர், திருஞானசம்பந்தர், சுந்தரர், பஞ்சமாதர்கள், லிங்கோற்பவர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
தல வரலாறு: பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். முடியவில்லை போக விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார் என்று தலபுராணம் கூறுகிறது. எனவே தான் இத்தலம் அரித்துவாரமங்கலம் ஆனது. சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல்வைத்து மூடியுள்ளார்கள்.
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. மூலவர் சுயம்பு லிங்க மூர்த்தி வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் பன்றியின் கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது. சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் ஹரித்துவார் தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : சாலியமங்கலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை