திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்திருவூர் தற்போது திருப்புனவாசல் என்றழைக்கப்படுகிறது. ஆவுடையார் கோயிலுக்குத் தெற்கே 25 கி.மீ. தொலைவில் உள்ளது. அறந்தாங்கி திருவாடானை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. அறந்தாங்கி ரயில் நிலையத்தின் தெற்கே 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்பெருந்துறைக்கு தெற்கே 21 கி.மீ சென்றும் இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர், மகாலிங்கேசுவரர்
அம்பிகை : பிருகந் நாயகி, பெரிய நாயகி
தலமரம் : சதுரக்கள்ளி, குருந்தை, மகிழம், புன்னை
தீர்த்தம் : இந்திர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற 14 சிவலிங்கங்களும் இங்கு எழுந்தருளியுள்ளனர். வேதங்கள் வழிபட்ட தலம். திருஞானசம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம். இத்தலத்தின் வேறு பெயர்களாவன: விருத்தபதி விருத்தகாசி இந்திரபுரம் பிரமபுரம் வச்சிரவனம் கைவல்ய ஞானபுரம் தட்சிண சிதம்பரம் ஆகியவையாகும்.
இத்தலத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கோயில்கள் உள்ளன. மூலவர் பெரிய சிவலிங்கத் திருமேனி. 9 அடி உயரம் கொண்டது. நந்தியும் ஆவுடையாரும் மிகப் பெரியவனவாக எழுந்தருளியுள்ளனர். லிங்கத்திருமேனிக்கு 3 முழப் பரிவட்டமும் ஆவுடையாருக்கு 30 முழ பரிவட்டமும் வேண்டும் என்பர். இங்குள்ள நடராஜர் சபை சிவஞான சபையாகும். காளி தேவி சிறப்பு மூர்த்தியாக உள்ளது. இங்கு விநாயகர் முருகர் சூரியன் பைரவர் சந்திரன் வல்லப கணேசர் தண்டபாணி நடராஜர் சோமாஸ்கந்தர் நால்வர் சேக்கிழார் அகத்திய லிங்கம் நான்முகன் முதலிய சந்நிதிகள் உள்ளன.
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய லிங்கம் புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில். ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார். லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் "பிரம்ம தீர்த்தம்" என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார். இது சதுர்முக லிங்கம் எனப்பட்டது. இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது. பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டு பாணியையும், பாண்டியநாட்டு பாணியையும் கலந்து ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்ட ஒரு கோயிலை எழுப்பினான். மூலஸ்தானத்தில் பிரமாண்டமான ஆவுடையாருடன் கூடிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவரை "விருத்தபுரீஸ்வரர்" என அழைத்தனர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப் படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது.
65 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும், கோயிலின் வெளியே பிரம்ம தீர்த்தமும் அமைந்துள்ளது. கோபுரத்திற்கு வெளியில் தென்புறம் வல்லப கணேசர் சந்நிதியும், வடபுறம் தண்டபாணி சந்நிதியும் இருக்கின்றன. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் சூரிய, பைரவர் சந்நிதிகளும், இடபக்கம் சந்திரன் சந்நிதியும் மேற்கு நோக்கியுள்ளன. சபாமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் கருவறையில் இறைவன் கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும் (லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது. தஞ்சை பிரஹதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவாகும். சுவாமிக்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டும். "மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று " என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும். பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவஸ்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள் 14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்புனவாசலில் இருந்து சுமார் 7 மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் உள்ளே வரமுடியாது என்பதும் ஐதீகம். மஹாவிஷ்னு, பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன், எமதர்மன், வசிஷ்டர், அகத்தியர் ஆகியோர் இத்தல இறைவனைவழிபட்டுள்ளனர். சுவாமி சந்நிதியின் சுற்றுப் பிரகாரத்தில், பஞ்ச விநாயகர், தட்சிணாமூர்த்தி, தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், பிரம்மா, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. கருவறை வெளிப்பபறச் சுவற்றின் மேற்கு மாடத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் லிங்கோத்பவருக்கு பதிலாக பெருமாளும், அனுமனும் உள்ளனர். இறைவியின் சந்நிதி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மனுக்கு எதிரில் குடவறை காளி சன்னதி உள்ளது. கடும் உக்கிரத்துடன் வீற்றிருக்கும் குடைவரைக் காளிதேவியை கண்ணாடி வழியே தரிசிக்கலாம்.
இத்தலம் நான்கு யுகத்திலும் நான்கு பெயர்களுடன் இருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, நான்கு தலவிருட்சங்கள் இருந்துள்ளன. எல்லோராலும் ஒதுக்கப்படும் கள்ளியும் இங்கு தல விருட்சமாக உள்ளது என்பதில் இருந்து, இறைவன் வெறுக்கக்கூடியவற்றையும் ஆட்கொள்பவர் என்பது வெளிப்படுகிறது. கிருதயுகத்தில் வஜ்ரவனம், இந்திரபுரம் என்ற பெயருடன் சதுர கள்ளியையும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்தமரத்தையும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும், கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தல விருட்சமாக கொண்டுள்ளது. இவை நான்கும் நான்கு வேதங்களாக வணங்கப்படுகின்றன. நான்கு வேதங்களும் பூசித்த பெருமை உடையது இத்தலம். இத்தலத்தின் தீர்த்தமாக இலக்ஷ்மி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திரதீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சிவகங்கைத் தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வருணதீர்த்தம் மற்றும் கோயிலுக்குத் தென்புறம் ஓடும் பாம்பாறு ஆகிய 10 தீர்த்தங்கள் உள்ளன.
ஆவுடையார்கோவிலில் இருந்து தெற்கே 25 மி.மி. தொலைவில் உள்ளது. திருவாடானை தலத்தில் இருந்தும் திருப்புனவாயில் செல்லலாம். இத்தலம் வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் வழியாகவும், மதுரையிலிருந்து சிவகங்கை, காளையார்கோவில், திருவாடானை வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : அறந்தாங்கி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை