திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. மதுரையிலிருந்து தெற்கே 147 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 1 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
சுவாமி : நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலிநாதர், சாலிவாடீசர்
அம்பிகை : காந்திமதியம்மை , வடிவுடையம்மை
தலமரம் : மூங்கில்
தீர்த்தம் : பொற்றாமரைக்குளம் - சொர்ண புஷ்கரிணி, கருமாரித் தீர்த்தம், சிந்து பூந்துறை
திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள்: நடராஜரின் ஐந்து சபைகளுள் இது தாமிர சபை. இங்கு 3 தெப்பக் குளங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம். இதற்கு வேணுவனம் என்ற பெயரும் உண்டு. இறைவன் மூங்கில் புதரிலிருந்து தோன்றிய காரணத்தினால் வேய்முத்தநாதர் என அழைக்கப்படுகிறார். பிரம்மதேவர், திருமால், அகத்திய முனிவர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
இத்திருத்தலம் ஊரின் நடுவில் உள்ளது. இங்கு ஆயிரங்கால் மண்டபம் முதலாகப் பல மண்டபங்கள் உள்ளன. இத்திருத்தலத்திற்கு வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிநகர், சாலிவாடி, பிரமவிருந்தபுரம், தாருகாவனம் என்பன வேறு பெயர்களாகும். இத்தலத்தில் உள்ள இறைவன் தாமிர சபாபதி என அழைக்கப்படுகிறார். நடராஜர் சந்நிதி தனியாக உள்ளது. பிரகாரத்தில் முருகர், வள்ளி, தெய்வயானை சமேதராக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மயிலூர்தியின் மேல் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். பொல்லாப் பிள்ளையார், விநாயகர், கன்னி விநாயகர், அகத்தியர் பூசித்த சால்வடீஸ்வரர், கோவிந்தராஜர், சந்தான சபாபதி, ருத்திர விஷ்ணு, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, பண்டாசுரமர்த்தினி, ஆறுமுகர், ஜுரதேவர், அறுபத்து மூவர், காரைக்கால் அம்மையார், முதலிய சந்நிதிகள் உள்ளன. இறைவன் திருக்கோயில் மணிமண்டபத்தில் ஒரு பெருங்கற்றூண் நடுவில் பெரிதாகவொன்றும் அதனைச் சுற்றிலும் உருவிலும் உயரத்திலும் வேறுபட்ட நாற்பத்தெட்டு சிறு தூண்களுமாக அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் தனித்தனிக் குரல் எழுப்பும் தன்மையுடையன. இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. சங்கிலி மண்டபம் வசந்த மண்டபம் சோம வார மண்டபம் ஊஞ்சல் மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றின் அமைப்பு தமிழக நாகரிகத்தினை காட்டும். திருக்கோவிலின் முன் வெண்ணிற நந்தி கண்கவர் அழகுடையது.
வரலாறு: முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
கோவில் அமைப்பு: கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தியைக் காணலாம். அடுத்துள்ள கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். மூலவரைக் காண்பதற்கு முன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம்.
மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல கோஷ்ட மூர்த்திகளாக தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை நாம் காணலாம். கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் சிவனுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் "தாமிர சபை" உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியதாகவும் அகலமாகவும் அமைந்துள்ளது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்ல வழி உள்ளது. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியில் இருந்து அப்படியே வெளியேறவும வழி உண்டு.
மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஒரே கல்லில் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக நாயினார் என்னும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.
கோயிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகளுடனும், நடுவில் நீராழி மண்டபத்துடனும் இந்த தெப்பக்குளம் உள்ளது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.
இக்கோயிலில் உள்ள சுரதேவர் சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை. நடராஜர் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் தாமிரசபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் ‘தாமிர சபாபதி’ என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. இச்சபையின் உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது.பின்னால் உள்ள நடராஜர் சிலாரூபத்தில் சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார்.
மற்ற கோவில்களைப் போல மார்கழி மாதம் விடியற்காலையில் இவ்வாலயம் திறப்பதில்லை. மாற்றாக கார்த்திகை மாதத்தில் காலை 4 மணிக்கெல்லாம் கோயில் தரிசனத்திற்காகத் திறக்கப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்களில் இறைவனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
ஈசனின் படையலுக்காக வேதசர்மா என்னும் அந்தணர் நெல் உலர வைத்திருந்தார். சிவபெருமான் அந்நெல்லை மழை வெள்ளம் அடித்துக்கொண்டு போகாதவாறு வேலிகட்டிக் பாதுகாத்திருந்தார். அதனால் நெல்வேலி என்ற திருப்பெயர் உண்டாயிற்று என்று கூறுவர். இன்றும் இத்திருவூரை சுற்றி நெல்வயல்கள் வேலியாகவே அமைந்துள்ளது.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு