திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் தற்போது அவிநாசி என்று அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூருக்கு வடகிழக்கே 41 கி.மீ. தொலைவில் உள்ள தலம். தட்சணவாரணாசி எனவும் அழைக்கப்படுகிறது. திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 13 கி.மீ தொலைவில் உள்ளது. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். ஈரோடு-திருப்பூர் வழியில் வஞ்சிப்பாளையம் நிலையத்தில் இறங்கினால் நேர் வடக்கே 8கி.மீ தொலைவில் உள்ளது.
சுவாமி : அவிநாசி நாதர், அவிநாசி ஈஸ்வரர், பெருக்கேடிலியப்பர்
அம்பிகை : பெருங்கருணை நாயகி, கருணாம்பிகை
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : நாககன்னி
திருத்தலச் சிறப்புகள்: சுந்தரர் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலம். இத்திருத்தலத்தில் சிறுவன் ஒருவன் முதலை வாயில் புகுந்து மடிய, சுந்தரர் திருப்பதிகம் அருளச் செய்து மீட்டுத் தந்தார். இவ்வூர் தேர் தனிச் சிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் விநாயகர், முருகர், சுந்தரர், துர்க்கை, அறுபத்து மூவர், காலபைரவர், நடராஜர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
பெயர் காரணம்: இவ்வூரின் பழம்பெயர் திருப்புக்கொளியூர் ஆகும். இறைவன் ஆடிய அக்கினி தாண்டவம் கண்டு அஞ்சிய தேவர்கள் புகுந்து ஒளிந்து கொள்ளவும். பின்னர் அவர்களுக்கு அருளவும் செய்த இடம். புக்கு-ஒளி-ஊர் புக்கொளியூர் என ஆயிற்று. இப்போதுள்ள பெயர் அவிநாசி ஆகும். விநாசி என்றால் பெருங்கேடு என்று பொருள்;. அவிநாசி என்றால் பெருங்கேட்டை நீக்கவல்லது என்று பொருள்;. தேவார காலத்தில் இவ்வூரின் பெயர் திருப்புக்கொளியூர் என்றும், திருக்கோயிலின் பெயர் அவிநாசி என்றும் வழங்கின. காலப்போக்கில் கோயிலை ஒட்டி வளர்ந்த நகரம் அவிநாசி என்று பெயர் பெற்றது, திருப்புக்கொளியூர் இன்று கோயிலின் தெற்கே சிறிது தொலைவில் ஓர் சிற்றூராக உள்ளது,
கொங்கு நாட்டை கரிகாலன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஆங்காங்கு உள்ள வனங்களை அழித்து மக்களை குடியேற்றினான். அவ்வகையில் ஆவனன் எனும் இருளன் இப்பகுதியில் ஆண்டு வந்தான். அவன் பெயரால் இது அவிநாசி என்று அழைக்கப்பட்டது. அவனை வென்று, காட்டை அழித்தபோது, லிங்கத்திருமேனி இருப்பதை கரிகாலன் கண்டு கோயிலும், குளமும் செய்வித்தான் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
நள்ளாற்றின் கரையில் உள்ள இத்திருக்கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதி ஆகும். கோயில் முன்புறம் ஒரே கல்லால் ஆன தீபஸ்தீபம் உள்ளது, 70 அடி உயரம் உடையது. இதன் அடியில் கிழக்கில் விநாயகரும், மேற்கில் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வடபுறத்திலும், தென்புறத்திலும் முதலைவாயில் இருந்து பிள்ளையார் வெளிப்படும் சிற்பங்களும் உள்ளன. இந்த தீபஸ்தம்பம் கொங்கு நாட்டுக்கே சிறப்பாக உரியது. கொங்கு நாட்டில் உள்ள அனைத்து கோயில்கள் முன்புறமும் இந்த தீபஸ்தம்பம் இருப்பது ஒரு சிறப்பாகும். தீபஸ்தம்பத்திற்கு தெற்கே தெப்பக்குளமும், அதன் எதிரில் பாதிரிமரத்து அம்மன் கோயிலும், அதற்குச் சற்றுத் தெற்கே முதலைவாய்ப் பிள்ளையை அழைத்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோயிலும் முதலைவாயிலிருந்து சிறுவனை அழைத்த ஏரியும் உள்ளன.
தீபஸ்தம்பத்திற்கு முன்புறம் உள்ள முன்மண்டபம் 30 கற்றூண்களை கொண்டது. இதற்குள் கோபுரத்தை ஒட்டி செல்வ விநாயகர் கோயிலும், வடபுறம் ஆலய அலுவலகமும், நாககன்னிகைத் தீர்த்தமும் உள்ளது.
கோயில் அமைப்பு : இத்தலத்து இராஜகோபுரம் கொங்கு நாட்டிலுள்ள பெரிய கோபுரங்களில் ஒன்று. இதன் வழியாக உள்நுழைந்தால் நாம் நவரங்க மண்டபத்தை அடைகிறோம். இம்மண்டபத்தில் உள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, ஆலங்காட்டுக் காளியம்மை, வீரபத்திரர் சிலைகள் குறிப்பிடத்தக்கவை. இம்மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம் ஆகியவை உள்ளன.
இவற்றைத் தாண்டி சென்றால் நந்தியம்பெருமான் அவிநாசியப்பரை தரிசிக்கலாம். இங்கே மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். காசி தலத்தில் உள்ள லிங்கத்தின் வேர் ஒன்று தெற்கே ஓடி நுனியில் கிளைத்து, முளைத்த லிங்கம் இந்த அவிநாசிலிங்கம். இவரை அவிநாசிலிங்கேசுவரர், அவிநாசியப்பர், அவிநாசிநாதர், அவிநாசி ஈசுவரர் என்றும், பிரம்மன் பூசித்ததால் பிரம்மபுரீசுவரர் என்றும் அழைக்கிறார்கள். உள்சுற்றுப்பிரகாரத்தில் தண்டாயுதபாணியையும் அறுபத்து மூவரையும் சிலைவடிவில் தரிசிக்கிறோம். தென்மேற்கு மூலையில் விநாயகரும், தொடர்ந்து பஞ்சபூத லிங்கத் திருமேனிகளும் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள துர்க்கையை வழிபட்டு வரும்போது அருள்மிகு சண்டிகேசுவரரையும், காசித்தீர்த்தக் கிணற்றையும் காணலாம். காசிகங்கை, கிணற்று வடிவில் இங்கே வருவதாக ஐதீகம்.
இந்த கருவறையும், பிரகார அமைப்பும் இக்கோயிலின் ஆதிவடிவங்கள். இவை சோழர் காலத்தவை. காசிக்கிணற்றுக்கு அண்மையில் உள்ள கால பைரவர் இக்கோயிலின் சிறப்புக்குரிய மூர்த்திகளில் ஒருவர். அற்புதமான சிலை வடிவம் இங்கு இவருக்கு மட்டும் தனியாக சகஸ்ர நாமம் உள்ளது, சுவாமியை தரிசனம் செய்து மீண்டும் வெளிப்பிரகாரம் வருகிறோம். சுவாமி சந்நிதியை அடுத்து திருக்கல்யாண மண்டபம் உள்ளது. சித்திரைத் திருநாளில் இறைவனின் திருக்கல்யாணம் இங்கேதான் நிகழ்வுறும். திருக்கோயில் உற்சவத் திருமேனிகள் இங்கேதான் வழிபாட்டில் வைக்கப்பட்டுள்ளன. கல்யாண மண்டபத்தை அடுத்து ஆறுமுகபெருமான் திருக்கோயில் சுவாமி சந்நிதிக்கும், அம்மன் சந்நிதிக்கும் இடையில் சோமஸ்கந்த வடிவில் புதிய பொலிவுடன் திகழ்கிறது. திருக்கல்யாண மண்டபத்துக்கு எதிரே, அண்மையில் கட்டப்பட்ட புதிய வசந்த மண்டபம் திகழ்கிறது.
கோயில் பிரகாரத்தின் தெற்குப் பக்கத்தில் சுவாமியின் வலப்புறத்தில் உள்ளது கருணாம்பிகை அம்மன் சந்நிதி. அம்பிகை சந்நிதி எதிர்புறம், பொள்ளாச்சி வள்ளல், அருட்செல்வர் கட்டித் தந்த புதிய ஐந்து நிலை இராசகோபுரம் எழிலுடன் நிகழ்கிறது, இக்கோபுரத்துக் கதவிலுள்ள மரச் சிற்பங்கள் மிக அழகானவை. இக்கோயிலின் பெருஞ்சிறப்பு, இறைவனுக்கு வலப்பக்கத்தில் அமைந்த தேவியாக கருணாம்பிகை விளங்குவதே. சுமார் மூன்றரை அடி உயரமுள்ள அற்புதத் திருமேனியுடன் தன் பெயருக்கு ஏற்ப, கருணை பொழியும் விழிகளோடு கருணாம்பிகையாக காட்சி தரும் தேவி. இன்றும் சூழவுள்ள சிற்றூர் மக்கள் இக்கோயிலை செல்வி, பெருங்கருணையம்மை, பிருஹத் கருணாம்பிகை என பல பெயர்களுடன் போற்றி வருகின்றனர். அம்பிகையை அகம்குளிரத் தரிசித்த பின் பிரகாரம் வருகிறோம். வடபுறத்தில் நடராசப்பெருமான் திருவடிகளை வணங்கி நவக்கிரகங்களையும், சனீஸ்வரனையும் வணங்கி வெளிவருகின்றோம்.
தலபுராணம் : அந்தணச்சிறுவர்கள் இருவர் இங்குள்ள நீர் நிலைகளில் குளிக்கும் போது ஒரு சிறுவனை முதலை விழுங்கியது. மற்றொருவன் முதலை வாயில் அகப்படாமல் உயிர் பிழைத்து தம் இல்லம் வந்து நிகழ்ந்ததை பெற்றோரிடம் கூறினான். அவனின் பெற்றோர் துயருற்றனர்.
இந்நிகழ்ச்சி நடந்த சில ஆண்டுகளான நிலையில் அவனுடைய பெற்றோர் அவனுக்கு உபநயனச் சடங்குகள் நடத்தினர். அவனது இல்லத்தில் மங்கள ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம் மகன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என்று மனக் கவலையுற்றனர். அச்சமயம் அத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஒருவீட்டில் மங்கல ஒலியும், எதிர்வீட்டில் அழுகை ஒலியும் கேட்டு காரணம் வினவினார். நடந்தவற்றை அவ்வூர் வேதியர்கள் தெரிவித்தனர்.
அச்சமயம் சுந்தரர் தம் ஊருக்கு எழுந்தருளியுள்ளார் என்ற செய்தி அறிந்த மகனை இழந்த அந்தணர் அழுகை நீங்கி முகம் மலர்ந்து சுந்தரரை விழுந்து வணங்கினார்.
சிறந்த சிவபக்தரான அந்தணரின் துயரை துடைத்த பின்பே திருக்கோயில் வழிபாடு செய்யவேண்டுமென முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து அவிநாசி இறைவனை வேண்டி பதிகம் பாடினார். பின் அம்முதலை, தான் உண்ட மதலையை கரையில் உமிழ்ந்தது. அவனது பெற்றோரும் ஊர்மக்களும் இவ்வதிசயத்தைக் கண்டு வியப்புற்றனர்.
பின் சுந்தரர் இத்தலத்து திருக்கோயிலை அடைந்து இறைவனையும், இறைவியையும் வணங்கி மலைநாடு அடைந்தார் என புராண வரலாறு கூறுகிறது.
அவிநாசியில் நிகழ்ந்த அற்புதங்கள் :
அவிநாசிக் கங்கையே காசிகங்கை : பதஞ்சலி என்னும் முனிவர் அவிநாசிக் கங்கையை, காசிக் கங்கை என்று தம் சக முனிவருக்கு நிரூபிப்பதற்காகக் தன் கைத்தண்டத்தை அவிநாசியில் உள்ள காசிக் கிணற்றில போட்டார். பின் தம் சக முனிவருடன் நாடு முழுவதும் சுற்றிக் காசி சேர்ந்தார். அங்கு காசியில் நீராடும் போது, தாம் அவிநாசியில் காசிக்கிணற்றில் போட்ட தம் கைத்தண்டம் அங்குக் கிடைக்கக் கண்டார். உடன்வந்த முனிவர் உண்மையுணர்ந்து, காசியும் அவிநாசியும் ஒன்றே என்று தெளிந்தார்.
மீன்வாயில் சிவலிங்கம் : குருநாத பண்டாரம் என்னும் வீரசைவராகிய லிங்கதாரி ஒருவர் அவிநாசியில் வாழ்ந்து வந்தார். அவர் செல்லங்க சமுத்திரம் என்னும் நீராழி மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளத்தில் நீராடிய பின்னர், தனது அங்கலிங்கத்தை அங்கு வைத்து பூஜை செய்து கொண்டிருந்தார். அந்த ஆண்டு, நல்ல மழை பெய்து தாமரைக்குளம் உடைப்பு எடுத்ததால், அதை அடைக்க வேண்டி அரசாங்க அதிகாரிகள் வந்தனர். ஆள் போதாததால் குருநாதபண்டாரத்தையும் கூப்பிட்டார்கள். இறையன்பில் ஈடுபட்டு, பூஜையில் ஆழந்திருந்த குருநாதருக்குக் குரல் காதில் விழவில்லை. எனவே கோபமுற்ற அதிகாரிகள் அவர் வழிபட்ட அந்த லிங்கத்தை திருக்குளத்தில் வீசி எறிந்து அவரை இழுத்துச் சென்றனர். வேறு வழியின்றி, தாமரைக்குளத்து உடைப்பை அடைத்து மீண்ட குருநாதபண்டாரம், லிங்கம் கிடைத்தால்தான் உயிர் வாழ்வேன். இல்லையேல் உயிர் தரியேன் என்று துணிந்தார். அப்போது, அவிநாசியப்பர் திருவருளால், குளத்தில் உள்ள மீன் ஒன்று, அந்தச் சிவலிங்கத்தை வாயிற் கௌவிக்கொண்டு வந்து, கரையிற் சேர்த்தது. ஆலயத்தின் முன்னுள்ள தீபத் தூண் மண்டபத்திலும், தாமரைக்குளத்தருகில் உள்ள சுந்தரர் திருக்கோயிலிலும் இந்த திருவுருவை காணலாம். நாககன்னித் தீர்த்தத்தை ஒட்டியுள்ள வழிகாட்டி விநாயகர் கோயிலையும் காணலாம்.
பேய்வடிவம் தீர்த்துத் தெய்வமாதல் : கேரள நாட்டில் அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் அரிய மந்திரங்களையும், கலைகளையும் நன்கு கற்றறிந்தவன். ஆயினும் அவற்றைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டான். ஆதலால் அற்ப காலத்தில் இறந்து, பேய்வடிவாகி, விந்திய மலைச்சாரலில் பலகாலம் அலைந்து திரிந்தான். அந்த மலைச்சாரல் வழியாகப் பல அந்தணர்கள் காசியாத்திரைக்கு சென்று கொண்டிருந்தனர். அவிநாசித் தலத்தின் சிறப்பை அவர்கள் பேசிக்கொண்டு சென்றனர். அதைக் கேட்டவுடன் அந்தனர் பேய்வடிவம் நீத்து தேவவடிவம் பெற்று சிவபதம் அடைந்தான் என பவுஷியோத்திரம் என்ற நூல் கூறுகிறது,
கங்கையில் இழந்த காசை அவிநாசியில் பெறுதல் : வள்ளல் தம்பிரான், ஒருமுறை காசியாத்திரை போனார். வழிச் செலவுக்கு பொற் காசுகளைத் தம் கைத்தண்டத்துள் வைத்துச் சென்றார். காசியில் நீராடும்போது கைத்தண்டு கங்கையில் வீழ்ந்து விட்டது. பின் தம்பிரான் காசி யாத்திரையை முடித்து, அவிநாசி திரும்பி அவிநாசியப்பரை வணங்கி வலம் வந்தபோது, தாம் காசியில் கங்கையாற்றில் தவறவிட்ட கைத்தண்டு, காசிக் கிணற்றில் மிதப்பதை கண்டார். அவிநாசிக் கங்கையே காசிக்கங்கை என்று தெளிந்து மகிழ்ந்தார்.
அயிராவதம் பூசித்து தன் பதவி அடைதல் : இந்திரனால் சபிக்கப்பட்ட அவனது வாகனமான அயிராவதம் என்ற வெள்ளையான சாபவிமோசனம் பெற நாரதரிடம் முறையிட, நாரதர் மேரு மலைக்கு தெற்கே எண்ணிறந்த சிதலங்கள் உள்ளன. அவற்றுள் முக்தியை அளிக்கும் தலங்கள் ஐந்து. அவை பிறக்க முக்திதரும் திருவாரூரும், தரிசிக்க முக்தியைத் தரும் சிதம்பரமும், நினைக்க முக்தியை தரும் அருணாசலமும், இறக்க முக்திதரும் காசிப்பதியும் அடைந்து வசிப்போர்க்கும் தலப்பெருமைகளை பேசுவோருக்கும் முக்தியை தரும் அவிநாசியும் ஆகும். ஆகவே நீ அவிநாசித் தலத்தை அடைந்து இறைவனை பூசித்தால் சாப விமோசனம் பெறுவாய் என்று கூறினார். உடனே வெள்ளையானை நாரதர் திருவடிகளை வணங்கி விடைபெற்றுத் தென்திசை நோக்கி நடந்து, மேல் கொங்கு நாட்டை அடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசித் தலத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கு இறைவனைப் பூசித்து வழிபடச் சந்நிதிக்கு கீழ்பால் ஓடும் நள்ளாற்றில் தனது கொம்புகளால் பூமியை குத்தித் தோண்டி ஆற்று நீர் பெருகும்படி செய்து (அயிராவதத்துறை என்ற பெயருடையதாகச் செய்து) அதில் ஸ்நானம் செய்து, காசிக் கங்கைக் கிணற்று நீரைத் துதிக்கையில் முகந்து கொண்டு போய் அவிநாசிநாதருக்கு அபிஷேகம் செய்து மலர் கொண்டு பூசித்தது.
இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் பூசித்து வரும்போது ஒரு மூலலிங்கத்திற்கு அருகே ஈசான பாகத்தில் ஒரு சிவலிங்கம் (அயிராவதலிங்கம் என்ற பெயருடன்) தாபித்து பூசித்து வந்தது. அவிநாசியப்பர் யானையின் பூசைக்கு மகிழ்ந்து, இந்திரன் உள்ளத்தில் ஒரு அதிசயம் தோன்றும்படி செய்ய உடனே இந்திரன் விமானத்தில் ஏறி அவிநாசித்தலத்திற்கு வந்தான். அப்போது அவிநாசிநாதரையும், அவரை வெள்ளையான தொழுது நின்ற நிலையையும் கண்டு, மகிழ்ச்சியோடு அயிராவதத்தை அழைத்து மத்தகத்தை தன் கையால் தடவ அதன் சாபம் நீங்கி நின்றதையும் அறிந்தான். பின் இந்திரன் அவிநாசிநாதரை வணங்கி வெள்ளை யானையின் மீதேறி பொன்னுலகத்தை அடைந்தான்
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு