திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் தற்போது பவானி என்று வழங்கப்படுகிறது. ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் இத்தலம் சேலத்திலிருந்து 56 கி.மீ தொலைவில் உள்ளது. ஈரோடு சேலம் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலிருந்து பஸ்ஸில் செல்லலாம்.
சுவாமி : சங்கமுக நாதேஸ்வரர், சங்கமேஸ்வரர்
அம்பிகை : வேதாம்பிகை
தலமரம் : இலந்தை
தீர்த்தம் : பவானி, காவிரி சங்கமம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள் : திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலம். பத்மகிரி நாககிரி (திருச்செங்கோடு) சங்ககிரி மங்கலகிரி வேதகிரி என்னும் ஐந்து மலைகளுக்கு இடையில் உள்ள தலம். குபேரன், விசுவாமித்திரர், பராசரர் பூசித்த பதி. அமுத நதியும் பவானி ஆறும் கங்கை ஆறும் கூடு ம் இடத்தில் உள்ள தலம். இத்தலத்தின் வேறு பெயர்களாவன பவானி கூடல், வதரிகாசிரமம்.
கோயில் அமைப்பு : பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்த கோவிலில் சங்கமேஸ்வரர் வேதநாயகி சந்நிதிகள் மற்றுமின்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. இச்சந்நிதியைக் கடந்து சென்றால் இந்த கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். அம்பாள் மற்றும் சிவன் சந்நிதிக்கு நடுவில் முருகன் சந்நிதி அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த கட்டில் ஒன்று சான்றாய் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையை மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால் மதில் சுவரில் சாளரம் போன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றும் உள்ளன. ஒரு முறை காரோ தனது இல்லத்தில் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் 1804 ம் வருடம் நடந்தது.
இத்தலத்தில் முருகன் சந்நிதிக்கு அருகில் ஜவஹரேஸ்வரர் திருஉருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறார். கோவிலின் தெற்கு பக்கம் 63 நாயன்மார்கள் திருஉருவங்கள் உள்ளன. இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இக்கோவில் உள்ள சனீஸ்வரர் சந்நிதி மிகவும் பெயர் பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். எவ்வகை தீங்கும் நண்ணாத ஊர். ஆகவே திருநணா எனப்பட்டது.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஈரோடு
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு