திருக்கயிலாயம்
திருத்தல இருப்பிடம்: இத்திருமலை பனிமலையின் வடபக்கத்தில் மேற்கு திபெத் என்னும் நாட்டில் உள்ளது. பனிமலை முகட்டில் கடல்மட்டத்துக்கு மேல் 22980 அடி உயரத்தில் மாதவம் செய் தென்திசை நோக்கித் திருக்கயிலை அமைந்துள்ளது. பத்ரிநாத்திலிருந்து கைலாஷ் 305 கி.மீ தூரமும் அல்மோராவிலிருநுது 405 கி.மீ தூரமும் ஆகும். திபெத் நாட்டின் எல்லைப்பகுதியிலே உள்ள கயிலைப்பகுதி தற்போது சீனாவின் காவலிலே உள்ளது. தற்போது இத்தலத்திற்கு நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டிலிருந்து செல்கிறார்கள்.
சுவாமி : பரமசிவன்
அம்பிகை : பார்வதி
தீர்த்தம் : மானசரோவர், சிந்து
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
சிறப்புகள்: இறைவன் பனி மலையாக காட்சி அளிக்கிறான். அதிகாலையில் இறைவன் பொன்னிறமாகவும் அதன்பின் வெள்ளி நிறமாகவும் காட்சி அளிக்கிறான். கிரி வலத்தின்போது கௌரி குண்டம் பார்க்கலாம்.
இது பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப் பன்னு நீள்பனி மால்வரைப் பாலது இதனை நொடித்தான் மலை எனவும் கூறுவர். தொன்மைச் செந்தமிடோர் திருவருளால் உணர்ந்து வழிபட்டு வரும் சிவபெருமான் வீற்றிருந்து அருள்வது இம்மலையே ஆகும். இத்திருமலையே சிவலிங்க வடிவமாகத் திகழ்கின்றது. எல்லாம் சத்தியுஞ் சிவமுமாக தொழிற்படும் உண்மையினை இது உணர்த்துவதும் ஆகும். சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரர் வெள்ளை யானை மீது சேரமான் துணையுடன் இங்கு எழுந்து அருளினார். அப்பர் அதுபோல் திருக்கயிலைக் காட்சியினைத் திருவையாற்றில் கண்டு வழிபட்டார். சுந்தரர் செல்லும் வழியில் பாடியருளிய திருப்பதிகம் நொடித்தான் மலை என முடிவதாகும். உடன் சென்ற சேரர்பிரான் தாம் பாடிய திருக்கைலாய ஞானவுலா என்னும் செந்தமிழ்த் திருமாமறையினைச் சிவபெருமானுக்குக் கேட்பித்தார். சம்பந்தப் பெருமாள் திருக்காளத்தி மலைமீது இருந்தே திருக்கயிலையினைப் பாடியருளினார்.
இத்திருமலை வெள்ளியினைப் போன்றப் பனிபடர் மலையாக உள்ளது. 50 கி.மீ சுற்றளவுடைய சமதளமாய் விளங்குகிறது. திருச்சுற்றாக மலைச்சுவர்கள் செங்குத்தாக காணப்படுகின்றன. தமிழகத் தலைநகராம் சென்னையிலிருந்தும் மற்றும் முக்கிய நகரங்களிலிருந்தும் குழுவாகச் சேர்ந்து இங்கு சென்று வருகின்றனர். இத்தலத்தை தரிசிக்கும் பேறு பெறும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையிலான காட்சியினை இறைவன் அளிக்கிறார். எடுத்துக்காட்டாக இறைவன் தனித்தும் இறைவன் இறைவி சமேதராகவும் மைந்தர்களுடனும் சைவ சமய தலைவர் நந்தி பகவானுடனும் காட்சி அளிக்கிறார்.
தற்காலத்தில் அல்மோரா வழியாகச் செல்லும் பாதை எங்கும் நல்ல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கஷ்டங்கள் கூட குறைந்து கொண்டு வருகின்றன. ஆனாலும் கூட கைலாஷ் யாத்திரையானது அவ்வளவு சுலபமானது என்று எண்ணக்கூடாது. ஆனாலும் வழியெங்கும் செய்யப்பட்டுள்ள வசதிகளினால் அல்மோரா வழியாக செல்லும் பிரயானம் மற்ற வழிகளில் செல்வதை விட சுலபமாகவும் இன்னல்கள் குறைந்தும் இருக்கிறது. கைலாஷ் யாத்திரைக்கு ஜுன் மாதம் 2 வது வாரம் உகந்தது என்றாலும் யாத்திரைக்கு வேண்டிய தயாரிப்புகள் அல்மோராவிலிருந்து பொதுவாக மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. பாரிசைனா 14கி.மீ. தைளல் சைனா 10 கி.மீ கானாய் 10 கி.மீ ஜால் கோலா 10 கி.மீ பேரிங் 10 கி.மீ தால் 17கி.மீ. நீதிகாட் 14 கி.மீ ஆசுக்கோட் 16 கி.மீ பால்பாகோட் 12 கி.மீ தார்ச்சூலா 20 கி.மீ கேலா 17 கி.மீ சௌன்பாஸ் 14 கி.மீ கல்லாட் 20 கி.மீ காலாப்பானி 17 கி.மீ மால்ப்பா 8 கி.மீ பூடி 12 கி.மீ கார்பியாங் 10 கி.மீ வழியாக காலாப்பானி வரை மோட்டார் வாகன வசதிகள் உள்ளன. காலாப்பானியிலிருந்து மானசரோவர் ஏரி வரை மீதியுள்ள தூரம் முழுவதும் சோன்ச்சான் 10 கி.மீ விப்புலேக் தணவாய் 10 கி.மீ தாக்லாகோட்மண்டி 10 கி.மீ ராங்கான் 8 கி.மீ கூர்பாமான்தத்தா 17 கி.மீ வழியாக நடந்து செல்ல வேண்டும். அங்கிருந்து நடந்து ஜுகும்பா குஹா பார்க்கா தார்ச்சான் வழியாக கைலாஷ் அடைய வேண்டும். தார்ச்சான் கிராமம் கைலாஷ் அருகில் உள்ளதாகும். வழியெங்கும் யாத்திரிகர்களுக்கு கிராம மக்கள் உதவிகள் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே மிக உயர்ந்த சிகரம் கைலாஷ். இங்கிருந்து 50 கி.மீ தொலைவில் தோலமிங்கமாட்டா தாப்பா கிராமங்கள் உள்ளன. இங்க புத்தருக்கு கோவில்கள் உள்ளன. தியானிமாமண்டியில் சாமான்கள் வாங்க மார்க்கெட் உள்ளது. இது தாப்பாவிற்கும் வடக்கே உள்ளது. காய்நிமா என்ற இடத்திலிருந்து வடகிழக்கில் 60 கி.மீ தொலைவில் உள்ளது கைலாஷ் சிகரம். இந்த ஊர் ஒரு சிறு நகரம் போன்றது.
கைலாஷ் மலை : சுற்றலவிலே 40 லிருந்து 50 கி.மீ இருக்கும் கோபுரம் போல் தோற்றமளிக்கும் கைலாஷ் மலை 23000 அடி உயரத்தில் உள்ளது இது எப்போதும் பனியால் மூடப்பட்டு சூரிய ஒளியில் கண்கள் கூசும் வண்ணம் பளபளவென்று ஜொலிக்கிறது. ஸ்ரீ மஹா தேவனே இருக்கும் இந்த இடம் புராணங்களில் வெள்ளிமலை என்று வர்ணிக்கப்பட்டு தெய்வீக சாந்நித்யத்திலும் அழகிலும் மிகுந்திருக்கிறது. தர்ச்சனிலிருந்து கைலை மலையும் அதன் சுற்றுப்புறங்களிலும் வடக்கில் தூய வெண்மைச் சிகரமாகவும் தெற்கில் பரந்த வட்டவடிவமான ஆழ்ந்த நீலநிற ஏரியான ராக்ஷஸஸ்தலும் கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது. ராக்ஷஸஸ்தல் ஏரிக்குக் கிழக்கே இருக்கும் மானசரோவர் ஏரியையும் கைலாய மலையையும் பிரத்க்ஷிணம் செய்து வழிபட வேண்டும்.
அருகிலுள்ள விமானதளம் : டேராடூன்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ்
பஸ் வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை