சபரிமலை
திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் கேரளா மேற்கு மலைத்தொடர் பகுதியில் உள்ள பத்தினம்தித்தா என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மஹிசி என்னும் கொடிய அரக்கியைக் கொன்று, ஐயப்பன் தியானம் செய்யும் இடம் தான் இந்த சபரிமலை. பதினெட்டு மலைகளுக்கு இடையே தான் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு படியும் ஒரு மலை. கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்களைக் காணலாம்.
தல சிறப்புகள் : இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார். ஐம்பத்தொன்று முதல் எண்பத்தைந்து வயது வரையிலான துறவு நிலை `வானப்பிரஸ்தம்’ எனப்படுகிறது. இப்பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாகச் சபரிமலை இருக்கிறது. தர்மசாஸ்தாவாக விளங்கும் ஐயப்பன் துறவறம் மேற்கொள்ள, வில்லெடுத்து அம்பெய்தினார். அந்த அம்பு வந்து விழுந்த இடமே சபரிமலையாகும். அந்த இடத்தில் தான் 18 படிகளுடன் கோவில் உருவாக்கப்பட்டு, கிழக்கு நோக்கி ஐயப்பன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அருகிலேயே மாளிகைப்புரத்து அம்மனுக்கும் தனிக் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தான் ஆண்டுதோறும் மகர ஜோதி தினத்தன்று ஐயப்பன் ஜோதி வடிவாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருந்து வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஐயப்பனின் ஆறுபடை வீடுகள் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எரிமேலி, பந்தளம், சபரிமலை கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் தான் புனித யாத்திரை சென்றதன் முழு பயனும் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் கிட்டதட்ட 5 கோடி பேர் சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்து வருகிறார்களாம். கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடும் விரதம் மேற்கொள்வார். மண்டல பூஜையில் தொடங்கி, மகர விளக்கு வரை சிலர் இந்த விரதத்தைத் தொடர்ந்து இருந்து மலைக்குச் செல்வார்கள். இப்படி எல்லோராலும் பெரும் பக்தியுடனும் கொண்டாட்டத்துடனும் பார்க்கப்படுகின்றது.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலை. 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூசை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் , மகர விளக்கு அன்றும் மற்றும் விஷு மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.
சபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இவை அரிசி, நெய், சர்க்கரை போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சபரிமலையில் இந்தப் பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி கோவிலில் இருந்து பெறப்படுகிறது. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் இரண்டாவது மிகப்பெரிய கோவிலாகும். இந்தக்கோவில் மாவேலிக்கரா என்ற இடத்தில் உள்ளது.
இரவில் கோவிலின் நடை சார்த்தப்படுவதற்கு முன்பு ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. தற்காலத்தில் சபரிமலையில் இறைவன் உறங்கச்செல்வதற்கு முன் இசைக்கப்படும் தாலாட்டுப் பாட்டு ஹரிவராசனம் என்ற பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் இயற்றி இசை அமைத்ததாகும். ஸ்ரீனிவாச அய்யர் கோவிலில், சுவாமி அய்யப்பரின் சந்நிதியில் நின்றுகொண்டு, அத்தாழ பூசைக்குப் பிறகு, இந்தப் பாடலை பாடி வந்தார். சுவாமி விமோசானனந்தா அவர்களின் முயற்சியால், கோவிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி, இப்பாடலை ஒரு தாலாட்டுப்பாடலாக ஏற்றுக்கொண்டனர். இந்தப் பாடல் 352 எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 32 வரிகள் கொண்டதாகும். அநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்தப்பாடலின் பதிப்புகள் இருந்தாலும், கோவில் நடையில் கே. ஜே. யேசுதாஸ் பாடிய பாடலே ஒலிபரப்பப்படுகின்றது. அச்சமயம் பக்தர்கள் மட்டுமல்லாது அரசுப் பணியில் ஈடுபட்டிருப்போரும், வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரும் எழுந்து நிற்கிறார்கள். பாரம்பரிய இராக தாளத்துடன் இப்பாடல் இசையமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மை சடங்கானது பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும் பள்ளிக்கட்டு அல்லது இருமுடியில் பருத்தித் துணியால் கைகளால் தைக்கப்பெற்ற இறைவனுக்கு படைப்பதற்காக பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் கொண்ட பை காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனின் மூல விக்கிரகத்தின் மீது புரியப்படும் நெய்யபிசேகம் ஆகும். ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் புனித சேர்க்கையைக் குறிக்கும் தத்துவமாக இது கருதப்படுகிறது. முதல் முறையாக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியை சுமந்துவர வேண்டும். இதர புனிதப்பயணம் மேற்கொள்வோர் கருப்பு அல்லது நீல வண்ணத்திலான இருமுடிகளை பயன்படுத்துவார்கள்.
சபரி மலைக்குச் செல்லும் வழியில் உள்ள முக்கிய இடங்களும் விஷேசங்களும்
1. எரிமேலி : உலகெங்கும் உள்ள ஐயப்ப பக்தர்கள் தங்கள் தேசத்திலிருந்து புறப்பட்டு எருமேலி என்ற இடத்தில் வந்து கூடுவார்கள். பக்தர்களின் கணக்கற்ற வருகை எருமேலி இன்று ஜன நெரிசல் நிறைந்த இடமாக மாறியுள்ளது. இங்கு ஒரு சாஸ்தா ஆலயம் உண்டு ஆலயத்திலிருந்து சுமார் 1 /2 மைல் வடகிழக்கில் எருமேலி பேட்டைக் களமாகும். இங்கு ஐயன் ஐயப்பனின் அருமை நண்பரான வாவரின் ஆலயமும் பேட்டை சாஸ்தாவின் பிரதிஷ்டையுள்ள சிறுகோயிலும் உண்டு. இந்த ஆலயங்களைச் சுற்றி அநேகம் முஸ்லீம் அன்பர்கள் குடியிருக்கிறார்கள். மார்கழி மாதத்தில் வாவர் ஆலயத்தில் கொடியேற்றப்படும்.
எரிமேலியை வந்தடையும் ஐயப்பபக்தர்கள் அங்கு தன் பொருட்களை எல்லாம் வைத்து அதற்கு காவலாக யாரையாவது வைத்துபேட்டைத் துள்ள கிளம்பவேண்டும். எரிமேலியில் சபரிமலையாத்திரைக்கான எல்லா பொருட்களும் கிடைக்கும். பேட்டைத்துள்ளி செல்லும் போது சுவாமி திந்தகத்தோம், ஐயப்பன் திந்தகத்தோம் என்று அனைவரும் கூவிச்செல்லுதல் முறையாகும். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கும் தவிர்க்கவே முடியாக ஒரு இடம் எதுவென்றால் அது எருமேலி தான். ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இங்கு வந்து வேடர்களைப் போல் வேஷமிட்டு பேட்டை துள்ளும் இடமாக உள்ளது. இங்கு தான் ஐயப்பன் வேட்டைக்கு செல்லும் கோலத்தில் கையில் வில் மற்றும் அம்புகளை தாங்கியவாறு காட்சியளிக்கிறார். முதல் மூன்று வருடம் செல்பவர்கள் சரம், வாள், கதை இவைகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு கம்பில் சிறிதளவில் காய்கறி வாங்கிக் கட்டி, அதை இருவராகப் பிடித்து கையில்இலையையும் வைத்துக் கொண்டு விருப்பமுள்ளவர்கள் முகத்தில் சாயம்பூசிக்கொண்டு, கெட்டிமேளம் கொட்டிக் கொண்டு பேட்டை துள்ளல் துள்ளுவார்கள்.
பேட்டை சாஸ்தாவை பிரதக்ஷிணம் செய்து ஆடி, வாவரை ப்ரதக்ஷிணம் செய்து, அங்கிருந்து தர்மசாஸ்தா ஆலயம் வரை ஆடிச் சென்று பிரதக்ஷிணம் செய்து கொண்டு அங்கு கையில் உள்ளஇலைகளைப் போட்டு நமஸ்காரம் செய்து, பிறகு எரிமேலித் தோட்டில் ஸ்தாபனம் முடித்துக் கொண்டு தர்ம சாஸ்தாவைத் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுக் கொண்டு அவரவர் தம்சாநான்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்குப் பேட்டை ஆட உபயோகித்த காய்கறிகளைச் சமைத்து உண்ணுவார்கள். எரிமேலியில் ஐயப்பன்மார்கள் ஒரு தேங்காயை உடைத்து வெடியும் வெடித்து வாவரிடம் சென்று உத்திரவு (பிரசாதம்) வாங்கிக்கொண்டு மலை யாத்திரையைத் தொடங்குதல் முறை. ஹரிஹர புத்திரரான ஸ்ரீ தர்மசாஸ்தா வேடனைப்போல் வில்லும் அம்பும் தரித்த நிலையில் நிற்கும் தோற்றத்தில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு தாவளம் போடாமல் செல்ல மாட்டார்கள்.
ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் பாகுபாடின்றி வண்ணப்பொடிகள் பூசி வாவரை வணங்கி, பேட்டை துள்ளி பின் குளித்து ஐயனை வழிபட்டு இருமுடிக்கட்டு தலையில் ஏற்றியவாறு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷத்துடன் இங்கிருந்து அடர்ந்த காட்டில் பெருவழிப் பயணம் ஆரம்பமாகின்றது.
2. போரூர்தோடு (வாய்க்கால்) : இது மிகவும் புராதனமான முக்கியத்துவம் வாய்ந்த வாய்க்காலாகும். கிழக்கு முகமாக நாம் துவங்கிய வனயாத்திரையில் இளைப்பாற சிறந்த இடம் இந்தப் பேரூர்த்தோடாகும். எருமேலியிலிருந்து இரண்டு மைல் தூரமுள்ள இந்தப் பேரூர்த்தோடு கானகத்தையும், கிராமத்தையும் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. வனயாத்திரையில் ஸ்ரீதர்ம சாஸ்தா இந்த பேரூர்த்தோடில் குளித்து இளைப்பாறியதாகக் கூறப்படுகின்றது. யாத்திரை மேற்கொண்டுள்ள ஐயப்பன்மார் இத்தோடில் குளித்து மலர், அரிசிப்பொரி இவற்றை வாய்க்காலில் உள்ள மீன்களுக்கு தூவி தமது பக்தியை வெளிப்படுத்துவர். இந்த இடத்திலிருந்து அரசாங்கத்தின் விலையுயர்ந்த தேக்கு தோட்டம் ஆரம்பமாகும். பேரூர்த்தோடை அடையும் இடம் வரை உள்ள ஸ்தலத்திற்கு கோட்டைப்படி என்று பெயர்.
3. கோட்டைப்படி : கோட்டைப்படியைக் கடந்தால் அங்கிருந்து தொடங்கும் இடம் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பூங்காவனம் என்றழைக்கப்படும். ஆகையால் அங்கு இரண்டு இலைகளைப் பறித்து வழிபாடு செய்த பிறகுதான் கடந்து செல்ல வேண்டும். கோட்டைப்படி என்பது கோஷ்டஸ்தானம் என்ற அர்த்தத்திலிருந்து இந்த கோட்டைப்படி என்ற சொல் தோன்றியுள்ளது.
4.காளைக் கெட்டி : கோட்டைப்படி கடந்தால் அடுத்த முக்கிய இடம் காளைகெட்டியாகும். எருமேலியிலிருந்து சுமார் 8 மைல் தொலைவிலுள்ளது இந்தக் காளைகெட்டி, காளைகெட்டி ஒரு அழகு மிகுந்த வனப்பிரதேசமாகும். இங்கு மஹிஷியை வதம் செய்த ஐயப்பன் அவளைத் தனது காலால் மர்த்தனம் செய்யும் காட்சியை காணவந்த கைலாயவாசன் தனது வாகனமான காளையை இந்த இடத்தில் கட்டியதால் இந்த இடத்திற்கு காளைகெட்டி என்ற பெயர் ஏற்பட்டதாய் கூறப்படுகின்றது. இவ்விடத்தில் சிவன் கணபதி தேவி கோயில்கள் உள்ளன. இவ்விடத்தில் தேங்காய் உடைத்து வெடி வழிபாடு செய்வது முக்கியம்.
5. அழுதா நதி : காளைகெட்டியில் இருந்து சுமார் ஒன்றரை மைல் கிழக்காக நடந்தால் அழுதாநதி என்ற இடத்தை அடையலாம். இந்த அழுதாநதி தொடர்ச்சியாகப் பாய்ந்து பம்பாநதியில் கலக்கின்றது. இந்த அழுதாநதியில் குளித்து மூழ்கும்போது நம் கையில் கிடைக்கும் சிறுகல்லை மடியில் கட்டிக் கொண்டு அதை மிகவும் கவனமாய் நாம் கல்லிடும் குன்று என்ற இடத்தில் போடவேண்டும். இவ்விடத்தில் தேவலோகத்தில் இருந்து ஐயப்பன் மஹிஷியை எறிந்ததாகவும், அங்கிருந்து மஹிஷியின் மேல் குதித்து அவளைக் கொன்று நர்த்தனமாடியதாகவும் ஐதீகம். இந்நதியில்ஸ்நானம் செய்யும்பொழுது அழுதாமேடு ஏறி, கல்லிடும் குன்றில் கல்இடுவதற்கு இங்கிருந்து ஒரு கல் எடுத்துச் செல்வது முறை.
6. அழுதாமேடும் கல்லிடும் குன்றும் : அழுதையிலிருந்து நடக்க ஆரம்பிக்கும் ஐயப்பன்மார்களுக்கு இரண்டுமைல் செங்குத்தான மலையேற்றம் எதிர்படும். இதைத்தான் அழுதையேற்றம் என்று சொல்வார்கள். இதைவிட கடினமான ஏற்றம் வேறு ஏதுமில்லை என்று கூறவேண்டும். பக்தர்களான வயோதிகர்களும், குழந்தைகளும் ஐயனின் கருணையினால் சிரமப்படாமல் ஏறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஒவ்வொருவருடைய இருதய சுத்தியையும், பாப சக்தியையும் அளக்கும் இடமாகும். ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் கொண்டு வந்த கல்லை அழுதாமேட்டின் முடிவில் ஒரு பக்கமாக இருக்கும் கல்லிடும் குன்று என்ற இடத்தில் போட்டு வணங்க வேண்டும். அழுதா ஆற்றில் இருந்து தேவர்களால் எறியப்பட்ட கற்கள் மஹிஷியின் பூதவுடலை மறைத்த இடம் இது என்றும் அந்த குன்றை கல்லிடும் குன்று என்றழைத்து பயபக்தியுடன் வணங்குவார்கள்.
7. இஞ்சிப்பார கோட்டம் : அழுதை ஏற்றத்தின் கடினம் இந்த இடத்தை அடையும்போது எதிர்படும் சிறுவாய்க்காலுடன் முடிவடைகிறது. வாய்க்கால் என்றாலும் இங்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினம். ஆயினும் இதை ஒரு இளைப்பாறும் கட்டமாக பக்தர்கள் கருதுகிறார்கள். இங்கு கோட்டைப்படி சாஸ்தாவை நினைத்து பூஜைகள் நிகழ்த்துவது வழக்கம்.
இஞ்சிப்பார கோட்டையில் இருந்து கிழக்காக நடந்தால் கரிமலை வரும் கரிமலை உச்சியும் ஒரு இளைப்பாறச் சிறந்த தாவளமாகும். ஆக மொத்தம் ஏழுகோட்டைகளும் அவற்றில் ஏழு தாவளங்களும், சபரிமலை யாத்திரீர்களின் இளைப்பாறும் கேந்திரங்களாகும். எருமேலி, கோட்டைப்படி, காளைகட்டி, இஞ்சிப்பார கோட்டைக் கோட்டை, உடும்பாரமலை, கரிமலைத் தோட்டம், கரிமலை உச்சி, பம்பையாற்றங்கரை, சன்னிதானம் போன்ற இடங்களில் மட்டும் தாவளங்களடித்து இளைப்பாற சிறந்த இடங்களாகத் தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.
8. கரிமலைத்தோடு தீரம் : கரிமலை ஏற்றம் ஏறுவதற்கு முன்பு ஆகாராதிகள் தயார் செய்யவும், சற்று இளைப்பாறவும் தகுதியுள்ள இடமாகும். இந்த கரிமலைத்தோடு தீரம். தங்குவதற்கு சற்று வசதிக்குறைவென்றாலும், தண்ணீர் தாராளமாகக் கிடைக்கின்றது என்பதால் பக்தர்கள் இங்கு கூடி சற்று இளைப்பாறுகின்றார்கள்.
9. முக்குழி : அழுத மேட்டிலிருந்து இறங்கி வருபவர்கள் முக்குழி வந்தடைந்து அங்கு வலது புறமாகச் செல்லவேண்டும். அரியக்குடி வழி அழுதா நதியை அடையும்முன் தாண்டி மலையை சுற்றி(அழுதாமலை ஏறி இறங்காமல்) முக்குழியை அடைகிறது. இவ்விடத்தில் ஓர் அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது.
10. கரிமலை ஏற்றம் : இளைப்பாறி முடிந்ததும் உடன் நடந்தால் செங்குத்தான கரிமலை ஏற்றம் தான். கரிமலை ஏற்றத்தைப் போன்ற கடினமான ஏற்றம் சபரிமலை யாத்திரையில் வேறு கிடையாது என்று பல பழமக்கார சுவாமிகள் கூறுவது வழக்கம். கரிமலை ஏற்றத்தைக் காட்டிலும் கரிமலை இறக்கம் மிகவும் கடினம். எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு இறக்கம் உண்டு. மரங்களின் வேர், பெரிய, சிறிய பாறைகள் இவற்றின் மீது அதிகவனமாக இறங்க வேண்டும். இந்த இறக்கம் இறங்கும்போது, பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என்ற இடங்கள் எதிர்ப்படும். இங்கு சிறு வாய்க்கால்களில் பளிங்கு போன்ற நீர் சலசலத்தோடும். யானைகள் கூட்டமாய் வந்து தாகம் தீர்த்துக் கொள்ளும் இடம் என்பதால் இருட்டு வேளைகளில் தனியாக இந்த இடத்தைக் கடக்க மாட்டார்கள். இந்த இடத்தை கடந்து சிறிய தூரம் சென்றால் பம்பாநதியைக் காணலாம்.
11. கரிமலைமேடு : கரிமலை மேட்டில் கரிமலைக் கிணறு இருக்கிறது இது ஒரு ஊற்று போன்றது. இவ்வழியில் வரும் ஐயப்பன்மார்களின் தாகம் தீர்ப்பதற்கு ஐயப்பன் தன் சரத்தினை விட்டு ஒரு கிணறு உருவாக்கியதாக ஐதீகம். இங்கு தேங்காய் உடைத்து வெடி வழிபாடு செய்யலாம்.
12. பம்பா : பம்பாஸ கிஸ்தலம் புவனேகசுந்தரம் பந்தள ராஜனின் கமனீய மந்திரம், தஷிண கங்கையென்ற அடைமொழியுடன் கீர்த்தி பெற்றதும் ஐயப்பனின் ஜனனஸ்தானம் என்ற புகழும் இந்த பம்பா தீர்த்தத்திற்கு உண்டு. அநேக வனமூலிகைகளின் சாறு கலந்து பாவங்களைக் கொல்லும் அபார சக்தியும் நிரம்பப்பெற்று ஸ்படிகத்திற்கு ஒப்பான நிறத்துடன் கரைபுரண்டோடும் பம்பையின் ஜலப்ரவாஹம் நமது இருதயத்தை ஆகர்ஷித்து நிர்மாலயத்தை ஏற்படுத்தும்.
கங்கை நதிக்கொப்பான புனித பம்பையில் நீராடி பாவங்களைந்து புனிதராய் ஐயப்பன்மார் தமது விரியில் குருசாமி எல்லோருடைய இருமுடிகளின் பின்முடிகளைப் பிரித்து அதிலிருந்து உணவுப்பொருட்களை எடுத்து உணவு தயாரிப்பார்கள். இதனை பம்பாஸத்தி என்று அழைப்பார்கள். இங்கு கன்னி ஐயப்பன்மார்களிடம் தட்டு கொடுத்து 108 அடுப்புகளில் இருந்து சாம்பல் எடுக்கப்பட்டு அதனை வஸ்திரகாயம் செய்து கொண்டு வரும்படி குருசாமி கூறுவார். இச்சாம்பலை பூஜையின்போது விபூதியாக உபயோகிப்பது வழக்கம். அதன்பின் இருமுடிகளை கட்டி ஒன்றாக வைத்து உணவுகளை இலையில் இருமுடிகளுக்கு முன்வைத்து நைவேத்தியம் செய்து பஜனை, பூஜைகள் செய்து முதலில் கன்னி ஐயப்பன்மார்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இந்த விருந்தில் சாஷாத் ஐயப்ப சுவாமியே கலந்து கொண்டு தங்களுடன் உணவருந்த வருவார் என்பது கருதப்படுகின்றது.
பம்பாஸத்தி முடிந்த மாலைநேரத்தில் பம்பா விளக்கினை சிறு மூங்கல், மெழுகுவர்த்திகள் கொண்டு அவரவர் கைவண்ணத்தில் தமது குழுவினராக தமது தோளில் சுமந்து சென்று பம்பா விளக்கே சரணமய்யப்பா என்று சரணகோஷத்துடன் பம்பையாற்றில் விடுவர். இங்கு வந்து அவரவர்கள் கூடாரங்களை போட்டு கொண்டு ஓரிரு நாள் தங்கிச் செல்லலாம். இந்நதியில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்து தங்களால் இயன்ற தான, தர்மங்களைச் செய்வது மிக்க நல்லது. பம்பையில் அன்னதானத்தை முடித்துக் கொண்டு நதியில் பம்பை விளக்கையிட்டு பிறகு செல்வார்கள்.
13. விநாயகர் கோவில் : இது பம்பைக்கு மேலாக நீலிமலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு இராமர், ஆஞ்சநேயர், சிவன், தேவி கோவில்களும் உள்ளன.
14. நீலிமலை அப்பாச்சி மேடு :- பம்பையிலிருந்து புறப்பட வருவது நீலிமலையாகும். நீலிமலை சற்று கடினமாகவே இருக்கும் ஏனென்றால் அது மிகவும் செங்குத்தாக இருக்கும். மலை ஏற்றம் முடியும் இடத்திற்கு அப்பாச்சிமேடு என்று பெயர். அப்பாச்சிமேடு வந்தவுடன் இருபுறமும் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளிற்கு வெல்லக்கட்டி இட்டு வணங்க வேண்டும் கடூரவனையும், துர்தேவதைகளையும் திருப்பதிப்படுத்த வேண்டி இச்சடங்குகள் நடத்தி வழிபாடு செய்வது வழக்கம். அப்பாச்சி மேட்டில் வன தேவதைகளுக்கு ப்ரீதியாக வெல்லம், எள்ளு, பொரி உருண்டைகளைப் பள்ளத்தில் போடுவார்கள். இவ்விடமிருந்து மகர ஜோதியைப் பொன்னம்பல மேட்டில் நன்கு பார்க்கலாம்.
15. சபரி பீடம் : அப்பாச்சிமேட்டைக் கடந்து சற்று நடந்தால் இயற்கை அழகு நிறைந்த ஒரு சமநிலத்தைக் காணலாம். இந்த இடத்தில் இராமபிராணைக் காண பக்தை சபரி அமர்ந்து தவம் செய்தது. இச்சபரிபீடத்தில் விடல் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறார்கள் இந்த ஸ்ரீ சபரிபீடத்தை ஐந்தாவது கோட்டையாகக் கருதி வழிபடுகிறார்கள். இங்கிருந்தும் மகரஜோதியைப் பார்க்கலாம்.
16. சரங்குத்தி : சபரிபீடத்திற்கடுத்தாக வருவது சரங்குத்தி ஆல். இங்கு கன்னி ஐயப்பன்மார் தங்களுடைய கன்னி யாத்திரையை உறுதி செய்து கொள்ளும் கட்டம் இதுதான். இந்த இடத்தில் தங்களுக்கு குருசாமியால் எருமேலிப்பேட்டையில் கொடுக்கப்பட்ட தங்களுடன் அதிஜாக்கிரதையாய் காட்டுவழித் துணையாய் கொண்டுவந்த சரத்தை அந்த சரங்குத்தி ஆல் என்ற இடத்தில் விடுக்க வேண்டும். இங்கு ஐயப்பன் பந்தளராஜாவிடம் தனக்கு எத்திசையில் கோவில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொல்லும்போது, பந்தளத்தில் இருந்து ஒரு சரத்தினை எறிந்து, அது விழுந்த இடத்தைக் காட்டினார்.
17. ஐயப்பன் சந்நிதானம் : சபரிபீடத்தைத் தாண்டும்போதே சன்னிதானத்தின் மஹிமை பஞ்சேந்திரியங்களையும் தட்டி எழுப்பும். கோயிலின் நடையை நெருங்க உடல் களைப்பும் மறந்துபோகும். ஐயப்ப பக்தர்கள் தமது இருமுடியை கையினால் உறுதியாகப் பற்றிக்கொண்டு சரணகோஷத்துடன் பதினெட்டாம்படியில் உள்ள ஒவ்வொரு படிகளையும் வணங்கி ஏறி சன்னிதானத்தில் வந்து சேர்தல். தேவலோகத்தில் உள்ள விச்வகர்மாவால் கட்டப்பட்ட கருங்கல்லினால் ஆன பதினெட்டுப்படி உள்ளது. இதில் தேங்காயை உடைத்தல் கூடாது. இப்படியின் இடது ஹோமகுண்டத்தில் பகவானுக்கு அபிஷேகத்திற்காக கொண்டு செல்லும் தேங்காயை இதில் போடுவார்கள்.
பதினெட்டாம்படியின் வலப்புறமும் இடப்புறமும் ஐயப்பனின் மெய்காவலர்களான கொச்சுக்கடுத்தை, வலியக்கடுத்தை இவர்களுக்கு இரு கோவில்கள் உள்ளன. இவர்களின் உத்தரவை மானஸீகமாகப் பெற்றுக் கொண்டு சத்தியமான பொன்னு பதினெட்டு படிகளின் பக்கங்களில் தேங்காய் உடைத்து இருமுடியுடன் ஏறினால் மேலே கொடிமரம் உள்ளது. இதன் வலப்புறத்தில் கற்பூர ஆழி உள்ளது. அங்கிருந்து ஐயப்பனுடைய தென்மேற்காகக் கணபதி உள்ளார்.
கணபதியின் இடது பக்கத்தில் நாகராஜா இருக்கிறார். இங்கிருந்து கோயிலை பிரதக்ஷிணமாக வந்து ஐயப்பனைத் தரிசனம் செய்து வடக்கே உள்ள படிகள் வழி இறங்கி வந்தால் அங்கு பஸ்மக்குளம் உள்ளது. இங்கு சபரி தன் ஜடசரீரத்தை பஸ்மமாக்கி, பரமனிடம் சேர்ந்தார் என்று புராணம் கூறுகிறது. இதற்கு பக்கத்தில் நாகராஜர், நாகயக்ஷி பிரதிஷ்டை உள்ளது. இங்கு நாகதோஷம் நீங்க வழிபடலாம். இதற்கு அருகில் ஒரு குளம் உள்ளது. முன் காலத்தில் இதில் ஸ்வாமியின் பூஜாப் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்பொழுது இதை குளிப்பதற்கு உபயோகப்படுத்துகிறார்கள்.
18. கற்பூர ஆழி : சன்னிதானத்தில் பலிக்கல்லின் அருகில் தரையில் கற்பூரம் எரிந்து கொண்டே இருக்கும் இதைத்தான் கற்பூர ஆழி என்று சொல்வார்கள். ஐயப்ப பக்தர்கள் தங்களுடன் கைவசம் தாராளமாய் வைத்திருக்கும் கற்பரங்களை கற்பூர ஆழியில் இட்டு வணங்குவார்கள்.
19. மாளிகைப்புரம் : மாளிகைப்புறத்தம்மனின் சன்னதி சாஸ்தா ப்ரதிஷ்டைக்கு வடக்காக சற்று தூரத்தில் அமைந்துள்ளது. ஸ்ருஷ்டி, ஸ்துதி ஸம்ஹார காரிணியாக பராசக்தியாக விளங்கும் மாளிகைப்புறத்தமனைத் தரிசிப்பது என்பது சாதாரணமானதல்ல. ஆகையால் திரிசூலம், விளக்கு, போன்றவைகளில் ஆவஹித்து அம்மனை வழிபடுகின்றார்கள். இங்கு நடையில் பக்தர்கள் தேங்காய் உருட்டியும், மஞ்சள் பொடி தூவியும் அம்மனுக்கு ரவிக்கை துண்டு கொடுத்தும் வெடிவழிபாடு நடத்தியும் கும்பிடுவது வழக்கம். சபரிமலை சன்னிதானத்தில் நாம் தரிசிக்க வேண்டிய கடுத்த சுவாமி, கருப்பண்ண சுவாமி, வாவர் சுவாமி என்ற மூன்று சுவாமி நடையுண்டு. பஸ்மகுளத்திற்குச் சற்று வடக்கில் மாளிகைப்புரத்தம்மனின் (மஞ்சமாதா) ஆலயம் உள்ளது. ஆலயத்திற்குச் செல்லும் இடப்பக்கமான வழியில் மேலே சென்றால் இடது பக்கத்தில் கருப்பண்ண ஆலயம் உள்ளது.
20. ஜோதி தரிசனம் : தைமாதம் ஒன்றாம் நாள் மாலை சபரிமலை சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள திசையில் உள்ள காந்தமலை உச்சியில் மாலை 6.30 மணிமுதல் 6.45 மணிவரைக்குள் ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்பா சுவாமி ஜோதி வடிவில் காட்சி அளிப்பார்.