தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது. மேலும் திண்டுக்கல் - கோவை வழியில் திண்டுக்கல்லிலிருந்து 56 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
சுவாமி : தண்டாயுதபாணி
தீர்த்தம் : சண்முக நதி
தலவிருட்சம் : நெல்லி மரம்
சிறப்புக்கள் : முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடான பொதினி எனும் பழனி குன்றின் மீது அமைந்துள்ளது. பழனி மலை கோயில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த குன்றின்மீது அமைந்துள்ள முருக கடவுளின் திரு உருவம் ஒன்பது வகையான நவபாஸாணங்களைக் கொண்டு போகர் சித்தரால் நிறுவப்பட்டதாகும். அலகு குத்துதல், காவடி எடுத்தல், முடிகாணிக்கை, பால்குடம் எடுத்து வருதல் என பல்வேறு பிரார்த்தனைகளை நிறைவேற்றி மேன்மையடையலாம்.தமிழகத்தின் முக்கிய பிரார்த்தனை தலம். தமிழகத்தின் அதிக வருமானம் ஈட்டித்தரும் திருக்கோவில்கள் வரிசையில் இத்திருக்கோவில் முதலிடம் வகிக்கிறது.
இத்தலத்தின் நகரப்பகுதி திருஆவினன்குடி என்றும் மலைப்பகுதி பழநியாகவும் இன்று அமைந்துள்ளன. இவ்விரண்டையும் இணைத்தே பழநி என்னும் பெயரால் வழங்கப் பெற்று வருகின்றது. இத்தலத்திற்கு சித்தன் வாழ்வு என்னும் பெயரில் ஒரு திருப்பெயரும் உண்டு. இத்தலத்தின் வடகிழக்கில் சிறிது தொலைவில் சரவணப் பொய்கை உள்ளது இப்பொய்கையில் நீராடியே கோயிலுக்குள் செல்ல வேண்டும். இக்கோயிலில் முருகபெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமி என்னும் திருப்பெயருடன் காட்சி தருகிறார். இவ்வேலாயுத சுவாமியை கண்டு வழிபட்ட பின்னரே மலைக் கோயிலாகிய தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்ல வேண்டியது முறையாகும். இத்திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விசேஷமானது. இம்மலைக்கு எதிரில் சிறிது தொலைவில் இடும்பன் மலை காணப்படுகிறது. பழநிமலைக்கு சிவகிரி என்றும் இடும்பன் மலைக்கு சக்திகிரி என்ற பெயரும் உண்டு.
மலைமேல் உள்ள முருகர் போகர் என்னும் சித்தரால் என்றும் அழியாத ஒன்பது பாஷாணங்களை உருவாக்கி ஒன்று சேர்த்து அமைக்கப் பெற்றவர். எப்போதும் அபிஷேகம் நடந்து கொண்டே இருக்கும். முருகபெருமானின் திருமேனியில் தோய்ந்த அபிஷேகப் பொருட்கள் தீராத நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் உடையது. குன்மம், குட்டம் போன்ற தீராத நோய்களையும் தீர்க்கக்கூடியது. பழனிப் பஞ்சாமிர்தமும், முருகன் திருவடிகளில் அப்பி வைத்த சந்தனமும் அளவிட முடியாத ஆற்றல் வாய்ந்தவை. இரவு அர்த்த ஜாமத்தில் தண்டாயுதபாணியின் மேல் சாத்தப்படும் சந்தனமும், கவுவீன தீர்த்தமும் அடுத்தநாள் அதிகாலையில் நிகழும் விசுவரூப பூஜைக்குப் பின் வழங்குவர். இவை தீராத நோயையும் தீர்க்கும் மருத்துவ குணமுடையவை. தண்டாயுதபாணியின் திருமேனியில் பட்ட விபூதியும் பன்னீரும் அபிஷேகப் பாலும், பஞ்சாமிர்தமும் சிறப்புமிக்கவை.
கோயில் அமைப்பு : பழநிமலையைச் சுற்றி சுமார் 3 கி.மீ தொலைவிற்குச் சோலைகள் நிறைந்த அழகிய மலைப் பிரகாரம் அமைந்துள்ளது. இப்பிரகாரத்தின் திருப்பங்களில் மயில் உருவச் சிலைகளையுடைய மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மலையடிவாரத்தில் படிக்கட்டுப் பாதையின் தொடக்கத்தில் பாதவிநாயகர் கோயிலும், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இப்பகுதியை ஆண்ட பாளையக்காரர்களுடைய சிலைகளும் அமைந்துள்ளன. பாதவிநாயகர் கோயிலை அடுத்து பெரிய மண்டபம் அமைந்துள்ளது இம்மண்டபத்தில் கண்ணப்பர் தெய்வயானை திருமணம், சூரசங்கார சுப்பிரமணியர், வீரவாகுதேவர் ஆகியோரின் சிற்பங்கள் கலைநுட்பம் வாய்ந்தவையாக காட்சியளிக்கின்றன. மலைமீது ஏறிச்செல்பவர்கள் இளைப்பாறுவதற்கான மண்டபங்கள் படிக்கட்டு பாதையில் இடையிடையே அமைக்கப்பட்டுள்ளன. பாதையின் வழியே விநாயகர் இடும்பன் சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு செல்வதற்குப் படிகட்டு பாதை தவிர யானைப்பாதை, இழுவை ரயில், தொங்கு கயிறு வண்டி (ரோப் கார்) ஆகியவையும் உள்ளன. இம்மலையின் உச்சியில் எம்பெருமான் தண்டாயுத பாணியின் திருக்கோயில் இரண்டு அகலமான பிரகாரங்களுடனும் ஐந்து நிலைகள் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடனும் அமைந்து விளங்குகிறது. இரண்டாம் பிரகாரத்திலிருந்து கோயிலுள் செல்லும் வழியில் மணிக்கட்டு மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் அருகில் வல்லப விநாயகர் சந்நிதியும், கொடிமரமும், அக்கினி குண்டமும் ,தங்கரதம் இருக்கும் மண்டபமும் அமைந்துள்ளன.
மணிக்கட்டு மண்டபத்தை அடுத்துள்ளது நாயக்கர் மண்டபம். இம்மண்டபத்தில் சுப்பிரமணிய விநாயகர், நக்கீரர், அருணகிரிநாதர் சந்நிதிகள் அமைந்துள்ளன. ராஜகோபுர வாயிலைக் கடந்தவுடன் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பாரவேல் மண்டபமும், நவரங்க மண்டபமும் அமைந்துள்ளன. பாரவேல் மண்டபத்திலிருந்து முதல் பிரகாரம் சுற்றிச் சென்று தண்டாயுதபாணி திருச்சந்நிதியை அடைகிறது. முதல் பிரகாரத்தின் வடபாகத்தில் மலைக்கொழுந்தீசுவரர், அம்பிகை நவவீரர்கள் முதலியோர் சந்நிதிகளும் தென்பாகத்தில் சப்தகன்னியர், கைலாசநாதர், சண்டிகேசுவரர் முதலியோர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. தென்கிழக்குப் பாகத்தில் பதினென்சித்தர்களுள் ஒருவரான போகருக்குக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் போக சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட புவனேசுவரி, மரகதலிங்கம் உருவங்கள் காணப்படுகின்றன. இங்கு ஒரு சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இப்பாதை தண்டாயுதபாணியின் திருவடிவரை செல்கின்றதென்றும் இச்சுரங்கப்பாதையுள் சென்ற போகர் திரும்பிவராமல் முருகனின் திருவடிப் பேற்றினை எய்தினாரென்றும் கூறப்படுகிறது. நவரங்க மண்டபத்தின் ஆரம்பத்தில் உலோகத்தால் அமைக்கப்பட்ட சேவற்கொடி காணப்படுகிறது. அடிக்கடி ஓர் உயிருள்ள சேவல் இக்கொடி மீது வந்து அமர்ந்து கூவுகின்றது. இது இத்தலத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று ஆகும். இச்சேவற்கொடிக்கு சற்று தொலைவில் தட்சிணாமூர்த்தி கோயில் அமைந்துள்ளது வேலைப்பாடுகள் நிறைந்த பன்னிரண்டு தூண்களைக் கொண்ட நவரங்க மண்டபத்தில் நடராசர் நவவீரர்கள் வேலாயுத விசுவநாதர் முதலிய உற்சவ மூர்த்திகள் காட்சி தருகின்றனர். இங்கு சண்முகருக்கும் தண்டாயுதபாணி உற்சவமூர்த்திக்கும் தனிச்சந்நிதிகள் உள்ளன. நவரங்க மண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும் கருவறையும் உள்ளன. கருவறை மீது உள்ள விமானம் பொன்னால் வேயப்பட்டு பொலிவுடன் காட்சியளிக்கிறது. முருகப்பெருமான் கருவறையினுள் பாலமூர்த்தியாக கோவணாண்டியாக தண்டாயுதபாணியாக அருள் பொழியும் திருநோக்குடன் ஒரு கரத்தில் தண்டு ஏந்தி மறுகரத்தை இடையில் அமர்த்தி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு பங்குனி மாதம் நடைபெறம் உத்திரப் பெருவிழா மிகவும விசேஷமாக கருதப்படுகிறது.
தலவரலாறு : மகாவிஷ்ணுவின் கோபத்திற்கு ஆளான மகாலெட்சுமி, பூமாதேவி, விஸ்வாமித்திரரின் சாபத்திற்கு ஆளான காமதேனு, ஈசனின் சாபத்திற்கு ஆளான சூரியன், அக்னி இவர்கள் அனைவரும் தங்களுக்கு விமோசனம் கிடைப்பதற்காக நெல்லி வனமான மலையிலே முருகனை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். முருகனும் அவர்களுக்கு விமோசனம் அளிக்கிறார். முருகனால் விமோசனம் அடைந்த இவர்களின் பெயர்களாலயே திருஆவினன்குடி என்ற பெயர் உருவாகிற்று. திரு என்றால் லெட்சுமி ஆ - காமதேனு இனன் - சூரியன் கு - பூமாதேவி டி - அக்னி என திருஆவினன்குடி என வழங்களாயிற்று. இடும்பாசுரன் என்பவன் சூரபத்மனின் குருநாதர். அவன் சூரபத்மனுக்கு பல கலைகளை கற்றுக் கொடுக்கிறான். சூரபத்மனின் தொல்லை தாங்காமல் இடும்பாசுரன் அவனது குருவான அகஸ்தியரிடம் போய்விடுகிறான். அகஸ்தியர் இடும்பாசுரனுக்கு ஒரு அன்புக்கட்டளையிடுகிறார். தான் வழிபடுவதற்காக கையிலையிலிருந்து சிவகிரி, சக்திகிரி என இரண்டு கிரிகளை கொண்டுவா என்று கட்டளையிடுகிறார். இடும்பாசுரன் இடும்பையேடு சென்று, தனது பிரம்மதண்டத்தில் ஒருபக்கம் சிவகிரி, மறுபக்கம் சக்திகிரி இரண்டையும் தோளில் சுமந்து கொண்டு வருகிறான். களைப்பு மிகுதியால் திருஆவினன்குடி வந்தவுடன் அதை கீழே இறக்குகிறான். பின் இளைப்பாறிய பிறகு சிவகிரி, சக்திகரி மலைகளை தூக்க முயிற்சிக்கிறான். தூக்க முடியவில்லை. சிவகிரி மேலே முருகன் அமர்ந்திருக்க அவரை கீழே இறங்கச் சொல்கிறான். அவர் இறங்க மறுக்க சினம் கொண்ட இடும்பன் அவரை கம்பால் அடிக்க முயல, அவன் மயங்கி விழுகிறான். பின் இடும்பையும், அகஸ்தியரும் முருகனிடம் சென்று முறையிட முருகன் இடும்பனை மயக்கம் தெளிந்து எழச்செய்கிறான். இடும்பாசுரனின் குருபக்தியை மெச்சி இடும்பனையே தனது காவல் தெய்வமாக ஆக்கிக்கொள்கிறார். இதனால்தான் பழநி மலை அடிவாரத்தின் கீழ் இடும்பனின் கோவில் இன்றளவும் காணப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இன்றளவும் முருகனுக்கு காவடி எடுப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் முருகன் அருளுகிறார் என்பது மக்களின் நம்பிக்கை.
பழனி திருத்தலம் முற்காலத்தில் கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கி வந்துள்ளது. பழனி பகுதியைக் கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்றே குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக் கோப்பெரும் பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர்.
சித்தர் போகர் தமிழ் நாட்டு வேட்கோவர் வகுப்பைச் சார்ந்தவர். சர்வ சாத்திரங்களையும் கற்றுத் துறை போகியவர். அது காரணம் பற்றியே அவர் போகர் என்று அழைக்கப்பட்டார். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் ஆவர். காய கல்ப மூலிகைகளைப் பயன்படுத்தி காயசித்தி செய்து கொண்டவர். உலக மொழிகள் பலவற்றையும் அறிந்திருந்தார். பல நாடுகளுக்கும் சென்று நம் நாட்டு வைத்திய, யோக முறைகளை திக்கெட்டும் பரப்பியவர். ஆயிரத்து எழுநூறு பாடல்களால் ஒரு நிகண்டு செய்தவர்.
இடைக்காடர், கருவூரார், புலிப்பாணி, கொங்கண்ர் ஆகியோர் போகரிடம் அஷ்டமா சித்துகளைப் பயின்றனர். போகர் தமது மாணாக்கர்களுடன் சீன தேசம் சென்று பல கருவி நூல்களும், இயந்திர நூல்களும் இயற்றி அங்குள்ளவர் அறிவியல் ஞானம் பெறச் செய்தார். சில காலம் கழித்து தமிழ் மண்ணுக்குத் திரும்பியவர், பழனியில் வாழ்ந்தார்.
நவபாஷாணங்களின் சேர்க்கையில் பழனி மலை முருகன் சிலையை உருவாக்கினார். இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும், ஆன்மீகத்தில் ஞான சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. போகரின் சமாதி பழனி மலையில் உட் பிரகாரத்தில் அமைந்துள்ளது. இங்கே போகர் பூஜித்து வந்த நவ துர்கா, புவனேஸ்வரி, மற்றும் மரகதலிங்கம் சிலைகளுக்கு தினசரி பூஜைகள் நடை பெற்று வருகிறது.
கோவில் வரலாறு : ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும்,விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் பழனி என அழைக்கப்படுகிறது. பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.
அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார்.
நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
உச்சியை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளது யாணை பாதை ஏறுவதற்கு பயன்படுத்தினால் எளிதாக இருக்கும். நோ் பாதை இறங்குவதற்கு பயன்படுத்தலாம். பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி. ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில். வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். அழகு எனும் பொருளில் பெயர் கொண்ட முருகப் பெருமான் தமிழர்கள் வாழும் இடங்களில் ஆட்கொண்டிருப்பார். உலகில் தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இடங்களில் பழனி மிக முக்கியமான இடமாகும். ரோப் கார் இந்த மலை மீது ஏறுவதை எளிமையாக்கும் வகையில் ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. இரவு மற்றும் பராமரிப்பு பணிகள் இடைவேளைத் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் ரோப் கார் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலுள்ள கோயிலுக்கு போக 690 படிகள் ஏறவேண்டும். தண்டாயுதபாணி ஆலயம் சேர மன்னன் சேரமான் பெருமாலால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. பழனி முருகன் மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது.
ஆண்டி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான்.
ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள். தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும்.
இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் ஒன்பது வருடம்.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு தகவல் உண்டு.
அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார். போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.
திருவிழாக்கள் : சித்திரை வருடப்பிறப்பு, சித்ராபௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப் பூரத்திருவிழா, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விஜயதசமி அம்புவில் போடுதல், கந்தசஷ்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், திருக்கார்த்திகை, *திருவாதிரை உற்சவம். தைப்பூசம் திருத்தேர், மாசிமகம், சங்காபிஷேகம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.
திருக்கோவில் காலை 6.00 இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் காலை 4.00 மணி முதல் இரவு இராக்கால பூஜை முடியும் வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : பழனி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு