திருக்கரம்பனூர், உத்தமர் கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தின் தலைநகரான திருச்சியிலிருந்து 8 கி.மீ தொலைவிலும், திருவரங்கத்திலிருந்து கொள்ளிட நதியைக் கடந்து வடக்கே சென்றால் 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மூலவர் : புருஷோத்தமன் புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : பூர்ணவல்லி, பூர்வாதேவி
தல தீர்த்தம் : கிழக்கே கதம்பதீர்த்தமும், தெற்கே அய்யன் வாயக்காலும் கோவிலின் தென்புறத்தில் கிணறும் உள்ளன. வடபுறத்தில் பிரகலாத தீர்த்தமும், தெற்கில் பிரம்ம தீர்த்தமும் உள்ளன.
தல விருட்சம் : கதம்பமரம்.
மங்களாசாசனம் : திருமங்கை ஆழ்வார் - 1பாசுரம்
பாடியோர் : அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர்.
தலச் சிறப்புகள் : திருமாலின் திருமார்பில் லட்சுமியும் நாபியில் பிரம்மாவும் அமைந்துள்ளார்கள். இக்கோவிலில் விமானம் செவ்வடிவில் அமைந்து பல சிற்பங்களைத் தாங்கி இருப்பது விசேஷம். புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் கோயில் எனப் புகழ் பெற்றது. பல மன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்ததாக இங்கு காணப்படும் குறிப்புகள் வெளியிடுகின்றன. இவர்களுள் சோழ மன்னன் கேசரிவர்மனும், பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனும் அடங்குவர்.
பிஷாடண மூர்த்தியாக சிவன் காட்சி அளிப்பதால் பிஷாண்டார் கோயில் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. திருமங்கையாழ்வார், கதம்ப மகரிஷி, உபரிசிரவசு, சனகர், சனந்தனர், சனத்குமாரர், முதலியவர்களுக்கு அரும் காட்சி தந்தருளிய பெருமான் இவர். மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியருடன் அருகருகே தனித்தனி சந்நிதிகளில் அமைந்து அருளும் தலம் இந்தியாவில் இது ஒன்றே. மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 வைணவத் திருப்பதிகளில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த பெருமை உடையது. சிவபெருமானின் 63 மூர்த்தங்களில் ஒன்றாகிய பிச்சாடனர் திருகோலம் அவதரித்த தலம். ‘சப்தகுருக்கள்’ என்று அழைக்கப்படும் ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம். தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில் பிரம்மா அருளும் தலம். பிரம்மாவின் இடப்புறம் தனிசன்னதியில் ஞானசரஸ்வதி குடிக்கொண்டு இருக்கும் ஸ்தலம்.
தல வரலாறு : ஆதிபிரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அந்த உருவிலும் பிரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டதால், மனம் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நிதி கொள்ளுமாறு செய்ததாகவும் கூறுவர். இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்ம தேவனுக்கும் சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒரு சமயம் நிஷ்டையில் அமர்ந்திருந்த பார்வதிதேவி சற்றே விழித்து நோக்கும் போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பிரம்மனைத் தனது பெருமான் என்று எண்ணிப் பாதபூசை செய்தாள். தற்செயலாக அதைப் பார்த்த சிவபெருமான் சினந்து பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளியெறிந்து விட்டார். இதனால் "பிரம்மஹத்தி" தோஷம் ஏற்பட்டு சிவபெருமான் கபாலம் ஏந்தி பிச்சை எடுத்து பல ஸ்தலங்களைத் தரிசித்தார் இதனால் இங்கு சிவபெருமான் 'பிச்சை ஆண்டவர்' என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் இந்த சாபத்திலிருந்து விடுபடவேண்டுமென்றால் கபாலத்தில் உணவு முழுவதுமாக நிரம்பவேண்டும். அதனால் சிவபெருமான் தான் செய்த பாவத்தை போக்குவதற்காக அனைத்து திவ்ய தேசங்களுக்கும் சென்றார். அப்பொழுது ஸ்ரீ மகாலெட்சுமி அவரது கபாலத்தில் உணவினை நிரம்பச் செய்து அவருக்கு சாபவிமோச்சனம் அளித்தார் என்று தலப்புராணத்தில் கூறப்படுகிறது.
மூம்மூர்த்திகளும் மூத்தேவியர்களுடன் ஒரே கோவிலுக்குள் எழுந்தருளியுள்ள இந்த திருக்காட்சி வேறெங்கும் காண்பதற்கு அரிதாகும். எனவே திருமூர்த்தி சேத்திரம் எனவும் வழங்கப்பெறுகின்றது. பெருமாள் கதம்ப மரமாக உருவெடுத்து நின்றமையால் கதம்பனூர் என்று இத்தலம் அழைக்கப்பட்டுப் பிறகு கரம்பனூர் ஆயிற்று. திருமங்கையாழ்வாரால் உத்தமன் என்று இப்பெருமாள் அழைக்கப்பட்டதால் உத்தமர் கோயில் என்று பெயர் பெற்றது. நாகலிங்க பூ என்று புகழ்பெற்ற கிடைப்பதற்கு அரிதான பூ இங்கு கிடைக்கும். கோயிலில் இந்த விஷேச பூக்களை கொண்டு பூஜை செய்வது வழக்கம்.
பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.
விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லித் தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை