28. திருக்காழிச்சீராம விண்ணகரம்





	


	



























	




 




	








 




5:13:45 AM         Saturday, May 02, 2026

28. திருக்காழிச்சீராம விண்ணகரம்

28. திருக்காழிச்சீராம விண்ணகரம்
28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம்
Product Code: 28. திருக்காழிச்சீராம விண்ணகரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                     திரிவிக்கிரமன், திருக்காழிச்சீராம விண்ணகரம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் பேருந்துகள் இக்கோயிலின் வாயிலிலேயே நிற்கின்றது.

மூலவர் : திரிவிக்கிரமன்  தாடாளன் உலகளந்த திருவுருவம்

உற்சவர் : தாடாளன்

தாயார் : லோகநாயகி

தல விருட்சம் : பலா

தீர்த்தம் : சங்க புஷ்கரணி, சக்கர தீர்த்தம்

விமானம் : புஷ்கலாவர்த்த விமானம்

ப்ரத்யக்ஷம் : அஷ்டகோண மஹரிஷி

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

தலச் சிறப்புகள்: மூலவர் உலகளந்த உருவத்தோடு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். ஸ்ரீராமர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளதால் சீராம விண்ணகரம் எனப் பெயராயிற்று. உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம்.  மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார். உற்சவர் தாடாளன் வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே காட்சி தருகின்றார்.

108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களைத் திருமங்கையாழ்வார் விண்ணகரம் என்று குறிக்கின்றார். விண்ணகரம் என்றால் விண்ணில் உள்ள பரமபதத்திற்குச் சமமான தலம் என்பது பொருள். அந்த விண் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். மணவாள மாமுனிகள் இரண்டுமுறை இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார். ஒரு சமயம் இததலம் அழிவுற்றபோது உற்சவப் பெருமாளை மட்டும் ஒரு மூதாட்டி தவிட்டுப் பானையில் வைத்து காத்து தினமும் திருவாராதனம் முடித்து மீண்டும் தவிட்டுப் பானைக்குள்ளேயே வைத்து வந்தாள். திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம் அந்த மூதாட்டியின் கனவில் வந்த எம்பெருமான் தன்னை திருமங்கையிடம் ஒப்புவிக்குமாறு கூற அவ்விதமே திருமங்கையாழ்வாரிடம் கொடுக்க அவர் இங்கே பிரதிஷ்டை செய்தார்  என்பர். இங்கு செல்வ தெய்வநாயகன் சந்நிதி உள்ளது. பிரம்மாவிற்கு ஆயுளைப்பற்றி கர்வம் ஏற்பட்டபொழுது ரோமச முனிவர் உன் ஆயுசும் என் ரோமமும் சமம் என்று கூறி அவர் கர்வத்தை அடக்கினார்.

தல வரலாறு : இத்திருத்தலம் இருந்த பகுதிக்கு பாலீக வனம் என்றும் சேத்திரத்திற்கு "உத்தமசேத்திரம்" என்றும் உரோமசர் என்னும் மகாமுனிவர் இங்குத் தவமியற்றியதாகவும் முனிவரின் வேண்டுகோளுக்கு இசைந்து இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் திரிவிக்கிரம அவதாரம் எடுத்து தன் கால்களால் உலகம் அளந்தமையால் இப்பெருமாளுக்கு தாள்  ஆளம் ஸ்ரீ தாளாளன் - தாடாளன் என்ற திருநாமம் ஆயிற்று.

படைக்கும் கடவுளான பிரம்மா பல யுகங்கள் வாழும்படி சாகாவரம் பெற்றிருந்தார். இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகவே, தனது பணியையும் அவர் சரியாக செய்யவில்லை. அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார் மகாவிஷ்ணு. இதனிடையே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத்தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு ஆசை எழுந்தது. சுவாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, தன் இடக் காலை தூக்கி திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், “என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை பெறுவீர்கள். மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்’ என்று கூறி இத்தலத்தில் திரிவிக்கிரமனாக எழுந்தருளினார். மகாவிஷ்ணு சூட்சுமமாக தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா தன் கர்வம் அழியப்பெற்றார்.

கருவறையில் இடது காலை தலைக்கு மேலே தூக்கிக்கோண்டு, வலக்கையை தானம் பெற்ற அமைப்பிலும், இடக்கையை மீதி ஒரு அடி எங்கே எனக்கேட்டு ஒரு விரலை மட்டும் தூக்கியபடி திரிவிக்கிரமர் காட்சி தருகிறார். இவருக்கு மேல் உள்ள விமானம் புஷ்கலா வர்த்த விமானம் எனப்படும். சாளக்கிராம மாலை அணிந்தபடி இருக்கும் இவரது சங்கும், பிரயோக சக்கரமும் சாய்ந்தபடியே இருக்கிறது. வலது பாதத்திற்கு அருகில் உற்சவர் தாடாளன் இருக்கிறார். இவரை “தவிட்டுப்பானை தாடாளன்’ என்றும் சொல்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.”தாள்’ என்றால் “பூமி அல்லது உலகம்’, “ஆளன்’ என்றால் “அளந்தவன்’ என்று பொருள். தன் திருவடியால் மூன்று உலகங்களையும் அளந்தவன் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு “தாடாளன்’ என்ற பெயரை சூட்டினாள். சுவாமியை குறித்து ஆண்டாள் தனது திருப்பாவை, நாச்சியார் திருமொழியிலும் பாடியிருக்கிறாள். அருகில் குழந்தை தொட்டிலில் சந்தான கோபால கிருஷ்ணர் இருக்கிறார். புத்திரப்பேறு இல்லாதவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியை தாங்கியபடி இருப்பதைப்போல, இங்கு தாயார் லோகநாயகி மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கியபடி காட்சி தருகிறாள். ஒரு கால் ஊன்றி மற்றொரு காலைத் தூக்கி நின்று கொண்டிருப்பதால் சுவாமியின் பாதம் வலித்து விடாமல் இருக்க அவரை இத்தலத்தில் மகாலட்சுமி தாங்குகிறாளாம். எனவே அவள் தன் மார்பில் சுவாமி பதக்கத்தை அணிந்திருக்கிறாள். இந்த தரிசனம் விசேஷமானது. பெண்கள் இவளை வணங்கினால் கணவர் மீது கூடுதல் அன்பு காட்டுவர், பிரிந்திருக்கும் கணவனுடன் மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை. உற்சவ அம்பாள் தாயாரை மறைத்தபடி இருப்பதால், இவளது திருமுகத்தை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். தன்னை தாங்கும் கணவனை தான் தாங்குவதை யாரும் பார்த்து விடாமல் இருக்க இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள்.வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

தேவாரம் பாடிய நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் இவ்வூரில்தான் பிறந்தார். அவர் இங்கேயே தங்கியிருந்து சிவத்தொண்டு செய்து வந்தார். இக்கோயில் சிலகாலம் வழிபாட்டில் இல்லாதிருந்தபோது, உற்சவர் தாடாளனை ஒரு மூதாட்டி தன் வீட்டில் ஒரு தவிட்டுப்பானையில் மறைத்து வைத்து தினமும் பூஜைகள் செய்து சுவாமியை வணங்கி வந்தாள். ஒருசமயம் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தார். அவருடன் வந்தவர்கள் திருமங்கையைப் போற்றிப் பாடிக்கொண்டு வந்தனர். இதைக்கண்ட சம்பந்தரின் சீடர்கள் அவர்களை அமைதியாகச் செல்லும்படி கூறினர். அவர்களோ மறுத்தனர். இருவருக்குமிடையே வாதம் உண்டானது. இறுதியில் திருமங்கைக்கும், சம்பந்தருக்கும் மறுநாளில் வாத போட்டி வைப்பது என முடிவானது. எனவே, அன்றைய தினம் திருமங்கை சீர்காழியிலேயே தங்கினார். இரவில் திருமங்கையின் கனவில் தோன்றிய பெருமாள், தான் மூதாட்டியின் தவிட்டுப்பானைக்குள் இருப்பதாகவும், தன்னை வணங்கி வாதத்தில் வெல்லும்படி சொன்னார். அதன்படி மூதாட்டியிடம் தாடாளனை திருமங்கை வாங்கிக்கொண்டார்.மறுநாள் போட்டி ஆரம்பமானது. சம்பந்தர் திருமங்கையிடம், ஒரு குறள் சொல்லும்படி கூறினார். திருமங்கை, “குறள்’ எனும் சொல்லையே முதலாவதாக தொடங்கி பெருமாளின் பத்து அவதாரங்களைப் பற்றி ஒன்று, இரண்டு என வரிசையாக பாடினார். திருமங்கையின் பெருமையை உணர்ந்த சம்பந்தர் அவரைப் பாராட்டி தான் வைத்திருந்த வேலை அவருக்கு பரிசாகக் கொடுத்து, காலில் தண்டையையும் அணிவித்தார்.பின் திருமங்கை இக்கோயிலை மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். தாடாளனையும், தாயாரையும் பாடியதோடு சுவாமி எழுந்தருள காரணமான உரோமசரையும் சேர்த்து தன் பெயர்கள் அனைத்தையும் குறிப்பிட்டு மங்களாசாசனம் செய்தார்.

முன்மண்டபத்தில் வராக அவதாரம் எடுத்த பெருமாள் வலக்கையை தானம் பெற்ற கோலத்தில் வைத்து, இடக்கையில் குடை பிடித்தபடி சாளக்கிராம மாலை அணிந்து காட்சி தருகிறார். சுவாமியிடம் வேண்டிய செயல்கள் நிறைவேறியவர்கள் இவரிடம் நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள். இவருக்கு அருகிலேயே கையில் வேலுடன், காலில் தண்டை அணிந்த கோலத்தில் திருமங்கையாழ்வார் இருக்கிறார்.உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ராமர் சன்னதியும், கோயிலுக்கு எதிரே வெளிப்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கிறது. இங்குள்ள தங்க கருடனுக்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடக்கிறது. இக்கோயிலுக்கு மிக அருகிலேயே திருஞானசம்பந்தருக்கு பார்வதி தேவி பாலூட்டிய சட்டைநாதர் கோயில் இருக்கிறது. பணிகளில் சிறக்க, பதவி உயர்வு பெற, ஆயுள் விருத்தி பெற இங்கு வேண்டிக்கொள்ளலாம். திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர்.

 

காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் :  சீர்காழி

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×