பிரகலாத வரதன், திருச்சிங்கவேள்குன்றம் (அஹோபிலம்)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள ஆந்திரபிரதேசம் என்னும் மாநிலத்தில் சென்னை மும்பாய் ரயில் பாதையில் உள்ள கடப்பா என்னும் ரயில் நிலையத்திலிருந்து 64 கி.மீ தொலைவில் உள்ள அர்லகட்டா என்ற ஊருக்குச் சென்ற பின்னர் அங்கிருந்து 32 கி.மீ. பஸ்ஸில் செல்லலாம். ஹைத்ராபத்திலிருந்து பஸ்ஸில் வரலாம். இங்கு மலையடிவாரத்தில் ஒரு கோயிலும், மலைமேல் 10 கி.மீ. தொலைவில் மற்றொரு கோயிலும் உள்ளன.
மூலவர் : பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன்
தாயார் : அம்ருதவல்லி, செஞ்சுலட்சுமி
மலைமேல்
மூலவர் : அஹோபில நரசிம்மன்
தாயார் : லட்சுமி
தீர்த்தம் : இந்த்ர, நரசிம்ம, பாபநாச கஜ, பார்க்கவ தீர்த்தங்கள்
விமானம் : குகை விமானம்
ப்ரத்யம் : அஹோபில மடத்து முதல் அழகிய சிங்கருக்கு யோகி ரூபத்தில் ப்ரத்யம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மலை அடிவாரக்கோயிலில் உள்ள மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். “அஹோ” என்றால் “சிங்கம்“. “பிலம்” என்றால் “குகை“. பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலை அடிவாரக்கோயிலில் நரசிம்மரை தரிசனம் கண்டவர்கள்: கருடன், அஹோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான அழகிய சிங்கர். நவ நரசிம்ம க்ஷேத்ரம்: மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. எனவே இதனை “நவ நரசிம்ம க்ஷேத்ரம்” என்பர். மலையின் கீழ் உள்ள அஹோபிலத்தில், பார்கவ நரசிம்மர் (சூரியன்), யோகானந்த நரசிம்மர் (சனி), சக்ரவட நரசிம்மர் (கேது) ஆகிய கோயில்களும், மேல் உள்ள அஹோபிலத்தில், அஹோபில நரசிம்மர் (குரு), வராக (குரோதா) நரசிம்மர் (ராகு), மாலோலா, நரசிம்மர் (வெள்ளி), ஜுவாலா நரசிம்மர் (செவ்வாய்), பாவன நரசிம்மர் (புதன்) காரஞ்ச நரசிம்மர் (திங்கள்) ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தல வரலாறு : இரணியகசிபுவின் மகன் பிரகலாதன். இவனுக்கு நாராயணனின் மீது அளவுகடந்த பக்தி. ஆனால், தந்தையோ, தானே கடவுள் என்று கூறி வந்தான். ஒருமுறை உன் நாராயணனைக் காட்டு என இரணியன் கூற,”அவர் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார், அகில உலகத்தையும் அவரே காத்து வருகிறார்” என நாராயணனின் புகழ் பாடினான். கோபம் கொண்ட இரணியன், தன் கதாயுதத்தால் ஒரு தூணை ஓங்கி அடித்தான். தூண் பிளவுபட்டு, நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். இந்த அவதாரம் இத்தலத்தில் நிகழ்ந்தது. முன்பு பிரகலாதன் இங்கு வாழ்ந்த அரண்மனைப்பகுதி தற்போது காடாக மாறிவிட்டது.
நரசிம்ம அவதார தரிசனத்தை காண்பதற்கு கருடாழ்வாருக்கு ஆசை ஏற்பட்டது. எனவே இந்த தரிசனம் வேண்டி இங்கு தவமிருந்தார். மகிழ்ந்த பெருமாள், மலை உச்சியில் நரசிம்ம அவதாரம் காட்டியருளினார். பக்தபிரகலாதனுக்காக தூணிலிருந்து வெளிப்பட்டது, இரணியனை வயிற்றைக் கிழித்தது, ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது, பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்த நரசிம்மனாக அமர்ந்தது போன்ற இந்த அவதாரத்தின் 9 திருக்கோலங்கள் இங்குள்ளன. கருடன் தவமிருந்ததால் இந்த மலைக்கு “கருடாச்சலம்” என்றும், “கருடாத்ரி” என்றும் பெயர். சேஷாத்ரியாக உயர்ந்திருப்பது திருவேங்கடமலை (திருப்பதி) என்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபிலமாகும்.
கருடனின் வேண்டுகோளின்படி நரசிம்ம அவதாரம் எடுப்பதற்காக வைகுண்டம் விட்டு கிளம்பிய பெருமாள், இத்தலத்தில் வேடுவர் கோலத்தில் இலட்சுமியைத் திருமணம் செய்ததாக ஐதீகம். இங்குள்ள மலையின் மீது பாவநாசினி என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கிருந்து மேலே சென்றால், வராக நரசிம்மரின் சன்னதியைத் தரிசிக்கலாம். அங்கிருந்து 2 கி.மீ. தூரம் சென்றால் மாலோலா நரசிம்மரைத் தரிசிக்கலாம். அடுத்து 3 கி.மீ. தூரம் சென்றால் நரசிம்மர் அவதாரம் எடுத்த தூணும், நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது. மலையடிவாரக்கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை “ஜெயஸ்தம்பம்“, அதாவது வெற்றித்தூண் என்கிறார்கள். இந்த தூணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலை நிறுத்தி உள்ளார்கள் என்பது வியப்புக்குறியது. இந்தத் தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இராமபிரான் சீதையை தேடி வரும் போது, இந்த தூணின் முன்பு வழிபாடு செய்ததாகவும், வழிபாடு செய்தவுடன் சீதை கிடைத்து விட்டதைப்போன்ற உணர்வு இராமனுக்கு ஏற்பட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது. அஹோபில மடங்களுக்கு தலைமைப்பீடம் இதுதான். தற்போது ஸ்ரீ நாராயண யதேந்திர மகாதேசிகன் சுவாமிகள் 45வது ஜீயராக உள்ளார். ஆதிசங்கரர் இங்குள்ள நவ நரசிம்மர்களை வழிபாடு செய்ய வந்தபோது, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாகவும் வரலாறு உள்ளது.
கருடனுக்கு காட்சி கொடுக்க திருப்பாற்கடலை விட்டு வந்ததும், பிராட்டியும் வேடுவர் குலமகளாய் செஞ்சுவலட்சுமி என்னும் பெயரில் சில காலம் அவதாரம் செய்ய, அவளைத் திருமணம் செய்யும் வரை இங்கேயே தங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. மலையடிவாரக் கல்லாலான தூண் ஒன்று உள்ளது, இதற்கு வெற்றித்தூண் என்பர். சீதா தேவியைத் தேடிவரும் போது இராமனும், இலக்குவனும் இத்தலத்தில் நரசிம்மனை வழிபட்டு, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளனர்.
எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட, பிரார்த்தனை செய்யலாம். நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது. கர்நூல் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி, அங்கிருந்து கோயிலுக்குச் செல்லலாம். மலைமீதுள்ள நரசிம்ம தலங்களை தகுந்த பாதுகாப்புடன் சென்றால் தான் தரிசிக்க முடியும். மாலை நேரத்தில் மிருகங்களின் நடமாட்டம் இருக்கிறது. கரடுமுரடான பாதைகளுடன், செங்குத்தான மலைமீதும் ஏற வேண்டும். மாலை 6 மணிக்குள் மலைக்கோயில் தரிசனத்தை முடித்து இறங்கி விட வேண்டும். ஆலய விடுதிகளும், மடத்தின் விடுதிகளும் இங்கு உண்டு. அனைத்து சந்நிதிகளையும் தரிசிக்க வேண்டும் என்றால் இரண்டு நாட்களாவது ஆகும். ஸ்வாதி நட்சத்திரத்தினங்களில் எல்லா உற்சவ நரசிம்மர்களையும் கீழே சேவிக்கலாம்.
மலை அடிவாரக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, மதியம் 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். மலைக்கோயில் காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, மதியம் 3.00 மணி முதல் இரவு 6.00 மணிவரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : ஹைதராபாத், திருப்பதி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கடப்பா, நந்தியால், கர்நூல்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு