வரதராஜப்பெருமாள், திருமணிக்கூடம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருநாங்கூருக்குக் கிழக்கே 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மூலவர் : வரதராஜன் (மணிக்கூட நாயகன்)
தாயார் : திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி
விமானம் : கனக விமானம்
ப்ரத்ய~ம் : பெரிய திருவடி, சந்திரன்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 37வது தலம் ஆகும். வரதராஜப் பெருமாள் கோயில் என அழைக்கப்படுகிறது. திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கே மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு காட்சி தருகிறார்.
கோவில் அமைப்பு : இத்தலத்தின் உள்ளே சென்றதும் பலிபீடம், கருடாழ்வார் சன்னதி உள்ளது. மகாமண்டபம், அர்த்த மண்டபம் உள்ளது. கருவறையில் மூலவர் வரதராஜப் பெருமாள் தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்றபடி ஸ்ரீதேவியும், இடது புறத்தில் பூமா தேவியும் காட்சியளிக்கிறார்கள். அருகிலேயே உற்சவமூர்த்தி அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தின் வட புறத்தில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டுதோறும் தை அமாவாசை மறு தினம் திருநாங்கூர் மணிமாட கோவிலில் 11பெருமாள்களும் எழுந்தருளும் கருட சேவை உத்சவம் நடைபெறும். 11பெருமாள்களில் ஒருவரான திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் தங்க கருடவாகனத்தில் திருநாங்கூர் கருடசேவைக்கு எழுந்தருள்வார். தீராத நோய்கள் எல்லாம் திருமணிக்கூடம் சென்றால் தீர்ந்து விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
தல வரலாறு : தக்கனுக்கு 27 மகள்கள் இருந்தனர். சந்திரன் தக்கனின் 27 மகள்களையும் திருமணம் செய்து கொண்டார். சந்திரன் தன் 27 மனைவியிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் வாக்கு கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த அன்புடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையான தக்கனிடம் முறையிட்டனர். தக்கன் கோபம் கொண்டு சந்திரனுக்கு "உன் அழகும், ஒளியும் தினமும் குறையட்டும்”, என சாபம் கொடுத்தார். சாபத்தின் காரணமாக முழு சந்திரன் நாளுக்கு நாள் தேய தொடங்கினான். சாபம் நீங்க பல தலங்களுக்கு சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். இத்தலத்தில் பெருமாள் வரதராஜனாக காட்சி தந்து சந்திரனின் சாபம் நீக்கி வரமளித்தார்.
காஞ்சி வரதராஜப் பெருமாள் போலவே இப்பெருமாளும் வரந்தருவதில் வல்லவராகிறார். பெரியதிருவடி, சந்திரன், இவ்விருவருக்கும் பெருமாள் இத்தலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம், நாங்கூர் மணிக்கூடத்திலே, எங்கும் தென்றல் உலவுகிறது என்றும், அந்தத் தென்றலும், மணங்கொண்டு உலவுகிறது என்றும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். மலர் மணத்தைக் குறிப்பிடாமல் இப்பெருமாளின் தெய்வீக மணத்தைத்தான் இப்படிக் குறிப்பால் ஆழ்வார் உணர்த்துகிறார். இத்தலத்திலுள்ள பகவானை எந்தை என்று உரிமையோடும், பாசத்தோடும் அழைக்கிறார். ஆழ்வார் பெருமாளை அவனே குன்றம் எனவும், அவனே மண் எனவும், அவனே குளிர் புனல் எனவும், அவனே திங்கள் எனவும், அவனே வெண்சுடர் எனவும், அவனே எல்லாம் எனவும், பகவானின் அளப்பரிய தன்மையை எடுத்துரைக்கிறார்.
தீராத நோய்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். திருநாங்கூரிலிருந்து அர்ச்சகரை அழைத்துச் செல்ல வேண்டும்.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு