நீள்நெறிநாதர் கோவில், திருத்தண்டலைநீள்நெறி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மி. தொலைவில் தண்டலச்சேரி கிராமம் இருக்கிறது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது.
சுவாமி : நீள்நெறிநாதர், ஸ்திர புத்தீசுவரர்
அம்பிகை : ஞானாம்பிகை
பதிகம் : திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள்: தண்டலை என்பது இக்காலம் தண்டலைச்சேரி என வழங்கப் பெறுகின்றது. கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏறாத, ஏறமுடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான். அத்தகைய ஆலயங்களில் திருத்தண்டலைநீள்நெறி கோவிலும் ஒன்றாகும்.
கோவில் அமைப்பு: கோவிலுக்கு ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு மண்டபத்தில் கொடிமரத்து விநாயகர் உள்ளார். கொடி மரமில்லை. கொடிமர விநாயகர் அடுத்து பலிபீடம், நந்தி உள்ளன. பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சந்நிதியும், தொடர்ந்து சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகளும் உள்ளன.
கருவறை முன்மண்டபத்தில் கோச்செங்கட்சோழன், அரிவாட்டாய நாயனார், நால்வர் மூலத்திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மேற்புறத்தில் இருமருங்கும் அரிவாட்டாய நாயனார்,அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது, இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு நாயனாரைத் தடுப்பது, நாயனாருக்கும் மனைவியாருக்கும் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தருவது முதலியவை சிற்பங்களாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. நடராஜர், நால்வர், மனைவியுடன் அரிவாட்டாய நாயனார், கோச்செங்கட்சோழன் ஆகிய திருமேனிகள் சிறப்புடையவை. நடராஜ சபை வலதுபுறம் உள்ளது. சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இத்தலத்திலுள்ள மூலவர் சிவலிங்கம் அழகான சிறிய திருமேனி. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. துர்க்கை சந்நிதி தனி விமானத்துடன் உள்ளது.
அரிவாட்டாய நாயனார்: வேளாளர் குலத்தில் தாயனார் என்ற சிவனடியார் அவதரித்தார். இவர் சிவனடியார்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டிருந்தார். தண்டலச்சேரியில் அருள்பாலிக்கும் இறைவனுக்கு நாள்தோறும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து வந்தார். இவரது மனைவியும் இவரைப்போலவே இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு சமயம் வறுமை ஏற்பட்டது. வறுமையைக்கண்டு அடியார் மனம் தளராமல் தெய்வத்திருப்பணியை விடாமல் செய்து வந்தார். கூலிக்கு ஆள் வைத்து நெல் அறுத்து வந்த இவர், வறுமை காரணமாக தானே கூலிக்கு நெல் அறுக்க சென்றார். வேலைக்கு கூலியாக கிடைக்கும் நெல்லைக்கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். பின்னரும் இவரை இறைவன் சோதிக்க நினைத்தார். இவருக்கு கூலியாக கிடைத்ததெல்லாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததால், இவரது குடும்பத்திற்கு உணவில்லாமல் போனது. இவரும் இவரது மனைவியும் கீரையை மட்டும் சாப்பிடத் தொடங்கினர். நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தண்ணீரை குடித்து வாழத்தொடங்கினர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்காவது நெல் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் வாழ்க்கையை நடத்தி வந்தார்.
ஒரு நாள் இவர் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காக செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு கூடையில் சுமந்து கொண்டு புறப்பட்டார். சாப்பிடாததால் இவரை பசி வாட்டியது. மனைவிக்கும் பசி மயக்கம். தாயனார் பசியினால் கீழே விழப்போனார். அவரை மனைவி தாங்கி கொண்டார். கூடையில் சுமந்து வந்த நைவேத்தியப்பொருள்கள் நிலத்தில் விழுந்து சிதறின. தாயனார் மனம் கலங்கினர். அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை. எனவே தம்மிடம் நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து தன் கழுத்தை அரிந்து கொள்ள துணிந்தார். அவரது பக்தியின் ஆவேசத்தை கண்டு உடன் வந்த மனைவி திகைத்தாள். தன் மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வேண்டினாள். அப்போது நைவேத்தியப்பொருள் விழுந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, உள்ளிருந்து ருத்ராட்ச மாலையும், திருநீரும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது. அத்திருக்கரம் தாயனாரின் கையைப்பற்றியது. மாவடுவை கடித்துச் சாப்பிடும் சப்தமும் கேட்டது. இறைவனின் திருக்கரம் பட்டவுடன் மெய்மறந்து நின்றார் தாயனார். தாயனாரின் பக்தியை மெச்சிய இறைவன் இத்தலத்தில் பார்வதியுடன் தரிசனம் தந்தார். அரிவாளால் தம் கழுத்தை அரியத்துணிந்தமையால் இவருக்கு அரிவாட்ட நாயனார் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.
கோச்செங்கண்ணனுக்கு ஒரு முறை இவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. நோய் தீர இவன் பல திருத்தலங்களுக்கு சென்றும் பயனில்லை. வருந்திய மன்னனுக்கு ஆறுதல் அளிக்க, சிவன் அசரீரியாக தோன்றி,"கல்மாடு புல் திங்கும் தலத்திற்கு சென்று வணங்கினால் உன் நோய் தீரும்"'என்றார். மன்னனும் அப்படி ஒரு தலம் தேடி அலைந்தான். இத்தலத்தில் வழிபாடு செய்ய வந்தபோது, சிவனுக்கு அணிவிக்க அருகம்புல்லால் ஆன மாலையை கையில் ஏந்தி வந்தான். அப்போது சிவனுக்கு எதிரில் இருந்த நந்தி அந்த அருகம்புல் மாலையை இழுத்து தின்றது. இதைக்கண்ட மன்னனுக்கு சிவன் கூறியது நினைவுக்கு வந்தது. அவனது குஷ்ட நோயும் நீங்கியது. மனம் மகிழ்ந்த மன்னன் இந்த கோயிலுக்கு திருப்பணி செய்து இறைவனை வழிபட்டான். இத்தலத்தில் நந்தி புல்லைத் தின்பதற்காக கழுத்தை திருப்பிய நிலையில் இருப்பதை பார்க்கலாம்.
தினந்தோறும் காலை 9.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருத்துறைப்பூண்டி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை