லெட்சுமணப்பெருமாள் , திருமூழிக்களம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் ஷோரனூர் - எர்ணாகுளம் பிரிவில், அங்கமாலி ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலவாயில் இருந்து பேருந்துகள் இத்தலத்திற்குச் செல்கின்றன. சாலகுடிபுழை நதிக்கரையில் இக்கோயில் அமைந்திருக்கிறது.
மூலவர் : லெட்சுமணப்பெருமாள் (திருமூழிக்களத்தான், அப்பன், ஸுக்திநாதன்)
தாயார் : மதுரவேணி நாச்சியார்
தீர்த்தம் : சங்க தீர்த்தம், சிற்றாறு
விமானம் : ஸெளந்தர்ய விமானம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் 3 பாசுரங்கள், நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
தலச் சிறப்புகள்: மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுகம் கொண்டு காட்சி தருகிறார். திருமூழிக்களம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நான்கு திருக்கரத்துடன் உள்ள இந்த பெருமாள் மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரம், வலது கீழ்க்கையில் கதை, இடது கீழ் கையில் தாமரை மலருடன் இடுப்பில் வைத்த கோலத்தில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரை ஹாரித மகரிஷி தரிசித்துள்ளார். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இங்கு சிவனுக்கு தனி சன்னதி உள்ளது.
தல வரலாறு : அரித மகரிசி என்பவர் திருமாலைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்து வேண்ட, மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸுக்தியை’ என்ற திருமொழியை இறைவன் அம்முனிவர்க்கு வழங்கினான். எனவே இவ்விடத்திற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக்களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே காலப்போக்கில் திருமூழிக்களமாயிற்று. இப்பெயரே தொன்னெடுங்காலமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே பயின்று வந்துள்ளது. நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் 14 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். இராமாயணத்தில் இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். இலட்சுமணனின் திருப்பணிக்குப் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர்.
கிருஷ்ண பகவான் துவாரகையில், ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகனன் என்ற 4 விக்ரகங்களை பூஜித்து வந்தார். ஒரு முறை இப்பகுதி தண்ணீரில் மூழ்கிய போது, வாக்கேல் கைமல் முனிவர் என்பவரிடம் இந்த விக்கிரகங்கள் கிடைத்தது. அன்றிரவு இவரது கனவில் தோன்றிய பகவான், இந்த விக்கிரகங்களை பாரதப்புழா ஆற்றின் கரையோர தலங்களில் பிரதிஷ்டை செய்ய கூறினார். இத்தலங்கள் தான் திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் ராமர் கோயிலாகவும், இரிஞ்சாலக்குடாவில் பரதன் கோயிலாகவும், பாயமல்லில் சத்ருக்கன் கோயிலாகவும், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களத்தில் லெட்சுமணப்பெருமாள் கோயிலாகவும் அமைந்துள்ளது.
கேரளாவில் உள்ள பெருமாள் கோயில்களில் லெட்சுமணப் பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள்பாலிப்பது இங்கு மட்டும் தான். கேரளாவின் பிரசித்தி பெற்ற பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாக்ஷேத்திரமாகவிளங்கியிருக்கிறது. “ஸ்ரீஸுஸீக்தி’ இங்கு அருளப்பட்டதால் பல வகையான நூல்கள் இங்கு ஆராயப்பட்டன. இதனால் கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் சிறப்புற்றிருந்தது. ராமன் வனவாசம் செல்லும்போது சித்திர கூடத்தில் தங்க நேரிட்டது. அப்போது அயோத்திக்கே ராமனை மீண்டும் அழைத்து செல்ல பரதன் அங்கு வந்தான். இதைக்கண்ட லட்சுமணன், ராமனுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து, அவனை கொல்ல முயற்சிக்கிறான் . இது தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன், தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்து பெருமாளிடம் அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத்தழுவி இன்சொல் கூறியதாகவும், இதனால் இத்தலம் “திருமொழிக்களம்’ ஆனதாகவும் கூறுவர்.
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம். சித்திரை திருவோணத்தை தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. கேரளாவை பொறுத்த வரை ஆடி மாதம் முழுவதும் ராமாயண மாதம் என்பதால் இந்த மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் திருவோண பூஜை செய்வது சிறந்த பலன் தரும் என்பது நம்பிக்கை. ஒரு வருடத்திற்கு முன்பாகவே திருவோண பூஜைக்கு புக்கிங் செய்ய வேண்டும். இவருக்கு சந்தனக்காப்பு செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : அங்கமாலி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை