மாயப்பிரான், திருப்புலியூர் (குட்டநாடு)
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் செங்கண்ணூரிலிருந்து மேற்கு திசையில் 5 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர் : மாயப்பிரான்
தாயார் : பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம் : ப்ரஜ்ஞாஸரஸ், பூஞ்சுனை தீர்த்தம்
விமானம் : புருஷோத்தம விமானம்
மங்களாசாசனம் : நம்மாழ்வார் - 11 பாசுரங்கள், திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
தலச் சிறப்புகள் : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. கேரள மாநிலத்தில் பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ததாக கூறப்படும் பெருமாள் கோயில்களில் இத்தலம் பீமன் பிரதிஷ்டை செய்தது. இங்குள்ள மிகப்பெரிய “கதாயுதம்’ பீமன் உபயோகித்ததாக கூறுவர். பீமனைப்போன்றே கோயிலும் அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பை கொண்டுள்ளது. இங்குள்ள கொடிமரம் மற்ற கோயிலை விட மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு : ஒரு முறை சிபிச்சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி என்பவன் இப்பகுதியை அரசாண்டு வந்தான். அப்போது அவனுக்கு ஏதோ ஒரு சாபத்தினால் கடுமையான நோய் உண்டானது. அத்துடன் அவனது நாட்டில் கொடிய வறுமையும் ஏற்பட்டது. அச்சமயம் இந்த நாட்டிற்கு சப்தரிஷிகள் வருகை புரிந்தனர். அவர்களிடம் மன்னன், தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கினால் தான், தன்னால் தானம் ஏதும் கொடுக்க முடியும் என கூறினான். தானம் என்ற சொல்லைக்கேட்ட ரிஷிகள் கோபத்துடன்,””மன்னா! உன் போன்ற மன்னர்களிடம் தானம் பெறுவது மிகப்பெரிய பாவமாகும்,”என மறுத்துவிட்டனர். ஆனாலும் மன்னன் ரிஷிகளுக்கு கொடுப்பதற்காக மந்திரிகள் மூலம் தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைத்தான். இதையும் முனிவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ரிஷிகளின் இந்த செயலால் மன்னன் கோபமடைந்தான். மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையை, சப்தரிஷிகளை கொல்வதற்காக அனுப்பி வைத்தான். இதனையறிந்த ரிஷிகள் தங்களை காக்க மகாவிஷ்ணுவை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, இந்திரனை புலியாக மாறும்படி செய்தார். புலி தேவதையை கொன்றது. இதனால் இத்தலம் “திருப்புலியூர்’ ஆனது என்பர். ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள். மற்ற அனைத்தும் மாயை என நினைத்து வழிபாடு செய்தனர். இதனால் பெருமாள் இவர்களுக்கு மாயப்பிரானாக காட்சிதந்தார்.
நம்மாழ்வார் காலத்தில் இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்ததாக அவரது பாடலில் அறிய முடிகிறது. பண்டைத்தமிழகத்தில் 12 உட்பிரிவுகள் இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. அதில் ஒரு பிரிவு குட்டநாடு. இத்தலத்தை இப்பகுதி மக்கள் “குட்டநாடு திருப்புலியூர்’ என்று அழைக்கின்றனர். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்கு மேல் உள்ள விமானம் புருஷஸுக்த விமானம் எனப்படுகிறது. இத்தல பெருமாளை சப்த ரிஷிகள் வழிபாடு செய்துள்ளனர்.
பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிந்து பீமனும் திருமாலைக்குறித்து தவம் புரிந்தான். பீமனைப் போன்றே அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பைக் கொண்டு திகழ்கிறது இத்தலம். மற்றும் பெருமாளுக்கு நிவேதனம் பெரும் அளவில் செய்யப்படுவதாக கூறுவர். சப்தரிஷிகள் நாராயணன் தான் தேவதைகளுக்குள் உத்தமன் என்று பரதேவதா நிர்ணயம் செய்ததால் பகவான் ப்ரத்யமாகி மாயப்பிரானாகக் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.
ஒரு சமயம் சிபி மன்னனின் மைந்தன் அரசாண்ட பொழுது நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அச்சமயம் அந்நாட்டிற்கு வருகைத் தந்த ஸப்தரிஷிகள், 'நாட்டில் வறுமை உள்ள பொழுது, அந்நாட்டு அரசனிடம் தானம் பெறலாகாது: அது பாவம்' என்று மறுத்து தங்கள் பயணத்தைத் தொடங்கினர். தானம் ஏற்காமையால் அரசன் ஹோமம் செய்து க்ருத்யை என்ற மாரக ஸ்த்ரீயை உண்டாக்கி ரிஷிகளைக் கொல்ல ஏவ, பகவான் இந்திரனை அனுப்பி க்ருத்யையைக் கொன்று ரிஷிகளை ஸ்வர்க்கத்துக்கு அழைத்துப் போய் ஸகாநுபவம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றி, பத்தாம் நாள் ஆறாட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதியில் காவடியாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீராத நோய்களெல்லாம் தீர, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
காலை 5.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : எர்ணாகுளம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கண்ணூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு