பாம்பணையப்பன், திருமுண்டூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள கோட்டையம் மாவட்டத்தில் செங்கண்ணூரிலிருந்து பிராங்கோடு வழியாக வடக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடத்திற்குச் செல்ல ஆலப்புழை, செங்கணூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
மூலவர் : பாம்பணையப்பன், கமலநாதன்
தாயார் : கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம் : பாபநாச தீர்த்தம், பம்பா தீர்த்தம்
விமானம் : வேதாலய விமானம்
மங்களாசாசனம் : நம்மாழ்வார் -11 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மூலவர் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்த போது மிகவும் சிதலமடைந்திருந்த இந்த கோயிலை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தினார்.
தல வரலாறு : படைப்புக் கடவுளான பிரம்மாவும், அவரது புத்திரரான நாரதரும் ஒரு முறை, உயிர்களின் உருவாக்கம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பிரம்மா சொன்ன கருத்து நாரதருக்குச் சரியாகத் தோன்றவில்லை. எனவே அவர் தந்தையின் கருத்தை மறுத்துப் பேசத் தொடங்கினார். அதனால், அவர்களுக்கிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரம்மா, மகனென்றும் பாராமல் நாரதரைத் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும்படி சாபம் கொடுத்தார்.
தன் தந்தை கொடுத்த சாபத்தின்படி பிரம்மலோகத்தில் இருந்து பூலோகம் வந்த நாரதர், மன அமைதியைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருந்தார். பல இடங்களில் அலைந்து திரிந்தும் கிைடக்காத மன அமைதி, ஒரு இடத்தில் கிடைத்தது. அந்த இடத்தில் நாரதர், தன்னுடைய விருப்பத்திற்குரிய தெய்வமான விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றத் தொடங்கினார்.
அவரது நீண்டகாலத் தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, நாரதருக்குக் காட்சியளித்தார். நாரதர் தனக்கு காட்சி தந்த விஷ்ணுவிடம், ‘இறைவா! எனக்கு அனைத்து உயிர்களின் உருவாக்கம் குறித்தத் தத்துவ ஞானத்தைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். விஷ்ணுவும் அவர் கேட்ட ஞானத்தை அவருக்கு வழங்கினார். அதில் மகிழ்ச்சியடைந்த நாரதர், தனக்குக் காட்சியளித்த இடத்தில் கோவில் கொண்டருளும்படி விஷ்ணுவை வேண்டினார். விஷ்ணுவும் நாரதரின் விருப்பப்படி அங்கு கோவில் கொண்டார்.
அதனைக் கண்டு மேலும் மகிழ்ச்சியடைந்த நாரதர், அவ்விடத்தில் தான் விஷ்ணுவை வழிபட்ட முறை, அவரைப் போற்றிப் பாடிய பாடல்கள் போன்றவைகளைப் பூலோக மக்களுக்கு அளிக்கும் எண்ணத்துடன் நான் காயிரம் அடிகள் கொண்ட ‘நாரதீய புராணம்’ எனும் நூலினை அங்கேயே அமர்ந்து இயற்றினார் என்று இந்த ஆலயத்தின் வரலாறு சொல்கிறது. இந்த நாரதீய புராணத்தில் விஷ்ணுவின் மகிமை, நாரதருக்கு விஷ்ணு அளித்த கருணை உள்ளிட்ட பல சிறப்புகள் சொல்லப்பட்டிருகின்றன.
பிற்காலத்தில் இந்த ஆலயம் பராமரிப்பின்றி, வழிபாடுகள் இல்லாமல் போனது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்திற்காக இந்தப் பகுதிக்கு வந்த போது, பாண்டவர்களில் ஒருவனான நகுலன் இங்கிருந்த கோவிலைக் கண்டு, அதனைப் புதுப்பித்து வழிபட்டு வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இந்தக் கோவிலை இங் கிருப்பவர்கள் ‘நகுலன் கோவில்’ என்றே அழைக்கின்றனர். இதேபோல், இத்தலம் அமைந்திருக்கும் பகுதி வண்டுகளும், அவை எழுப்பும் ஒலிகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ‘திருவண்வண்டூர்’ எனப்பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.
கோவில் அமைப்பு : இந்த ஆலயத்தின் கருவறை வட்ட வடிவமாக அமைந்திருக்கிறது. கருவறையில் இருக்கும் இறைவன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். இக்கோவில் இறைவன் ‘பாம்பணையப்பன்’, ‘கமலநாதன்’ எனும் பெயர்களால் அழைக்கப்பெறுகிறார். இங்கு இறைவியாகக் கமலவல்லி நாச்சியார் இருக்கிறார்.
இவ்வூரில் பூமியை தோண்டும் போது புதிய பெருமாள் விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, அதை இக்கோயிலுக்கு கொண்டுவந்து புதிய சன்னதிகளும் மண்டபங்களும் கட்டப்பட்டன. இக்கோயில் வட்டவடிவமான கருவறையுடன் அமைந்திருப்பதும் பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிப்பதும் மிகவும் சிறப்பு. இக்கோயிலின் மேற்கு புற வாசலில் நுழையும் போது வாசலின் மேல், காளிங்கன் மீது கண்ணன் நர்த்தனம் ஆடுவது போல் அமைந்திருக்கும் சிற்பம் பேரழகு வாய்ந்தது. அந்த கண்ணனை தாங்கி நிற்கும் இரண்டு தூண்களின் இரண்டுபுறமும் தசாவதாரக்காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது. மூலவரின் விமானம் சகல வேத விமானம். பெருமாளை நாரதர், மார்க்கண்டேயர் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். இத்தலத்திற்குள் நுழையும் போது மேற்கு புற நுழைவு வாசல், மேல் காளிங்கன் என்றும் கொடிய விஷங் கொண்ட ஐந்து தலை நாகம் மீது கண்ணன் நர்த்தனமாடும் சிற்பம் பேரழகு வாய்ந்தது. இக்கண்ணன் காளிங்கனின் தலைமீது ஒரு காலை ஊன்றிக் கொண்டு மற்றொரு காலை வலப்புறம் வளைத்து தூக்கித் தனது இரண்டு கரங்களையும் நீட்டி நிற்கின்ற காட்சி நம் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கும் இக்கண்ணணின் மேனி தூய நீல நிறத்தில் அமைந்திருப்பது மேலும் பேரழகாகும், கண்ணனை தாங்கி நிற்கும் இரண்டு தூண்களிலும் தசாவதாரக் காட்சி மிகவும் கலை நுணுக்கத்தோடு செதுக்கப்பட்டுள்ளது.
இத்தல இறைவனிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்குப் பால் பாயசம் நைவேத்தியமாக படைத்து தங்களது நன்றிக்கடனைத் தெரிவித்துக்கின்றனர். குழந்தை வரம் வேண்டி இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் இருக்கும் கோசாலை கிருஷ்ணர் சன்னிதிக்கு வெளியே மரத்தொட்டில்கள் வாங்கி வைத்து வழிபடுகின்றனர்.
இத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி சிம்மம் (ஆவணி) மாதம் வரும் அஷ்டமி நாளில் கிருஷ்ணர் தோற்றம் பெற்ற நாளும், தனுர் (மார்கழி) மாதம் வரும் ஏகாதசி நாளில் வைகுண்ட ஏகாதசி நாளும் மிகச் சிறப்புடையதாக இருக்கின்றன. மேலும், இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் அனுசம் நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து பத்து நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பெறுகிறது. இவ்விழாவின் போது இறைவன் மோகினித் தோற்றம் மற்றும் அவரது பத்துத் தோற்றக் (தசாவதாரம்) காட்சிகளில் அலங்கரிக்கப்பட்டுப் பக்தர்களுக்குக் காட்சியளிக் கிறார். இந்த நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் கூடி தரிசனம் செய்வதைக் காண முடியும். இவைத் தவிர விஷ்ணுவுக் குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மாசிமாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கொடியேற்றம் செய்து பத்து நாள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
காலை 5.30 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் நடை திறந்து திறந்திருக்கும். இங்கு தங்கும் வசதிகள் இல்லாத காரணத்தால் திருவல்லாவில் தங்கி இங்கு வந்து சேவிக்கலாம், இங்கு வருவதற்கு பேருந்து வசதிகள் உண்டு.
அருகிலுள்ள விமான நிலையம் : எர்ணாகுளம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கண்ணூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு