திருவாழ்மார்பன், திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர்:திருவாழ்மார்பன்
உற்சவர்:ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன்
தாயார்:கமல வல்லி நாச்சியார்,சுவாமி மார்பில் மகாலட்சுமி
தீர்த்தம்:லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி
விமானம் : இந்திரகல்யாண விமானம்
மங்களாசாசனம் : நம்மாழ்வார் - 1 பாசுரம்
தலச் சிறப்புகள் : மூலவரான திருவாழ்மார்பர் நான்கு கைகளுடன், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் “கடு சர்க்கரை யோகம்’ என்ற கூட்டினால் சமைக்கப்பட்டது. கல்லும், சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பட்ட உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்பர். அதனால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கே அபிஷேகம்.
திருப்பதிசாரத்தில் உடையநங்கை என்ற பெண் விஷ்ணு பக்தையாகி குருகூரில் காரி என்ற விஷ்ணு பக்தருக்கு பத்தினியாகி அவர்கள் இந்த ஸ்தலத்தில் 41 நாள் விரதமிருந்து ஆவணி சுக்ல ஏகாதிசியான வாமன ஜயந்தி தினம் ஊஞ்சலுத்ஸவம் நடத்தி, உடையநங்கை கர்ப்பவதியாகி கலி-43-வது நாள், வைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் அவதரித்து குருகூரில் ஆதிநாதன் சந்நிதியில் விட அந்தக் குழந்தை தவழ்ந்து புளியமரப் பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் அமர்ந்துவிட மதுரகவி தமக்கு ஹிதோபதேசம் செய்யும்படி பிரார்த்திக்க, நம்மாழ்வார் திருவாய் மொழியை அருளிச் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.
ஆழ்வார்கள் மங்களாசானம் செய்த 108 திருப்பதிகளுள் மலைநாட்டுத்திருப்பதிகள் 13 ஆகும். அவற்றில் இன்றய குமரிமாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதிகள் இரண்டு. ஒன்று திருப்பதிசாரம் என்று அழைக்கப்படும் திருவண்பரிசாரம். மற்றொன்று திருவட்டாறு. இவ்விரண்டு திருப்பதிகளிலும் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலம்தான் இன்று திருப்பதிகளுக்கெல்லாம் சாரம் என்ற பொருளுடன் திருப்பதிசாரம் என்று அழைக்கப்படுகிறது. பழையாற்றின் கரையிலே வயல்களால் சூழப்பட்ட ஊரின் நடுவே அமைந்த திருத்தலம் திருப்பதிசாரம்.
சுசீந்திரத்தில் இறைவனை நோக்கி தவமிருந்த சப்தரிஷிகளுக்கு அவர் சிவனது உருவிலே காட்சி தந்தார். அதே முனிவர்கள் சுசீந்திரத்தை அடுத்துள்ள சோம தீர்;த்தத்தில் இறைவனை திருமாலின் கோலத்திலே காண தவமிருக்க இறைவன் இங்கே திருமாலாகக் காட்சி தருகிறார். இது தலபுராணம் தரும் தகவல். இங்கு பெருமாள் சப்தரிஷிகள் புடை சூழ சதுர்புஜத்தோடு சங்கு சக்ரதாரியாய் அபய முத்திரையோடு திருமகளை நெஞ்சிலே தாங்கி அமர்ந்த கோலத்தில் அருள் புரிகின்றார்.
அகத்தியர், குலசேகரர், விபீடணன், நம்மாழ்வார் ஆகியோர் இத்தலம் வருகை தந்து பெருமாளின் அருள் பெற்றுச் செல்வதாக ஐதீகம். இவர்களது திருவுருவச் சிலைகளை நாம் இங்கே காணலாம். திருவண்பரிசாரத்தை நம்மாழ்வாரின் பிறப்பிடமாகவும், திருக்குருங்கூர் என்ற ஆழ்வார் திருநகரியை அவர் ஞானம் பெற்ற தலமாகவும் பல வரலாற்று செய்திகளில் கூறப்பட்டுள்ளன.
திருவாழ்மார்பனின் வலதுபக்கம், இராமபிரான் சீதாப்பிராட்டி இலக்குமணன் ஆகியோர் முடிசூட்டுவிழா கோலத்தில் காட்சி தருகின்றனர். விபீடணன் அயோத்தியில் ஸ்ரீராமபிரானின் முடிசூட்டுவிழாவிலே கலந்து இலங்கை திரும்பும் போது சோம தீர்த்தத்தில் நீராடி, திருவாழ்;மார்பை வணங்கி ராமபிரானை முடிசூட்டு விழாக்கோலத்துடன் காணவேண்டி நின்றார் என்பதும் அப்போது காட்சி கொடுத்த நிலை தான் இது என்பதும் தலப்புரானச் செய்திகள் ஆகும்.
இந்த ஆலயத்தின் கொடிமரம் குலசேகரஆழ்வாரால் நாட்டப்பட்டது என்றும், சோம தீர்த்தத்தின் படிகள் மதுரை திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.. இவ்வாறு திருப்பதிசாரம் என்று அழைக்கப்படும் திருவண்பரிசாரம் தலம், தீர்த்தம், மூர்த்தி, ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்டது.
இது நம்மாழ்வார் அவதார தலம். திவ்ய தேசங்களில் ஒன்று. கோலம்-அமர்ந்த கோலம். இங்குள்ள மூலவர் திருவாழ்மார்பர். இங்கு தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். பெருமாள் லட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன், தங்கமாலை ஒன்றை அணிந்துள்ளார்.
திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உரியது. குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது. பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியிலே நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர். பெருமாளும் அவர்களது வேண்டுகோளுக்கிரங்கி, உங்கள் எண்ணம் நிறைவேறும். யாமே உமக்கு மகனாக அவதரித்துப் பதினாறு வயதிலேயே கணக்கிலடங்காக் கீர்த்திகளைப் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவோம். பிறக்கும் குழந்தையை (ஆழ்வார்)திருநகரியிலுள்ள புளியமரத்தடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்,’ என்று கூறி மறைந்தார். சில நாட்களில் உதயநங்கை கருவுற்றாள். தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரத்துக்கு அனுப்பப்பட்டாள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தார். குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை ஆழ்வார்திருநகரியிலுள்ள புளிய மரத்துக்குப் பொற்தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளியமரப் பொந்தினுள் ஏறித் தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞான முத்திரை ஏந்தியவராய் அங்கு எழுந்தருளி இருக்கும் ஆதிநாதரைத் தியானித்து நின்றது. இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் வியந்து போற்றினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்தில் மூழ்கியிருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும், ஆழ்வார் திருநகரி அவர் ஞானம் பெற்ற ஸ்தலமாகவும் சிறப்புடன் விளங்குகின்றன.
தல வரலாறு: ஒரு காலத்தில் சுசீந்திரம், ஞானாரண்யம் என அழைக்கப்பட் டது. சப்த ரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் சிவவடிவில்அவர்களுக்கு காட்சி தந்தார். முனிவர்கள் இறைவனைத் திருமாலின் உருவிலே காண சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்திற்கு சென்று தவம் செய்தனர். அவர்களது தவத்துக்கு இரங்கிய இறைவன், திருமாலின் உருவில் காட்சி தந்தார். அவ்வுருவில் அங்கு தங்கியருள வேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற, திருமால், சப்த ரிஷிகள் சூழ, பிரசன்ன மூர்த்தியாக சுமர்ந்து அருள்புரிகின்றார் என்பர்.
திருமால் குலசேகர ஆழ்வாரை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்ற ஆடி சுவாதி திருநாள், சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா. புரட்டாசி சனி, ஆவணி திருவோணம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இவருக்கு மட்டுமே ஊஞ்சல் சேவை நடக்கிறது. திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் செல்வச்செழிப்புடன் விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து வழிபடுதல்,திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்ய நினைப்பவர்கள் இத்தல பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்யலாம்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகர்கோவில்
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு