நித்யகல்யாணப்பெருமாள், திருவிடந்தை
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையிலிருந்து கோவளம் வழியாக மகாபலிபுரம் செல்லும் சாலையில் 42 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மூலவர் : லட்சுமி வராக பெருமாள்
உத்ஸவர் : நித்யகல்யாணப் பெருமாள், (தாடையில் பொட்டுடன் எழுந்தருளியிருக்கிறார்)
தாயார் : கோமளவல்லி நாச்சியார்
தீர்த்தம் : கல்யாண தீர்த்தம், வராஹ தீர்த்தம்
தல விருட்சம் : புன்னை மரம்
விமானம் : கல்யாண விமானம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் 13 பாசுரங்கள்
தலச் சிறப்புகள்: மூலவரின் இடது கால் ஆதிசேஷ தம்பதிகளின் தலைமேல் உள்ளது. கிரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனுக்கு பலி என்ற புதல்வன் பிறந்தான், ஒரு சமயம் அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலி உதவியை நாடினர். அவன் மறுத்ததும், போர்புரிந்து தோற்று மீண்டும் பலியிடமே தஞ்சம் அடைந்தனர். பிறகு அரக்கர்களின் பொருட்டு பலி தேவர்களுடன் போர் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து பெருமாளை நோக்கி தவம் செய்தான். பெருமாள் வராஹ மூர்த்தியாக அவனுக்கு இங்கு காட்சி கொடுத்தார்.
தல வரலாறு : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் திருவிடந்தை கோவில் என கூறப்படுகிறது. காஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்ட பல்லவ மன்னர்களாலும், சோழ மன்னர்களாலும் இக்கோவில் நன்கு பராமரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு சில கோவில்களில் திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலும் ஒன்று. 108 திவ்ய தேசங்களில் ஒன்று இந்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யபட்ட புண்ணிய ஷேத்திரம்.
காலவ மஹரிஷியின் 360 பெண்களையும் பகவான் ஒரே கன்னிகையாக்கி மடியில் வைத்துக் கொண்டு 360 பெண்களையும் 360 நாள் கல்யாணம் செய்து கொண்டதாக பாவிப்பதால் நித்ய கல்யாணன் என்றழைக்கப்படுகிறார். இடப்புறத்தில் பிராட்டியை ஏந்தியுள்ளபடியால் திருஇடந்தை எனப் பெயர் பெற்றது. மணவாள மாமுனிகளிடம் மங்களாசாசனம் பெற்றவர் பெருமாள். பெருமாளை முறையாக சேவித்தால் தடைபட்டு வரும் திருமணம் சீக்கிரம் கைகூடுவதாக நம்பிக்கை.
சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி இறைவனடி சேர்ந்து விட்டார். தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண், காடு களைச் சுற்றி வந்தான். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர், அவளை மணம் புரிந்தார். அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தர்ம பத்தினியாக வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார். இதனால் தன்னுடைய முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது. தன்னுடைய நிலையைக் கூறி, வேதமூர்த்தியாகவும் ஞானப்பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார். வராக மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.
‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே! நானே நாள்தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று அருளினார். காலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார். அதற்குள் இருக்கும் சூட்சுமத்தை உணர்ந்தார். உலகில் எல்லோரும் ஜீவாத்மாக்கள். இவர்கள் அனைவரும் காலவ முனிவர் போன்ற குருவை துணைகொண்டால் பரமாத்மாவான, பெருமாள் ஆதி வராகரை அடையலாம். இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும், அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது, இந்த மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான் என்று பொருளும் உண்டு.
வராகர் காலவ முனிவரின் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் திருமணம் செய்துகொண்டார். முன்னூற்று அறுபத்தோராம் நாள் அனைத்து கன்னிகைகளையும் ஒருவராக்கி அகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் சூட்டி வராகப் பெருமாள் எழுந்தருளச் செய்தார். காலவ முனிவர் வராகரின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டார். திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும் நித்திய கல்யாணப் பெருமாளாகவே அருள்புரிவேன்’ என்று பெருமாள் உறுதி கூறினார். இத்தலத்திற்கு ‘நித்தியகல்யாணபுரி’ என்றும் பெயர் உண்டு.
எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள். எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை இடப் பாகத்தில் கொண்டுள்ளதால் திருவிடவெந்தை எனப் பெயர் பெற்றது. அதுவே திருவிடந்தை என்று மறுவியது. பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில். ஆனால், தொன்மை கீர்த்தியில் ஈடு இணையற்ற தலம். கருவறையில் வராகர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார். இடது காலை மடித்து அந்த மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் எனும் மந்திரத்தை உபதேசிக்கும் கோலம், காணக் கண்கோடி வேண்டும். பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்தது அரிய அமைப்பாகும். இவரை தரிசிப்பவர்களுக்கு ராகுகேது தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு விடுகிறது.
உற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்திருக்கிறது. எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது. தனிக்கோயில் கொண்டுள்ள தாயாரின் திருப்பெயர் கோமளவல்லித் தாயார் என்பதாகும். அருளும், அழகும் ஒருசேர வீற்றிருந்து செல்வ வளத்தை பெருக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.
திருமணமாகாத ஆணோ, பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராகரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோவிலை வலம் வரவேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராகரை சேவித்து செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும் முன்பே திருமணம் நிச்சயமாகிவிடுவது சகஜமானது.
பல்லவ மன்னன் ஒருவன், திருவிடந்தை தலத்தின் மகிமையை அறிந்தான். இதையடுத்து ‘தினமும் ஒரு பெண்ணுக்கு இத்தலத்தில் திருமணம் செய்து வைப்பேன்’ என்று அறிவித்தான். அதுபோல தினமும் ஒரு தம்பதியாக திருமணம் நடத்தி வைத்தான். ஆனால், ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகுநேரமாகியும் மண மகன் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து நாழிகைகள் கரைந்து கொண்டிருந்தன. ஆனால், அவன் வேண்டுதல் வீணாகவில்லை அதிசுந்தரனாக பேரழகு பொருந்திய மணமகன் வந்தான். மணம் செய்து கொண்டான்.அந்த மணமகன் மன்னனை நோக்கி, ‘மன்னா என்னைப் பார்’ என்று சொல்லி, வராகராக காட்சி தந்து மறைந்தான். இதையடுத்து பல்லவ மன்னன் மூலவரே வராக மூர்த்தியாக அமையும் படியாக ஆலயம் எழுப்பினான். இந்த ஆலயத்திற்கு திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், வெகுவிரையில் மணமுடித்து வந்து மீண்டும் இறைவனை வழிபடுவதை இன்றும் கண்கூடாகக் காணலாம். குழந்தை பேறு, பொருளாதார நிலை உயரவும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டிகொள்கின்றனர். இந்த திருவிடந்தை பெருமாள் கோவிலில் மட்டும் தான் ஓர் ஆண்டில் 365 நாட்களும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து ஏராளமான புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வாடகை வண்டி சேவைகளும் கிடைக்கின்றன.
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை. மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை நாடி திறந்திருக்கும்
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்ட்ரல்
தங்கும் வசதி : உண்டு
பேருந்து வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை