அக்னீசுவரர் கோவில், திருஅன்னியூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் S. புதூர் என்ற இடத்திற்கு தெற்கில் திரும்பி வடமட்டம் சென்று அங்கிருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையில் உள்ளது. கும்பகோணத்தலிருந்து அன்னியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது.
சுவாமி : அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், ரதீசுவரர்
அம்பாள் : பார்வதி, பிருகந்நாயகி, பெரியநாயகி
தல மரம் : எலுமிச்சை
தீர்த்தம் : வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர்
சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 22 வது சிவத்தலமாகும்.
திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தென்கரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது.
பார்வதி தேவி காத்தியாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபடின் திருமணம் கூடும். நாடொறும் மூன்று கால பூஜைகள். சூரிய பரிகாரத்திற்கு உகந்த இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 25 ஆம் தேதி முதல் 29 தேதி வரை 5 நாட்கள் காலையில் சூரியக் கதிர்கள் சுவாமி மீது விழும் சூரிய பூஜை வெகு சிறப்பாக இங்கு நடக்கிறது.
கோவில் அமைப்பு : பொன்னூர் கிராமத்தின் வடகோடியில் எழிலுற அமைந்திருக்கிறது இச்சிவாலயம். கிழக்கு முகம் கொண்ட இச்சிவாலயம் சிறிய ஆலயமாக சிறப்புறத் திகழ்கிறது. இவ்வாலயத்திற்கு கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலின் மேல் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. முகப்பு வாயிலுக்கு எதிரில் வருண தீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து ஒரு சிறிய விமானத்துடன் கூடிய நந்தி மண்டபமும் அதையடுத்து இறைவன கருவறைக்குச் செல்லும் மற்றொரு நுழைவு வாயிலும் உள்ளன. இந்த இரண்டாவது நுழைவு வாயில் மேற்புரத்திலும் அழகிய சுதை வேலைப்பாடுகள் கொண்ட உருவங்கள் காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கருவறை முன் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் பிருகந்நாயகி சந்நிதி உள்ளது. அம்பாளைத் தொழுது வரும்போது பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் அக்கினிக்குக் காட்சி தந்த மூர்த்தி உள்ளார்.
கருவறை அர்த்த மண்டபத்தில் விநாயகர் தரிசனம் தருகிறார். கருவறையில் ஆபத்சகாயேசுவரர் லிங்க உருவில் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தல நாதனான ஆபத்சாகயேசுவரர் பெறும் ஆபத்துகளையும் நீக்க வல்லவர். ஒரே மகாமண்டபத்தைக் கொண்டு சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமையப் பெற்றுள்ளது.கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், துர்க்கை உள்ளனர். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி - தெய்வயானையுடன் முருகர், சந்திரசேகரர், நடராஜர், சிவகாமி, ஆடிப்பூர அம்மன், துர்க்கை, அஸ்திரதேவர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.
தல வரலாறு: சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாட தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், பல தலங்களில் ஈசனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து மீள வேண்டினான். அச்சமயம் இத்தலத்திற்கும் வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்கப் பெற்றான். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். அக்னி உண்டாக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அக்னிதேவன் தனக்கு அருள் புரிந்த அக்னீ ஸ்வரரை வணங்கி, இத்தலத்திற்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபடுவோருக்கு தன் தொடர்புடைய உஷ்ண ரோகங்கள் நீங்கவும், நற்கதி பெறவும் அருள்புரியுமாறு இறைவனை வேண்டினான். எனவே உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நிவேதனம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.
ஆதியில் திருக்குறுக்கை திருத்தலத்திலே மன்மதனை எரித்தார் சிவபெருமான். கணவனை இழந்து வாடியிருந்த ரதியின் மீது இச்சை கொண்டான் சூரியன். பதிவிரதையான ரதியோ சூரியனின் வலக்கரம் பின்னமாக சாபமிடுகிறாள். மனம் வருந்திய சூரியனோ, சாபவிமோசனம் பெற அன்னியூரை அடைந்து வழிபடுகின்றான். ஈசனது பேரருளால் சூரியன் தனது இழந்த கையை மீண்டும் பெற்று விமோசனம் பெற்றான். ரதிதேவி தனது கணவன் மன்மதனை மீட்க இத்தலத்தில் விளங்கும் ஆபத்சகாயரை பிரார்த்திக்கின்றாள். அவளுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்து ஈசன் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார். தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற அரிச்சந்திர மகாராஜா இத்தலத்தில் நீராடி, இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து, ஆபத்சகாயரை வணங்கி, வழிபட்டு விமோசனம் பெற்றுள்ளார்.
நடராசர் அபிஷேகங்கள், நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபாவளி, தனுர்மாத வழிபாடுகள், சங்கராந்தி முதலிய சிறப்பு அபிஷேகங்களும் பூசைகளும் நைபெறுகின்றன. இத்தலத்தில் வருணன் மற்றும் பாண்டவர்கள் ஐவரும் பூஜித்து, பெரும் பேறு பெற்றுள்ளனர். வைகாசி விசாகத்தில் இத்தலத்தில் நீராடி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தி, தயிர் சாதம் நிவேதித்து, வழிபடுவோரது பெரும் ஆபத்துகள் நீங்கும் என்பது இத்தலத்தின் பிரார்த்தனையாக அனுசரிக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயிலும் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம், காரைக்கால்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை