தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில், திருநள்ளாறு
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் பாண்டிச்சேரி மாநிலத்தில் பேரளம் - காரைக்கால் ரயில் பாதையில் திருநள்ளாறு ரயில் நிலையத்தின் அருகில் இத்தலம் அமைந்துள்ளது.
சுவாமி : திருநள்ளாற்றீசுவரர், தர்ப்பாரண்யேசுவரர்
அம்பிகை : போக மார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை, பிராணேசுவரி
தலமரம் : தர்ப்பை
தீர்த்தம் : நளதீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்
சப்த விதங்க தலங்கள் : தனக்கு உதவிய முசுகுந்த சக்கரவர்த்திக்கு பிரதி உபகாரம் செய்ய நினைத்த இந்திரன், முசுகுந்தனிடம் தான் செய்யக்கூடிய பிரதி உபகாரம் இருந்தால் சொல்லும்படி கேட்கிறான். முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரன் தினமும் பூஜை செய்யும் விடங்க மூர்த்தியின் திருவுருவத்தைக் கேட்கிறார். தான் வழிபடும் மூர்த்தியை எப்படி தருவது என்று நினைத்த இந்திரன், தான் பூஜித்த மூர்த்தியைப் போலவே இன்னும் 6 மூர்த்திகளையும் தோற்றுவித்து, ஏழு மூர்த்திகளையும் முசுகுந்த சக்கரவர்த்தியிடம் காட்ட, முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரன் பூஜித்த விடங்கமூர்த்தியை சரியாகக் கண்டுபிடித்து எடுக்கிறார். எனவே, இந்திரம் மனம் மாறி தான் பூஜித்த விடங்க மூர்த்தியுடன் மற்ற ஆறு மூர்த்தங்களையும் முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுக்கிறார். முசுகுந்த சக்கரவர்த்தி அந்த மூர்த்தங்களை திருவாரூர் உள்ளிட்ட ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்கிறார். அந்தத் தலங்களே சப்த விடங்க தலங்கள். இந்தத் தலத்தில் நக விடங்கராக, உன்மத்த நடனத்தில் காட்சி தருகிறார் தியாகேசர்.
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் முசுகுந்த சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த தியாராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று ஆகும். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும். இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலிக்கிறார். மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். இது தருமை ஆதினக் கோயில் ஆகும்.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நவக்கிரகத்தலங்களில் சனிபகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. மூலவர் சந்நிதிக்கும், இறைவி சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது இத்தலம் நளன் பூசித்து சனிபகவான் பிடியிலிருந்து விமோசனம் பெற்ற தலமாகும். சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக உள்ள சிறப்புத் தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனீஸ்வரன் சந்நிதிக்கு செல்ல வேண்டும். பிரம்மன் வழிபட்டதால் ஆதிபுரி என்றும், நகவிடங்கர் எழுந்தருளியுள்ளதால் நகவிடங்கபுரம் என்றும், நளன் வழிபட்டதால் நளேச்சரம் என்றும், நளனுக்கு நன்னெறி காட்டியதால் நள்ளாறு என்றும் பெயர்கள் உண்டாயின. அரசிலி ஆற்றிற்கும், வாஞ்சிநதிக்கும் இடையில் இருப்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது எனவும் கூறுவர்.
முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடம் பெற்று வந்த ஏழு விடங்கங்களில் ஒன்றான நாகவிடங்கரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இக்காரணம் பற்றி இத்தலத்திற்கு 'நகவிடங்கபுரம்' என்னும் இங்கு கோவில் கொண்டுள்ள சனிபகவானை நளமன்னன் போற்றி வழிபட்டதால் 'நாளேசுரம்' எனவும் இத்தலம் பெயர் பெற்றது. இறைவனின் உன்மத்த நடனம் சிறப்பானது. பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், அன்ன தீர்த்தம், அகத்திய தீர்த்தம், நள தீர்த்தம், நள கூபம் ஆகியவை இத்தலத்தின் விசேஷ தீர்த்தங்களாக விளங்குகிறது. தர்ப்பாணேஸ்வரர் இத்தலத்தில் இரண்டாவது விடங்கராக விளங்குகிறார். இக்கோவில் அருகில் உள்ள நளதீர்த்தம் சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச்சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்தார். இறுதியில் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சனிபகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டு துன்பம் நீங்கப் பெற்றதால் நளன் தீர்த்தம் என அவர் பெயரால் நளதீர்த்தம் என்று பெயர் பெற்றது.
திருஞானசம்பந்தர் திருஆலவாயில் மதுரைச் சமணரோடு நடத்திய அனல் வாதத்தின் போது, இத்தலப்பதிகமான "போகமார்த்த பூண்முலையாள்" என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல் பச்சைப் பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டியது.
கோவில் அமைப்பு: நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த ராஜகோபுரம். அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக்கப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அரைந்துள்ளது. சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது. சனி பகவான் சந்நிதி முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. மகர, கும்பராசிகளுக்குச் சனி அதிபதியாவார். அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். உற்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரமனும் துர்க்கையும் உள்ளனர். சொர்ண கணபதி சந்நிதி தலவிநாயகர் சந்நிதியாகும். சப்தவிடங்கத் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம். தினந்தோறும் ஆறுகால வழிபாடுகளும் செம்மையாக நடைபெறும் இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது. மகாவிஷ்ணு, பிரம்மா, தேவேந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமை உடையது திருநள்ளாறு திருத்தலம்.
நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. சனீஸ்வரன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால் இக் கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள். இக் கோயிலில் சனி பகவானுக்கு உகந்த காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் சனீஸ்வர பகவான் தங்கக் காகம் வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருவார். இந்த தலத்திற்கு வந்து சனீஸ்வரரையும், தர்ப்பாரண்யேஸ்வரரரையும் வணங்குபவர்களுக்கு சனி பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மன திடமும், பிரச்னைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி பிறக்கும்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திருநள்ளாறு
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு