துங்கநாத்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ர பிரயாகையை ஒட்டி துங்கநாத் மலைத்தொடரில் இந்தக் கோயிலை தரிசிக்கலாம். மந்தாகினி-அலக்நந்தா நதிகளுக்கு இடையேயான பள்ளத்தாக்கில், சந்திர சிலா என்ற சிகரத்துக்கு கீழே அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டு பழமையான கோயில். பஞ்ச கேதார்களில் இரண்டாவது இடம்.
கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்தியமகேஷ்வர் மற்றும் கல்பேஷ்வரர் ஆகிய ஐந்து இடங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தலங்களில் சிவபெருமானின் உடல் பாகங்கள், கேதார்நாத்தில் இறைவனின் உடல் பகுதி, துங்கநாத்தில் கைகள், ருத்ரநாத்தில் முகம், மத்தியமகேஷ்வரில் தொப்புள் மற்றும் கல்பேஷ்வரில் தலைமுடியும் தோன்றியதாக நம்பிக்கை உள்ளது.
ஐந்து கேதாரங்களும் இமயமலையின் கொடுமுடியான பனி மூடிய சிகரங்களான நந்தா தேவி, சௌகம்பா, கேதர்நாத், நீலகண்ட் ஆகியவற்றில் அடிவாரத்தில் அமைந்துள்ளன. திருக்கேதாரம் மந்தாங்கினி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்ற கேதாரங்கள் அலக்நந்தா மற்றும் மந்தாங்கினி பள்ளத்தாக்கிதிற்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளன.
தல சிறப்புகள் : உலகத்தின் உயரமான இடத்தில் அமைந்த சிவன் கோயில் ஆகும். துங்கநாத் என்பதற்கு கொடுமுடிகளின் நாதர் எனப் பொருள்படும். குளிர்காலத்தில் இக்கோவில் மூடப்பட்டு பெருமான் ஊகிமத்தின் அருகில் உள்ள முகமத்தில் வழிபடப்படுகின்றார். துங்கநாத் பஞ்சகேதார் கோயில்களில், ஈசனின் புஜமாக வர்ணிக்கப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து 3680 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு சிவனின் திருக்கரத்தை தரிசிக்கிறோம்.
துங்கநாத ஆலயத்தில் சிவபெருமான் ஒரு அடி உயரத்தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாக இடப்பக்கம் சற்று சாய்ந்தவாறு அருட்காட்சி தருகின்றார். இங்குள்ள பிரதான சந்நிதியில் சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகின்றார். அஷ்ட உலோகத்தால் ஆன வியாசர் மற்றும் கால பைரவரின் சிலைகள் உள்ளன. இக்கோவிலில் மலை மகள் பார்வதிக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. இங்குதான் இராவணன் சிவபெருமானை நினைத்து தவம் செய்தான் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
இக்கோயில் மகாபார காவிய நாயகர்களான பஞ்ச பாண்டவர்களுடன் அதிகம் தொடர்புடையது. சிவபெருமான் காளை வடிவத்தில் பூமியில் புதையுண்டு திரும்பவும் வெளிப்பட்டபோது அவரது கை இந்த தலத்தில் வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலின் சிவலிங்கத்துக்கு அருகிலேயே ஆதி குரு சங்கராச்சாரியாரின் இரண்டரை அடி சிலையும் காணப்படுகிறது. மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்தில் ஆதி சங்கர பகவத் பாதாள் அன்னை பார்வதியை அழகிய சடையுடன் கூடிய மலை மகளை,அதாவது இமயமலையின் சிகரங்களில் துள்ளி விளயாடுபவள் என்று குறிப்பிடுகின்றார். இங்கிருந்துதான் ஆகாஷ்காமினி நதி உருவாகி பாய்கின்றாள்.
குருக்ஷேத்திர யுத்தத்தில் தங்களுடைய சகோதரர்களையே கொன்றுவிட்டோமே என பஞ்ச பாண்டவர்கள் வருந்தியபோது, வியாசர்தான் அவர்களிடம் ‘சிவனின் உடற் பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் அவருக்குக் கோயில் கட்டுங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னித்து காப்பாற்றுவார்’ என கூறியதாகவும், அதனை ஏற்றுதான் பஞ்ச பாண்டவர்களும் ஆளுக்கு ஒரு ஆலயமாக கட்டினர் எனவும் இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். அருகில் தெரியும் சந்திர சிலா குன்றில் ராமன் தவம் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல் ராவணனும் இங்கு தவம் செய்திருக்கிறானாம். வடஇந்திய பாணியில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் கர்ப்ப கிரகத்தில் ஒரே சமயத்தில் 10 பேர் மட்டுமே நிற்க இயலும். இந்தக் கோயிலுக்கு 4 கி.மீ. தூரத்திலேயே, ஒரு வரவேற்பு வளைவு உள்ளது. இங்கு ஒரு உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ‘தொடர்ந்து மேலே சென்று, தரிசிக்க இயலாதவர்கள் இங்கேயே காணிக்கையை போடலாம்’ என்று ஓர் அறிவிப்பு உள்ளன.
கோயிலல் அமைப்பு : குப்த காசி, மத்ய மகேஸ்வரர், கேதார்நாத் பாணியிலேயே அமைந்துள்ளது. உச்சியில், சுற்றி நான்கு புறமும் ஒரு பலகை மையமாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 16 வளைவுகள், இமாலய அழகை ரசிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன! வாசலில் நந்தி, சூலம் உள்ளன. கோயிலினுள் கணபதி, வியாசர், காலபைரவர் ஆகியோரும் உள்ளனர். பஞ்சபாண்டவர் சிலைகளும் சிறிய அளவில் உண்டு. பார்வதிக்கு அருகிலேயே தனிச் சந்நதி. கோயிலுக்கு வெளியே சற்று தள்ளிச் சென்றால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை காணலாம். இதன் அருகில் நந்தாதேவிக்கு கோயில் உள்ளது. ஆதிசங்கரர் சிலையையும் தரிசிக்கலாம். ஆதி சங்கரர் 8ம் நூற்றாண்டில் இங்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. மற்ற கேதார் கோயில்களில், தென்னிந்திய அர்ச்சகர்கள்தான் காலம் காலமாக இறைப்பணி செய்து வருகிறார்கள். ஆனால், துங்கநாத் கோயிலில் மட்டும் மாகு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அப்பணியை மேற்கொள்கிறார்கள். குளிர்காலம் வந்தால் இங்குள்ள உற்சவரும், அர்ச்சகரும் 18 கி.மீ. தூரத்தில் உள்ள முக்திநாத்துக்கு வந்து விடுவர். கோயிலின் மேற்பகுதிக்குச் சென்றால் நந்தாதேவி, நீலகாந்த், கேதார்நாத் உட்பட பல இமயமலைப் பகுதிகளைப் பார்க்கலாம்.
கேதார்நாத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் பாதையில் ஊக்கிமட்டிலிருந்து 30 கி.மீ தூரத்திலும், சோப்டாவிலிருந்து 5 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் இக்கோவிலை கட்டி சிவபெருமானை வழிபட்டான். மற்ற கேதாரங்களை ஒப்பிடுகையில் துங்கநாத்தை அடைய 5 கி.மீ தூரம்தான் நடைப்பயணம் செய்ய வேண்டும். ஆனால் பல இடங்களில் பாதை செங்குத்தாக உள்ளது. வழி முழுவதும் பசுமையான ஆல்பைன் மர காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ரோடன்டென் எனப்படும் அழகிய மலர் புதர்களும், மற்றும் இமயமலைக்கே உரிய பல அரிய மலர்களும் நீர் வீழ்ச்சிகளும் நிறைந்து காணப்படுகின்றது. மேலே ஏற சுமார் 3 அல்லது 4 மணி நேரம் ஆகும். மற்ற கேதாரங்களில் ஆதி சங்கரர் நியமித்தபடி தென் இந்திய பூசாரிகள் பூஜை செய்கின்றனர் ஆனால் இக்கோவிலில் மட்டும் இந்த பகுதியை சேர்ந்த பூசாரிகளே பூசை செய்கின்றனர். நந்ததேவி கோயில் மற்றும் ஆகாசகங்கை நீர்வீழ்ச்சி ஆகிய முக்கியமான அம்சங்களும் இந்த துங்கநாத் தலத்துக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றன. சோப்டா சாலை வழியாக இந்த நந்ததேவி கோயிலுக்கு சென்றடையலாம்.
ஐந்து கேதாரங்களையும் ஒரே தடவையில் தரிசனம் செய்வது என்பது மிகவும் கடினம். சுமார் 170 கி.மீ நடைப்பயணம் அவசியம் மேலும் சுமார் 16 நாட்கள் கடினமாக நடைப்பயணம் செய்ய வேண்டி வரும். மேலும் தங்குமிடங்களும் உணவும் நாம் நினைப்பது போல் கிடைக்காது. இந்த யாத்திரைகளை கோடைக்காலமான மே-ஜூன் மாதங்கள் அல்லது பருவ மழை முடிந்த செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் மேற்கொள்ளலாம் ஆனால் அப்போது குளிருக்கு தகுந்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும். பஞ்ச கேதாரங்களையும் தரிசனம் செய்தபின் பத்ரிநாதரை சாட்சிக்காக தரிசனம் செய்யவேண்டும்.
அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை