திருவழுவூர், வீரட்டானேசுவரர் கோயில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள வழுவூரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில் மங்காநல்லூர் என்ற ஊர் வருவதற்கு சற்று முன்பாக வலதுபுறம் கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 2 கி.மீ. சென்றால் ஊரையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
சுவாமி : வீரட்டேஸ்வரர், கஜசம்ஹாரர், கஜாரி, ஞானசபேசன்
அம்பிகை : பால குஜாம்பிகை, இளங்கிளை நாயகி
தல மரம்: தேவதாரு
தீர்த்தம் : பஞ்சமுக தீர்த்தம்
பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எட்டுத் தலங்களும் அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அட்ட வீரட்டத் தலங்கள் ஒவ்வொன்றுக்கும் விசேஷமான மகிமைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம். வீரட்டானேசுவரர் கோயில் அட்டவீரட்டானக் கோயில் தலங்களில் ஒன்றாகும். அமாவாசையன்று இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண வரம் வேண்டியும் பிரார்த்திக்கலாம். கஜசம்கார மூர்த்தி சந்நிதியின் பின்புறமுள்ள யந்திரத்தை வழிபட பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை அகலும்.
திருத்தலச் சிறப்புகள்: அட்ட வீரட்டங்களில் யானையாக வந்த கஜாசுரனை அழித்த தலம் இது. யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்தி, அதன் மத்தகத்தின் மீது நின்று இடது உள்ளங்கால் தெரியும் வண்ணம் ஊர்த்துவ தாண்டவம் ஆடுகிறார் பெருமான். இது நவதாண்டவங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. நடன சபைகளில் ஞானசபையாகப் போற்றப்பெற்றுள்ளது. சிதம்பரத்தில் “சிதம்பர ரகசியம்’ எனச் சொல்லப்படும் ரகசிய பிரதிஷ்டை அமைந்திருப்பது போல் இங்கும் கஜ சம்ஹார மூர்த்திக்குப் பின்னே ரகசிய யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கஜ சம்ஹார மூர்த்தியின் உள்ளங்காலை தரிசிப்பது மிகவும் சிறப்பானது என்று கூறுகின்றார்கள். சகஸ்ர லிங்க மூர்த்தி இந்தக் கோயிலில் சிறப்பானது. ஒரே லிங்கத்தில் ஆயிரம் சிறிய லிங்கங்கள் உள்ளன. செப்பு, ஐம்பொன் திருமேனிகள் மிக அழகாக உள்ளன. கஜசம்ஹார மூர்த்தியின் பின்புறம் உள்ள ஸ்ரீஞான சபாபதி யந்திரப் பிரதிஷ்டை 1941ல் காஞ்சி காமகோடி ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் மேற்பார்வையில் புதுப்பிக்கப்பட்டது.
தல வரலாறு : தாருகாவனத்து முனிவர்கள் சிவபக்தி இல்லாமல் செருக்குடன் இருந்தனர். அவர்கள் கர்வத்தை அடக்க பெருமான் வசீகரிக்கும் தோற்றத்துடன் அவர்களின் முன்பாகச் சென்றார். முனிவர்கள் அவரைக் கொல்ல நினைத்து யாகம் செய்து பலபொருள்களை அவர்மீது ஏவினார்கள். அவற்றையெல்லாம் அழித்தும், ஏந்தியும் அவர்களின் செருக்கை அடக்கினார். அவர்கள் பெருமானை வேண்டவே, அவர்களுக்கு ஞானோபதேசம் செய்தார். திருமால் மோகினி வடிவத்தோடு மோகனாம்பாளாக எழுந்தருளினார். பெருமான், மோகினியைப் பார்த்தவுடன் ஐயனார் பிறந்தார். முனிவர்களால் ஏவப்பட்ட அக்னி, புலி, மான், மழு, பாம்பு, முயலகன் மீது காலை ஊன்றி நர்த்தனம் புரிந்தார். இதுவே நடராஜப் பெருமானின் உருவத் தத்துவம். இத்தலம் பற்றி அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் உண்டு.
தாருகாவனத்தில் வாழ்ந்த ரிஷிகள், ‘வேதங்களில் கூறப்பட்டுள்ள யாக ஹோமங்களைச் செய்தாலே போதும்; கடவுள் வழிபாடு தேவை இல்லை. யாக விதிகளைக் கடைப்பிடித்து அதனை ஒழுங்காகச் செய்து விட்டால், அதற்குக் கட்டுப்பட்டு அந்த யாகத்துக்கு உரிய தேவர்கள், யாகம் செய்தவர்களுக்கு வேண்டியதைத் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்‘ என்ற கர்வத்தினால் சிவ வழிபாடும் அவசியம் இல்லை என்று கருதி, சிவபெருமானை அவமதிப்பவர்களாக இருந்தனர். ‘யாகத்தைத் தவிர வேறு தெய்வமில்லை‘ என்று கர்ம காண்டத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்ததால் அவர்கள் ‘கர்ம காண்டவாதிகள்‘ எனப்பட்டனர். அவர்களது கர்வத்தை அகற்றி, உண்மையை உணர்த்த திருவுளம் கொண்டார் சிவபெருமான். அதன்படி திருமால், பெண் வேடத்தில் மோகினியாக உடன் வர, தான் திகம்பரராக திருமேனி கொண்டு, ஆடியும், பாடியும் வரும் குள்ள பூதங்கள் சூழ தாருகாவனத்தை அடைந்தார் சிவனார். திகம்பரரின் பிரகாசமான அழகையும், வாலிப வனப்பையும் கண்டு அவரது பேரழகில் மயங்கிய ரிஷி பத்தினிகள், அவரைப் பின்தொடர்ந்தனர். மோகினி வடிவம் கொண்ட திருமால், ரிஷிகள் தவம் செய்யும் யாகசாலைக்குச் சென்று ஆடிப் பாடினார். மோகினியின் பேரழகில் தங்களை மறந்த ரிஷிகள் தம்வசம் இழந்தனர். அவர்கள் மனத்தில் மோகாக்னி மூண்டிருந்ததால், தாம் வளர்த்த யாகாக்னியை முற்றிலும் மறந்தனர். அந்த வேளையில் ஆணழகனான திகம்பரர் ஆடியும் பாடியும் அங்கு வர, அவர் பின்னால் முனிவர்களது மனைவியரும் உடன் வருவதைக் கண்டனர். ”நாங்கள் தவம் செய்யும் இடத்துக்கு ஏன் வந்தாய்” என்று திகம்பரரை நோக்கி ரிஷிகள் கேட்கவும், தாமும் தம் மனைவி மோகினியுடன் அங்கே தவம் செய்ய வந்ததாகக் கூறி, சிரித்தார்.
”இவள் உன் மனைவியா? மற்றவர்களை மயக்கித் திரிகிறாளே. நன்றாக இருக்கிறது இவள் கற்பு” என்று பரிகசித்தனர் ரிஷிகள். உடனே திகம்பரர், ”நீங்கள் உங்கள் மனைவியோடு வாழ்ந்து கொண்டுதானே தவம் செய்கிறீர்கள். உங்கள் மனைவியரது மன அடக்கத்தையும், கற்பின் திறனையும்தான் இப்போது நீங்களே பார்க்கிறீர்களே. நீங்கள் மட்டும் என்ன? என் மோகினியிடம் மயங்கி, உமது யாககாரியங்களை விட்டு ஓடி வந்து விட்டீர்கள். என் மனைவியின் கற்புக்கு என்ன பங்கம் வந்து விட்டது?” என்று கைகொட்டி சிரிக்கவும், ரிஷிகள் செய்வதறியாது திகைத்தனர்.
பிறகு, மோகினியுடன் அங்கிருந்து புறப்பட்ட திகம்பரர் வசிஷ்ட மகரிஷியின் ஆசிரமத்துக்குச் சென்றார். வந்தவர்கள் யார் என்று உணர்ந்த வசிஷ்டர் தம்பதியினர் அவர்களுக்கு ஆசனம் அளித்து, அமரச் செய்து பூஜை செய்தனர். பிறகு, சிவபெருமானும் திருமாலும் தமது இருப் பிடம் சென்றனர். தம்மை அவமதித்த திகம்பரரது செயலையும், தம் மனைவியரது மன அடக்கம் கேலிக்கு உள்ளாக்கப்பட்டதையும் கண்ட ரிஷிகள் கோபம் கொண்டனர். தீய வேள்வி ஒன்று செய்து, அதிலிருந்து பெரிய பூதத்தைத் தோற்றுவித்து திகம்பரரை கொன்றுவிடத் திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் தொடங்கிய யாகத்தில் முதலில் ஒரு நெருப்புக் கோளம் வந்தது. அதை, திகம்பரரை அழிக்கும்படி ஏவினர் ரிஷிகள். திகம்பரராகிய சிவபெருமான் அதைத் தம் கையில் ஏந்தினார். தொடர்ந்து அவர்கள் அனுப்பிய பாம்பு, டமருகம் ஆகியவற்றையும் கைகளில் ஏந்தி, மண்டையோட்டை மாலையாகவும் அணிந்தார் சிவனார். இவை தவிர, யாகத்திலிருந்து அவர்கள் அனுப்பிய சிங்கத்தை உரித்து, தமது கச்சாக அணிந்தார். பிறகு, பெரிய கருவண்டு ஒன்றை அனுப்பினர். சிவ பெருமான், ஹூங்காரம் செய்து அதனைத் தமது நடனத்துக்கு சுருதி கூட்டுமாறு செய்தார். வலிமையான பூதத்தை அவர்கள் ஏவ, அதைத் தனக்கு ஏவலனாக ஆக்கினார். அறியாமையின் வடிவானவனும், அநேக நோய்களை உண்டு பண்ணுபவனுமாகிய ‘முயலகன்‘ என்ற குட்டை பூதத்தை அனுப்பினர். பெருமான் அவனைத் தமது திருவடியின் கீழ் பாத மனையாக்கிக் கொண்டு, அவன் மேல் நடனமாடினார். தங்களது முயற்சி எதனாலும் சிவபெருமானை அடக்க முடியாத முனிவர்கள், யாகத் தீயிலிருந்து மிகப் பெரிய முரட்டு யானையைத் தோற்றுவித்து அனுப்பினர். அது கயிலைக்குச் சென்று, அங்கு யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானைப் பற்றி எடுத்து தம் வாயில் போட்டு விழுங்கியது. சிவபெருமான் சிறிது நேரம் திருவிளையாடல் செய்யச் சித்தம் கொண்டார்.
அப்போது உலகமெங்கும் இருள் சூழ்ந்தது. தேவர்கள் பயந்தனர். தாருகாவனத்து ரிஷிகள் வெற்றிக் களிப்பில் ஆடினர். சிவபெருமான் யானையின் வயிற்றில் கொடிய வெப்பத்தை உண்டாக்கினார். அது வயிற்று வலியால் துடித்துப் புரண்டது. பல இடங்களிலும் அலைந்து திரிந்து இறுதியில் பஞ்சப்பிரம்ம தீர்த்தத்தில் வீழ்ந்தது. பெருமான் தமது உடலைப் பெருக்கி யானையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்தார். அதன் தோலை உரித்து அதைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டார். இதனால் அவர் “கஜசம்ஹாரர், கிருத்தி வாசர், கரி உரித்த பெருமான்” என்று புகழப் பெற்றார். தீய வேள்விக்குத் துணை நின்ற வேத புருஷன், மான் வடிவம் கொண்டு சிவபெருமான் காலில் வீழ்ந்து, தன்னை மன்னிக்குமாறு வேண்ட, அந்த மானைத் தம் இடக்கரத்தில் ஏந்தி, எந்த நேரமும் தமது காதில் வேதம் ஓதுமாறு பணித்தார்.
வேத புருஷனும், யாக புருஷனும் தங்களை விட்டு விலகியதாலும், சிவபெருமான் மற்றும் திருமாலை நிந்தித்த பாவத்தாலும் தீய வேள்வியின் பயனாலும் கடுமையான ஜுரம், நடுக்கம் முதலியன அடைந்து வருந்திய தாருகாவனத்து ரிஷிகள் இறுதியில் சிவனைச் சரணடைந்தனர். ஈசன் அவர்களை மன்னித்து சிவஞானம் உபதேசித்தார்.
கோயில் அமைப்பு : இங்குள்ள கோயில் பிரமாண்டமானது. முன் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரமும் ஐந்து கண்களும் கொண்டது. திருக்குளம் ஈசான தீர்த்தம் மிகவும் பெரியது. சுவாமி, அம்மன் சந்நதிகள் தனித்தனியாக உள்ளன. பிரானின் ஐந்து முகங்கள் ஐந்து தீர்த்தங்களாக அமைந்துள்ளன. பெருமானே தீர்த்தமாக விளங்குகிறார். இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடைய கிழக்கு நோக்கியது. அழகான ராஜகோபுரம். கோயிலின் முன்பு பஞ்சமுக தீர்த்தம் எனப்படும் குளம் உள்ளது. விசாலமான உள் இடம். உள்ளே நுழைந்தால் நந்தியும், முன்னால் விநாயகரும் உள்ளனர். அடுத்துள்ள உள்வாயிலைத் தாண்டினால் வீரட்டேஸ்வர சுவாமி தரிசனம். துவார கணபதி, துவாரசுப்பிரமணியரை வணங்கி, வாயில் நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. கொடி மரத்து விநாயகர் உள்ளார். கொடிமரத்தின் வலதுபுறம் சஹஸ்ரலிங்கமும், வலக்கோடியில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளன. உள் வாயிலில் உள்ள துவார கணபதியையும், சுப்பிரமணியரையும் வணங்கி, இருபுறமும் சுதையாலான துவாரபாலகர்களையும் தொழுது, சென்றால் முன் மண்டபத்தை அடையலாம். உள் பிராகாரத்தில் வலம் வரும்போது, வரிசையாக சண்டேசுவரர், விநாயகர், நால்வர், இரு கணபதிகள், தொடர்ந்து அறுபத்து மூவரின் மூல உருவங்கள், தல விநாயகர் ஆகியோர் உள்ளனர். அடுத்து, ‘உமைமுருகுடையான் சந்நிதி’ உள்ளது. தொடர்ந்து ஜேஷ்டாதேவி, நாகர்கள், பிடாரி, சப்தமாதர் வழிபட்ட லிங்கங்கள், பைரவர்கள் சந்நிதிகள் உள்ளன. அடுத்து வள்ளி தெய்வயானை சுப்பிரமணியரும், பக்கத்தில் பாலசுப்பிரமணியரும், கஜலட்சுமியும் உள்ளனர். சனிபகவான், பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பால் பிட்சாடனர் உருவம் உள்ளது.
பெரிய அருமையான திருமேனி. பக்கத்தில் மோகினி உருவம் உள்ளது. வாயில் நுழைந்ததும் வலப்பால் ‘கஜசம்ஹாரமூர்த்தி’ தரிசனம் தருகின்றார். இம்மூர்த்தி மிகவும் அழகு வாய்ந்ததாக உள்ளது. யானையின் தோலுரித்து, யானையை அழித்து, சிரசின் மீது சுற்றியவண்ணம், இறைவன் வீர நடனமாடுகின்றார். யானையின் வால்புறம் சிரசின் மீது தெரிகிறது. திருமேனி ஓங்கார வடிவில் அமைந்துள்ளது. கைவீசி திருவடிகள் முருக்கியவாறு, மடித்து, திருவடியின் உட்புறம் தெரியுமாறு நடனமாடுவது அற்புதம். புறங்கால் தரிசனத்தை இங்கு, இம்மூர்த்தியில் கண்டு தொழுது களிக்க முடிகிறது. இத்திருமேனிக்குப் பக்கத்தில் அம்பாளின் திருமேனி அதியற்புதத்தோடு திகழ்கின்றது. ஒரு பாதத்தைச் சற்று திருப்பி, நடந்து செல்ல முயலும் கோலத்தில் உள்ளது. அம்பாளின் இடுப்பில் முருகப்பெருமான் காட்சி தருகின்றார். அவருடைய ஒரு விரல் பக்கத்தில் உள்ள மூர்த்தியைச் சுட்டிக் காட்டும் அமைப்பில் உள்ளது.
தன் கணவன் இல்லாமையால், வழியின்றித் திகைத்த அம்பிகை, தன் தந்தை வீட்டிற்குச் செல்வதற்கு முயன்றார். அப்போது இறைவன் எழுந்து வெளிப்படவே, குமரனாகிய முருகப் பெருமான், தன்தாய்க்கு, ‘இதோ தந்தையார்’ என்று சுட்டிக் காட்டினாராம். வெளியே வந்தால் நேரே மூலவர் தரிசனம். கிழக்கு நோக்கியது, சுயம்புத் திருமேனி. நாககவசத்தில் தரிசிக்க மிகவும் அருமை. சுவாமி சந்நிதிக்கு இடப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. தனிக்கோயில், அம்பாள் நின்ற கோலம்.
மாசி மகத்தில் பெருவிழா, திருவாதிரை, பத்து நாட்களுக்கு மாணிக்கவாசகர் திருவிழா, நவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.
தினந்தோறும் காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை