கிரிஸ்னேஸ்வரர் கோயில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் கிரிஸ்னேஸ்வரர் அல்லது குஷ்மேஸ்வரர் கோயில் மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கி.மீ தொலைவிலும், எல்லோராவிலிருந்து ஒரு கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ள இக்கோயில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இறைவன் : குஷ்மேஸ்வரர், கிருஷ்ணஸ்வரர், குஸ்ருணேஸ்வரர், துஷ்மேசுவரர்
இறைவி : குஷ்மேஸ்வரி
தீர்த்தம் : சிவாலய தீர்த்தம், ஏலா எனும் நதி
ஜோதிர்லிங்கம் என்பது இந்து மதத்தில் சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள், திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 கோயில்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள 6 ஜோதிர்லிங்க கோயில்கள் தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளன.
தல சிறப்புகள் : குஷ்மேஸ்வரர் கோயில் தனிச் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலையையும் சிற்ப செதுக்கல்களையும் கொண்ட இக்கோயில் மகாராஷ்டிராவில் உள்ள ஐந்து ஜோதிலிங்க தலங்களில் ஒன்றாகும். இறைவன் ஜோதி வடிவத்தில் பார்வதி தேவிக்கு அருள்பாலித்த அற்புதத் தலம் இது. இந்தப் பகுதியில் பாயும் ஏலா எனும் நதியில் நீராடி சிவபெருமானைக் குங்குமத்தின் மூலம் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் பார்வதி தேவி. ஒருநாள் ஏலா நதியில் நீராடிவிட்டு, தன்னுடைய இடது உள்ளங்கையில் இருந்த குங்குமத்தை, வலது கை மோதிர விரலால் எடுத்தபோது, கயிலையில் ஒரு ஜோதிப்பிழம்பு தோன்றி, தேவியின் கரத்தில் இருந்த குங்குமத்துடன் ஐக்கியமாகி, பிறகு அம்பிகை வழிபட்டு வந்த சிவலிங்க மூர்த்தியில் சங்கமித்தது. அதன் விளைவாக அந்தச் சிவலிங்க மூர்த்தம் குங்குமம் போன்று சிவந்து, ஜோதியைப் போன்ற பிரகாசத்துடன் காட்சி அளித்தது. பார்வதி தேவி குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்தபோது தோன்றியதால், இந்தத் தலம் குஸ்ருணேசுவரம் என்று அழைக்கப்படுகிறது.
கோயில் அமைப்பு : முற்காலத்தில் இந்தக் கிராமத்தில் போசலே என்ற பெயர் கொண்ட சிவபக்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை பாம்புப் புற்றின் பக்கமாக அவன் சென்றபோது, புற்றிலிருந்து ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டதைக் கண்டான். உடனே, தான் சேர்த்து வைத்த செல்வம் அனைத்தையும் செலவிட்டு, சிவபெருமானுக்கு ஒரு கோயில் எழுப்பினான். பின்னர் இந்தத் தலம் 16ம் நூற்றாண்டில் சத்ரபதி சிவாஜியின் தாத்தா மல்ரோஜி ராஜே போஸ்லே என்பவரால் புதுப்பித்துக் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு 18ம் நூற்றாண்டில் அகில்பாய் ஹோல்கர் என்பவர் தற்போதிருக்கும் எழில் மிகு ஆலயத்தை எழுப்பினார். கோயில் முழுக்க முழுக்க சிவப்புக் கற்களால் ஐந்து நிலைகளில் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள தூண்கள் கலையழகுடன் காணப்படுகின்றன. வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலையும், காயாவில் உள்ள விஷ்ணு பாத கோயிலையும் திரும்பக் கட்டுவித்தவரும் இவரே ஆவார்.
கோயிலுக்கு யார் வழிபடச் சென்றாலும் வரிசையில் நின்றே செல்ல வேண்டும். கோயிலுக்குள் நுழையும் ஆண்கள் யாரும் மேலாடை அணிந்து செல்லக் கூடாது. காசியைப் போன்று இங்கும் யார் வேண்டுமானாலும் கருவறைக்குச் சென்று கிரிஸ்னேசுவரரைத் தொட்டு வணங்கி, அபிஷேகம் செய்து மகிழலாம். குங்குமத்தைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். மனதில் என்ன நினைத்து லிங்கத்தைத் தொடுகிறோமோ அது நமக்கு நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மனதில் நல்ல எண்ணங்களுடன் இறைவனைத் தொட்டு வழிபட்டால் நல்லது நிகழுமாம்.
தல வரலாறு : ஒரு காலத்தில் சுதர்மன் என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவி சுதேஹா. இருவருக்கும் குழந்தைப் பேறு இல்லாததால் தனது தங்கை குசுமா என்பவளைத் தனது கணவனுக்கு இரண்டாவது தாரமாகத் திருமணம் செய்து வைத்தாள். குசுமா அதிதீவிர சிவபக்தை. தினமும் களிமண்ணால் சிவலிங்கத்தைச் செய்து, வழிபட்டு ஏரியில் போட்டுவிட்டுச் செல்வாள். சிவபெருமானின் அருளால் குசுமாவுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் சுதர்மனுக்கு சுதேஹாவிடம் அன்பு குறைந்து, குசுமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினான். அதுவரை தனது தங்கையை மகிழ்ச்சியுடன் கவனித்துக்கொண்ட சுதேஹா, மன வேதனை அடைந்து குசுமாவின் மகனைக் கொன்று, சாக்கு மூட்டையில் கட்டி சிவாலய ஏரியில் வீசி விட்டாள்.
இதைக் கேள்விப்பட்ட குசுமா, சிவபெருமானிடம் தனது மகனைக் காப்பாற்றும்படி வேண்டினாள். சிவபெருமானின் அருளால் இறந்த குசுமாவின் குழந்தை உயிர் பெற்று ஏரியில் நடந்து வந்த அதிசயம் நடந்தது. குசுமாவுக்கு அருள்புரிந்த காரணத்தினால்தான் இந்தத் தல இறைவன் குஷ்மேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். குஷ்மேசுவரர் என்றால் இரக்கமுள்ளவர் என்றும் அர்த்தமாம். இதனால் குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் கிரிஸ்னேசுவரைத் தரிசித்து, வணங்கிச் செல்கிறார்கள்.
குஷ்மேஷ்வர் கோயில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் புகழ்பெற்ற ரணதம்போர் தேசிய பூங்காவுக்கு வெகு அருகிலேயே குஷ்மேஷ்வர் கோயில் அமைந்திருக்கிறது. 12 ஜோதிர்லிங்க கோயில்களில் கடைசி ஜோதிர்லிங்க ஆலயமாக கருதப்படும் குஷ்மேஷ்வர் கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. குஷ்மேஷ்வர் கோயில் சிவராத்திரியின்போது வண்ணமயமாக காட்சியளிப்பதுடன் விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களையும் ஈர்த்து வருகிறது.
காலை 5.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்
அருகிலுள்ள விமான நிலையம் : அவுரங்காபாத்
அருகிலுள்ள ரயில் நிலையம் : அவுரங்காபாத்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு