திருக்கண்ணபுரம் - நீலமேகப்பெருமாள் கோயில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நன்னிலம் நாகபட்டிணம் சாலையில் திருப்புகலூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மூலவர்: நீலமேகப்பெருமாள்
உற்சவர் : சௌரிராஜப்பெருமாள்
தாயார் : கண்ணபுர நாயகி
தீர்த்தம் : நித்திய புஷ்கரணி
மங்களாசாசனம் : பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
கிருஷ்ணருக்கான ஐந்து தலங்களாக திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகியவை பஞ்ச கிருஷ்ண சேத்தரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
தல சிறப்புகள் : இத்தலத்தில் திருமால் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் இறைவனின் கைகள் தானம் பெறுவது போல் உள்ளன. இங்கு திருமால் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் கீழைவீடு என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவ விழவாவின் போது காலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் திருமால் என மும்மூர்த்தி வடிவில் அருளுவது இத்தலச் சிறப்பாகும். இராமர் இத்தலத்தில் விபீசணனுக்கு திருமால் வடிவில் நடந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் அமாவாசை அன்று விபீசணனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோவிலில் மூலவரை நோக்கி ஒரே வட்டத்தில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றன. இத்தலம் இறைவன் வைகுந்த பதவியை வழங்குபவராகப் போற்றப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.
தல வரலாறு : இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், கோவிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன் தான் நாளை வந்து பார்க்கும் போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார்.
முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் எதையும் பொருட்படுத்தாமல், பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். மகாவிஷ்ணுவிடம் “அஷ்டாட்சர மந்திரம்” கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.
முன்னொரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செலவழித்ததால் வறுமையில் வாடிய அவர் மன்னனுக்கும் வரி கட்டவில்லை. எனவே, மன்னன் அவரை சிறைப்பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் மனைவி. அவர் பெருமாளுக்கு மானசீகமாக நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார். இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்படவே அவர்கள் முனையதரையன் படைத்த பொங்கலை சுவாமி உண்டதை அறிந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது.
ஒருநாள், திருக்கோயிலின் அரையர் வந்தபோது, டில்லி சுல்தானின் படைகள், இத்திருக்கோயிலின் உயர்ந்த மதில்களை இடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். திரும்பி, பக்கத்திலிருந்த எம்பெருமானைப் பார்த்தபோது, பகவான் வழக்கம்போல் புன்னகை மலர சேவை சாதித்துக் கொண்டிருந்தான். டில்லி சுல்தானின் இந்த அட்டூழியத்தை, சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாயே என்று சொல்லி, கையிலிருந்த தாளத்தை எம்பெருமானை நோக்கி வீசியெறிந்தார். அது பகவானின் புருவத்தில் பட்டு ரத்தமும் கொட்டியது. உடனே அந்த ரத்தத்தைத் துடைத்து, இறைவனிடம் கதறியழுது, தன்னை மன்னித்துவிடும்படி வேண்டினார். அந்த வேண்டுதலுக்கு பலனும் உடனே கிடைத்தது. மறுநாள், டில்லி தளபதி, தனது அடுத்த இலக்காக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலைப் படையெடுத்து அழிப்பதற்காகத் தனது வீரர்களை மதுரையம்மதிக்குச் செல்லும்படி ஆணையிட்டார். அதனால் திருக்கண்ணபுரம் திருக்கோயில் அடியோடு நாசமாவதிலிருந்து மயிரிழையில் தப்பியது. அன்றிரவு வீடு திரும்பிய திருக்கோயிலின் அரையர், இவ்விதம் தனது பக்திக்குரிய எம்பெருமானின் மீது தாளத்தை வீசி அவனுக்கு அபசாரம் செய்துவிட்டோமே என அன்றிரவு முழுவதும் புலம்பித் தவித்தார். நள்ளிரவில் மிகக் கடுமையான காய்ச்சலும் அவரைத் தொற்றிக்கொண்டது. மறுநாள் காலை சூரிய உதயத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார். அரையர் தாளத்தை வீசியதால் சௌரிராஜப் பெருமானின் திருமுகத்தில் ஏற்பட்ட வடுவை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
கோவில் அமைப்பு : இவ்வாலயம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது. இந்தக் கோவிலின் கோபுரம் 7 அடுக்குடையது. திருக்கோயிலை வலம் வரும் போது இத்திருக்கோயிலின் விமானம் கண்ணில் படுவதில்லை என்பது இதன் சிறப்பு. கிழக்கு சமுத்திரத்திற்கு சமீபத்தில் திருக்கண்ணபுரம் எனும் கிருஷ்ண க்ஷேத்ரம் இருக்கிறது. அங்கு கருணைக் கடலாக சேவை சாதிக்கிறார், சௌரிராஜன். க்ஷேத்ரம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என ஏழும் இங்கு சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது. கிருஷ்ண க்ஷேத்ரமாகவும் வனத்தில் கிருஷ்ணாரண்யமாகவும் காவிரி நதி பாய்ந்து வளமூட்டியபடியும் கிழக்கு கடலின் கரையினிலும் உபரிசிரவசு மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட கண்ணபுரம் என்கிற நகரமும் நித்ய புஷ்கரணியும் உத்பாலவதாக விமானம் கொண்டு ஆலயம் விளங்குகிறது. கண்வ முனிவருக்கு அதிசுந்தரமான தரிசனத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அளித்ததால் கண்வபுரம் என்று பெயர் பெற்று, அதுவே கண்ணபுரமாக மாறியது.
இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடித் தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் உத்பலாவதக விமானம் எனப்படுகிறது. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.
இங்குள்ள தீர்த்தத்தில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜை செய்கிறார்கள். ஒருசமயம் தேவேந்திரனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. ததிசி என்ற மகரிஷியின் மரணத்திற்கு தேவேந்திரன் காரணமானதால் அவனுக்கு அந்த தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்கிக்கொள்வதற்காக திருக்கண்ணபுரம் நித்ய புஷ்கரணியில் நீராடி, அஸ்வமேத யாகம் செய்தான். அப்போது இந்திரன் நவக்கிரகப் பிரதிஷ்டை செய்து, சூரியனையும் வழிபட்டார்.
இந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட நவக்கிரகங்களைத்தான் இன்றும் நாம் இத்திருத்தலத்தில் தரிசிக்கிறோம். மேலும் இந்த நவக்கிரகங்களின் மீது எம்பெருமானின் கடாட்சம் படுகிறது. நவக்கிரக தோஷங்களைப் போக்குவதில் திருக்கண்ணபுரமும் சக்திவாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது. இந்த நவக்கிரகங்களைச் சுற்றிலும் 12 ராசிகளின் சின்னங்களும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. ஸ்ரீமந் நாராயணன் அனைத்துச் சக்திகளையும் தன் குடவயிற்றில் கொண்டிருப்பதால் நவக்கிரகங்கள் போன்ற இதர தேவதாசக்திகளை வைணவத் திருக்கோயில்களில் பிரதிஷ்டை செய்வதில்லை. பகவானைத் தரிசிக்கும்போது அனைத்து தேவதா சக்திகளையும் நாம் தரிசித்து வணங்கிவிடுகிறோம். இதே காரணத்தினால்தான் வைணவத் திருக்கோயில்களில் கற்பூர ஆரத்தி எடுத்தவுடன் பக்தர்கள் அதைக் கைகளினால் ஒற்றிக்கொள்வதில்லை. பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணனின் சந்நிதியில் அவனைத் தவிர, அவனைவிட பல படிகள் குறைந்தவரான அக்னியை வணங்கக்கூடாது என்ற தாத்பரியம்தான் காரணமாகும். ஆனால் திருக்கண்ணபுரம் திருத்தலத்தில் மட்டும் ராஜகோபுரம் நுழைவாயிலில் இடதுபுறச் சுவரில் பெருமாள் சந்நிதியை நோக்கி ஒரே வட்டத்தில் நவக்கிரகங்களும், ராசி மண்டலத்துடன் அதன் நடுவில் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற அமைப்பு வேறெந்த திருக்கோயிலிலும் காண்பதரிது.
கண்ணபுரத்து அமுதன், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீபத்மினி, ஸ்ரீஆண்டாள் ஆகிய நான்கு தேவிகளுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகின்றான்.
வைகாசி, மாசி மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழாக்கள் இங்கு சிறப்பானவை. மாசி மாதம் பௌர்ணமியின் போது கடற்கரையில் நடைபெறும் கருடனுக்குக் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள ரயில் நிலையம் : நன்னிலம்
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு