மூலத் துவாரகை
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் குஜராத் மாநிலம் போர்பந்தரிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள கொஷனார் எனும் ஊருக்கு அருகேயுள்ளது. இங்கு பகவான் கருடக் கொடி கோட்டை யில் பறக்க, அரசாண்டார். மேலும் ஸ்ரீகிருஷ்ணர், ஜரா எனும் வேடுவனால் அம்பு எய்யப்பட்டு வைகுண்டம் எய்தினார் என்றும் அதன் பிறகே கடலில் இத்தலம் மூழ்கியது என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்ச துவாரகை : துவாரகை குஜராத் மாநிலத்தின் தேவபூமி. ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்தது. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகை நகரம் ஒன்று. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகை மடம் இங்கு அமைந்துள்ளது. கோமதி ஆற்றின் கரையில் துவாரகை நகரம் அமைந்துள்ளது. துவாரகை என்றால், கோமதி, பேட் துவாரகையை குறிக்கும். எனினும், கிருஷ்ணர் பிறந்த இடம், வசித்த இடம், வளர்ந்த இடம், லீலைகள் புரிந்த இடம், ஆட்சி செய்த இடம் என்று பல இடங்கள் உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணரின் தொடர்புடைய இடங்களாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன. துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட டாகோர் துவாரகை, கோமதி துவாரகை, பேட் துவாரகை, மூலத் துவாரகை, மோட்ச துவாரகை, சேர்த்து ‘பஞ்ச துவாரகைகள்’ என்றழைக்கப்படுகின்றது. பிற்காலத்தில் ரிஷிகளின் சாபத்தினால் யாதவர்களின் வம்சமே அழிவுற்றது. துவாரகாவின் பெரும் பகுதி கடலின் எழுச்சியால் மூழ்கியது. தற்போது புனித யாத்ரீகத் தலமாக போற்றப்படும் ஆதி துவாரகையின் நிழலாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன.
தலச் சிறப்புகள் : ஸ்ரீ கிருஷ்ணர், சத்யபாமா மற்றும் ருக்மிணியுடன் இங்கு தங்கி, துவாரகாபுரியை எப்படி நிர்மாணிக்கலாம் என்று ஆலோசனை நடத்திய இடம் என்பதால் இதற்கு மூல துவாரகா என்று பெயர் வந்தது. மூலத்துவாரகையில் தற்போது கர்ப்பகிரகம் மட்டுமே, அதுவும் பாழடைந்த நிலையில் எஞ்சியுள்ளது. விமானம் முற்றிலுமாக சிதைந்து விட்டது. சுற்றுப்பாதையும் சரியாக இல்லை. சபா மண்டபம் இருந்ததற்கான சின்னங்கள் உள்ளன. அருமையான அமைதியான சுழலில் குழலூதும் கண்ணன் இராதையுடன் மந்தகாச புன்னகையுடன் அருமையாக காட்சி தருகிறார். அம்பாள் சன்னதியும் உள்ளது.
சதுர்புஜங்களில் கதை, சக்கரம், சங்கு, அட்ச மாலை தாங்கி எழிலாக கரு நீல வண்ணன், காயா மலர் வண்ணன், கார் முகில் போல் வண்ணன், கருங்கடல் முந்நீர் வண்ணன், கடல் வண்ணன், நீல முகில் வண்ணன், நீரார் முகில் வண்ணன் என்று பலவாறெல்லாம் ஆழ்வார்கள் அனுபவித்து பாடியபடி நீல வண்ணத்தில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும்.
மதுராவில் இருந்து துவாரகை நோக்கி வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் இங்கு தங்கினாராம். அதற்கு பிறகு கடல் வழியாக துவாரகைக்கு சென்றார் எனவே இத்தலம் மூலதுவாரகை ஆனது என்றார். ஸ்ரீகிருஷ்ணர் இங்கு தங்கிய போது குளித்த இடம் அர்த்த சந்திர வடிவில் கிருஷ்ண குண்ட் என்று அழைக்கப்படுகின்றது. அருகில் ஒரு பாழடைந்த வட்ட வடிவ கட்டிடம் உள்ளது. அங்குள்ள பூசாரி வசிப்பதற்கு ஒரு இல்லம் கட்டிக்கொடுத்துள்ளனர்.
ருக்மணி கோவில்: ஒருமுறை துர்வாச முனிவரை துவாரகைக்கு வருமாறு கிருஷ்ணரும், ருக்மணியும் அழைக்கச் சென்றனர். அதற்கு துர்வாச முனிவர் ஒரு நிபந்தனை போட்டார். அதாவது, தான் வரும் ரதத்தை எந்த விலங்கும் இழுக்கக் கூடாது, அவர்களே தன்னை ரதத்தில் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். இருவரும் ஒப்புக் கொண்டு, அவரை ரதத்தில் உட்கார வைத்து, இழுத்துச் சென்றனர். கொஞ்சம் தூரம் சென்றதும், ருக்மணிக்கு தாகம் ஏற்பட்டது. அதனால், கிருஷ்ணர், ரதத்தை நிறுத்தி, குடிக்க கங்கை நீரே வருமாறு ஏற்பாடு செய்தார். அதாவது காலினால் மண்ணில் துவாரத்தை ஏற்படுத்தி, நீர்பெருக்கு உண்டாக்கினார். அதனை ருக்மணி குடித்து தாகசாந்தி செய்து கொண்டார். இதனால், துர்வாசருக்கு கோபம் வந்து, ருக்மணி கிருஷ்ணரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சாபமிட்டார். அதனால், ருக்மணி துவாரகதீஸ் ஜகத் மந்திரிலிருந்து 2 கி.மீ தள்ளி இருந்தார். இக்கதையின் படியே, கடற்கரையில் ருக்மணி கோவில் உள்ளது.
ருக்மணி கிருஷ்ணரின் மனைவி, விதர்பநாட்டு மன்னர் பீஸ்மகர் என்பவரின் புதல்வி. அப்பொழுது, விதர்பநாடு, மகதநாட்டின் ஜராசந்தனின் அதிகாரத்தில் இருந்தது. ருக்மணியின் பெற்றோர்கள் ருக்மணியை கிருஷ்ணருக்குதான் திருமணம் செய்து கொடுக்க விரும்பினர், ஆனால் சகோதரன் ருக்மி, அவனது நண்பன் சிசிபாலனுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். ஆனல், கிருஷ்ணர், ருக்மணியை அபகரித்துக் கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டார்.
கோவில் அமைப்பு: இரண்டு அடுக்குகள் கொண்ட இக்கோவில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இருக்கின்ற இக்கோவில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கடற்கரையில் தனியாக உள்ளது. கருவரை, வட்டவடிவில் நடு மண்டபம், அர்த்த மண்டபம் என்றுள்ளது.வெளிச்சுற்றில் சிற்பங்கள் மூன்றடுக்குகளில் உள்ளன. கீழடுக்கில் சுற்றிலும் ஆபாசமான சிற்பங்கள் காணப்படுகின்றன. நடுவில் மூன்று திசைகளில் மூன்று தெய்வ சிற்பங்கள் உள்ளன. அதன் கீழ் யானைகளின் சிற்பங்கள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் உருதெரியாமல் அழிந்துள்ளன. கடற்கரையில் உள்ளதால், உப்பின் தன்மையினாலும், காற்றினாலும், அரித்தெடுக்கப்பட்டு உருமாறி இருக்கின்றன என்கிறார்கள். நடுவில் இருக்கும் சிற்பங்கள் நன்றாக இருக்கின்றன, ஆனால், கால்-கைகள் உடைக்கப்பட்டுள்ளன. அதனால், ஒருவேளை இக்கோவில் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
போர்பந்தரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் கடற்கரையில் மாதவபூர் என்ற சிறிய கிராமத்தில் மாதவராய் கோவில் உள்ளது. அது முகமதியர்களால் தாக்கப்பட்டதால், இடிந்த நிலையில் காணப்படுகிறது. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் வழக்கமாக மூன்று பகுதிகளைக் கொண்டு கிழக்கு பார்த்து இருக்கிறது. கருவரை, அந்தரல என்ற இடைப்பகுதி மற்றும் மண்டபம் என்று மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. ஆனால், அருகில் இன்னொரு சிறிய கோவிலைக் கண்டிக் கொண்டு மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அங்கு தான் கிருஷ்ணர் ருக்மணியைத் திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரு இடமும் உள்ளது. அதனால், ஒவ்வொரு வருடமும், இங்கு மார்ச்-ஏப்ரல் காலத்தில் மிகப்பெரிய திருவிழா நடக்கிறது. லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். எப்படி கிருஷ்ணர் ரதத்தில் ருக்மணியை அபகரித்துக் கொண்டு வந்தாரோ, அதேபோல, செய்து காட்டுகிறார்கள்.
அருகிலுள்ள விமான நிலையம் : ஜாம்நகர், போர்பந்தர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : துவாரகை
பேருந்து வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை