குக்கி சுப்ரமணியசுவாமி கோயில், கர்நாடகா
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், மங்களூர் அருகே உள்ள தட்சின கர்நாடக மாவட்டத்தில், சுல்லியா வட்டத்தில், அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் இக்கோயிலை குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில் என்று அழைக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமார மலையில் அழகான குக்கி சுப்ரமண்யா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில், சேஷமலை அமைந்துள்ளது.
மூலவர் : குக்கி சுப்ரமண்யர்
தீர்த்தம் : குமாரதாரா
தல சிறப்புகள் : முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் மூலவரான முருகனை அனைத்து நாகர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். கருடனுக்கு அஞ்சிய நாகர்களின் குலத்திற்கு தலைவியான வாசுகி உட்பட அனைத்து நாகர்கள் இவ்விடத்தில் குடிகொண்டுள்ள சுப்பிரமணியசுவாமியைப் புகலிடமாகக் கொண்டுள்ளனர்.
பக்தர்கள் கோயிலுக்குச் செல்வதற்கு முன், கோயிலுக்கு அருகில் ஓடும் குமாரதாரா எனும் நதியில் புனித நீராடிவிட்டு குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும். மேலும் கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே உள்ள கருடனின் வெள்ளித்தூணை வலம் வந்து, வெள்ளித்தூணில் பொதிந்துள்ள கருடனை வழிபட்டால் சர்ப்பங்கள் வெளிவிடும் விஷத்தை எதிர்கொள்ள முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. டிசம்பர் மாதத்தில் இக்கோயிலில் மூலவரை பூசை செய்யும் நம்பூதிரிகள், வாழை இலைகளில் விருந்து உணவு உண்டபின், அந்த வாழை இலைகளை வரிசையாக பரப்பி அதன் மேல் அங்கப்பிரதட்சனம் செய்தால் நன்மை பயக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
தல வரலாறு : சுப்பிரமணியசுவாமி, தாருகாசூரன், சூரபதுமன் மற்றும் மற்ற கொடிய அசுரர்களைப் போரில் வென்று கொன்ற பின்பு, சுப்பிரமணியசுவாமி, கணபதி மற்றும் மற்றவர்களுடன், இக்குமாரமலையில் தங்கினார்கள். அப்போது தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள் சுப்பிரமணியசுவாமியை மகிழ்ந்து வரவேற்றனர். இந்திரனின் மகளான தேவசேனாவை, சுப்பிரமணிய சுவாமிக்கு திருமணம் செய்து கொடுக்க இந்திரன் விரும்பினான். இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்ற, சுப்பிரமணியசுவாமி தேவசேனாவை மணந்தார். இத்தேவ திருமணம், குமாரமலையில் நடந்தது. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் மற்றும் இதர தேவர்கள் எழுந்தருளி, தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமிக்கு மங்கல வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அன்று முதல் தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமி இங்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.
காசியப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது. வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின. சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி, “எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான்” என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்தன. இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது. இந்த நதி தற்போது கர்நாடகத்தில் ஓடுகிறது. அந்த நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ஊரின் பெயரே “சுப்ரமண்யா” என்பதுதான். சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், “குக்குட த்வஜ கந்தஸ்வாமி” என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில், சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர். தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது “குக்கி சுப்ரமண்யா” கோயிலாகும். இது பல யுகம் கண்ட கோயிலாகும்.
கந்தபுராணத்தில் “தீர்த்த க்ஷேத்ரா மகிமணிரூபணா” அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள குமாரமலைப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை தன்னகத்தே அடக்கியது இம்மலை. முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின், தனது வேலில் படிந்திருந்த இரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.
சமஸ்கிருதத்தில் இத்தலம் “குக்ஷி” என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் “குக்கி சுப்ரமண்யா” என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகார ஈசான மூலையில் உள்ளது. நாக தோஷ பரிகார தலம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்ப்பகத்தி தோஷம், காலசர்ப்ப தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜையும், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வேலை வாய்ப்பு வேண்டுபவர்களுக்கு பூஜையும் நடத்தப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் மூன்று நாட்கள், குமாரதார ஆற்றில் புனித நீராடி முருகனை வழிபடுதல் சிறப்பாகும். குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் சர்ப்ப சம்கார பூசை எனும் நாக தோச நிவர்த்தி பரிகார பூசை சிறப்பான பூசையாகும். மேலும் அஸ்லேஷா நட்சத்திர நாளில் செய்யப்படும் நாகதோச நிவர்த்தி பரிகார பூசை சிறப்பாக நடைபெறுகிறது.
திருவிழாக்கள் : கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் மகாசிவராத்திரி.
குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில், மங்களுரிலிருந்து 105 கி. மீ., தூரத்திலும், பெங்களூரிலிருந்து 317 கி. மீ., தூரத்திலும் உள்ளது. புகைவண்டி, பேருந்து, சிற்றுந்து மற்றும் வாடகை வண்டிகள் மூலம் எளிதல் அடையலாம். மேலும் பெங்களூர்-மங்களூர் புகைவண்டித் தடத்தில் அமைந்துள்ள சுப்ரமண்யா ரோடு புகைவண்டி நிலையத்திலிருந்து 15 நிமிட நேர பயணத்தில் கோயிலை அடையலாம்.
திருக்கோவில் காலை 6.00 மணி முதல் மதியம் 1.30 வரையிலும் மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : பெங்களூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : சுப்ரமண்யா ரோடு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு